காவ்யா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் சரவணன் பழனியப்பன் தயாரிக்கும் முதல் திரைப்படம் ‘ஜுலை காற்றில்…’. இந்த படத்தில் அனந்த் நாக், அஞ்சுகுரியன், சம்யுக்தா மேனன், சதீஷ், பலோமா மோனப்பா என பலர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு கதை திரைக்கதை அமைத்து இயக்குநராக அறிமுகமாகிறார் கே சி சுந்தரம்.இவர் மறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைக்க, டிமேல் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். அனுசரண் படத்தொகுப்பை கவனிக்க, ஜெயக்குமார் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். நா முத்துக்குமார், கபிலன் வைரமுத்து, ரோஹிணி மற்றும் சௌந்தரராஜன் ஆகியோர் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். விஷ்வகிரண் நம்பி மற்றும் ஸ்ரீசெல்வி ஆகியோர் நடனம் அமைத்திருக்கிறார்கள்.
படத்தைப் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது,‘இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் காதல் பற்றிய பார்வையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் இளமையில் ஏற்படும் காதல் தொடர்பான உறவுகளுக்குள் பிரிவையும் எதிர்கொள்கிறார்கள். புதிய உறவையும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். காதலர்கள் தங்களுக்குள் ஏற்படும் விரிசலையும், உரசலையும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை சுவராசியமாக தயாராகியிருக்கிறது ‘ஜுலை காற்றில்’.
இந்த படத்தில் நேரம், பிரேமம், அமர காவியம், வெற்றிவேல் ஆகிய படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்த அனந்த நாக், கதையின் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக அஞ்சுகுரியன் மற்றும் சம்யுக்தா மேனன் ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள்.
இதன் படபிடிப்பை சென்னை, கோத்தகிரி, இலங்கை மற்றும் போர்க்சுகல் ஆகிய இடங்களில் நடத்தியிருக்கிறோம். விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸரை வெளியிடவிருக்கிறோம்.’ என்றார்.
படத்தில் நடித்திருக்கும் நடிகை அஞ்சுகுரியன் அண்மையில் வெளியான சென்னை டூ சிங்கப்பூர் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் என்பதும், மற்றொரு நடிகையான சம்யுக்தா மேனன் இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் கே சி சுந்தரம் மறைந்த இயக்குநர் ஜீவாவின் இயக்கத்தில் உருவான ‘உன்னாலே உன்னாலே ’ மற்றும் ‘தாம் தூம் ’ ஆகிய படங்களில் உதவியாளராக பணியாற்றியிருக்கிறார். காதல் கதைகளை ரசிகர்கள் விரும்பும் வகையில் சொல்வதில் வல்லவரான ஜீவாவின் உதவியாளர் என்பதால், அவரது இயக்கத்தில் தயாராகும் ‘ஜுலை காற்றில்..’ படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.