‘கிராமசபைக் கூட்டங்களில் புகையிலைக்கு தடை கோரி தீர்மானம் நிறைவேற்றுங்கள்!’ – அன்புமணி ராமதாஸ்

இந்திய விடுதலை நாளையொட்டி, வரும் 15-ஆம் தேதி புதன்கிழமை தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி மன்றங்களில் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. மக்களின் குரலை ஒலிப்பதற்கான இக்கூட்டங்களில் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து தீர்மானம் இயற்றப்பட வேண்டும். என்று முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்..

‘தமிழ்நாட்டு மக்களைப் பீடித்துள்ள இரு தீமைகள் மதுவும், புகையும் தான். மதுவால் ஒவ்வொரு ஆண்டும் 18 லட்சம் பேர் தங்கள் உயிர்களை இழக்கிறார்கள் என்றால், புகையால் ஆண்டுதோறும் 12 லட்சம் பேர் உயிரிழப்பதாக ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன. மதுவால் ஏற்படும் பாதிப்புகளை விட புகையால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம் என அண்மைக்கால ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. உலக சுகாதார அமைப்பின் ஆதரவுடன் நடத்தப்பட்ட உலக அளவிலான வயதுவந்தோர் புகையிலைப் பயன்பாட்டு ஆய்வு முடிவில் இந்தியாவில் புகையிலையின் பயன்பாடு குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் புகையிலைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் புகையிலைப் பயன்பாடு 2009-10 ஆம் ஆண்டின் அளவான 16.20 விழுக்காட்டிலிருந்து நான்கில் ஒரு பங்கு அதிகரித்து 2016-17ஆம் ஆண்டில் 20.00% ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் புகையிலைப் பொருட்களின் பயன்பாடு கர்நாடக மாநிலத்தில் 28.2 விழுக்காட்டிலிருந்து 22.80% ஆகவும், கேரளத்தில் 21.40 விழுக்காட்டிலிருந்து 12.70% ஆகவும் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நேரடியாக புகைப்பிடிப்பதால் பாதிக்கப்படுபவர்கள் ஒருபுறம் இருக்க மற்றவர்கள் புகைத்து விடும் புகையை சுவாசிப்பதால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் பணியிடங்களில் 20.20 விழுக்காட்டினரும், பொது இடங்களில் 18.70 விழுக்காட்டினரும் மற்றவர்கள் விடும் புகையால் பாதிக்கப்படுவதாக இந்தக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இதைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது பொது இடங்களில் புகைப் பிடிப்பதை தடை செய்தேன். ஆனால், அதற்கான சட்டத்தை அரசு முறையாக செயல்படுத்தாததால் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டு புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகி அவதிப்படுகின்றனர்.

தமிழ்நாட்டில் அனைத்து நிலைக் கடைகளிலும் புகையிலைப் பொருட்களும், சிகரெட்டுகளும் தடையின்றி கிடைக்கின்றன. புகைப்பிடிப்போரில் 81.10 விழுக்காட்டினர் கடைகளில் தான் சிகரெட் வாங்குகின்றனர். சிகரெட் புகைப்பவர்கள் அதற்காக மாதம்தோறும் சராசரியாக ரூ.1344 செலவிடுகின்றனர். அதுமட்டுமின்றி, பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் சிகரெட் தாராளமாக கிடைப்பதால், புகைக்கும் பழக்கத்திற்கு மாணவர்கள் எளிதில் அடிமையாகின்றனர். இப்போக்கு எதிர்காலத் தலைமுறையை அழித்துவிடக்கூடும்.

புகைக்கும் புகையிலையை விட மெல்லும் புகையிலை தான் மிகவும் கொடுமையானதாகும். குறிப்பாக குட்கா எனப்படும் புகையிலைப் பாக்கு தான் வாய்ப்புற்றுநோய்க்கு முக்கியக் காரணமாகும். இதை தடை செய்வதற்கான சட்டத்தை தேசிய அளவில் நான் கொண்டு வந்தேன். அதன்படி தமிழகத்திலும் குட்கா தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், மக்களின் உயிரைக் காக்க வேண்டிய சுகாதாரத்துறை அமைச்சரே கையூட்டு வாங்கிக் கொண்டு குட்கா விற்க அனுமதிக்கும் அவலம் தமிழகத்தில் நிலவுகிறது.

சிகரெட், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களால் ஏற்படும் தீமையைக் கட்டுப்படுத்த சட்டங்கள் கொண்டு வரப்பட்ட பிறகும் அதை ஆட்சியாளர்கள் மதிக்காதது கண்டிக்கத்தக்கது. இத்தகைய சூழலில் புகையிலை உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிப்பது தான் ஒரே தீர்வாக இருக்கும். இதனால் ஏராளமானவர்கள் வேலையிழக்கக்கூடும் என்றாலும் அப்பாவி மக்களின் உயிரைக் காப்பாற்ற இது மட்டும் தான் தீர்வாகும். இந்த கடுமையான முடிவை அரசு எடுத்துதான் தீர வேண்டும்.

எனவே, ஆகஸ்ட் 15-ஆம் தேதி விடுதலை நாளையொட்டி நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சியினரும், பொதுமக்களும் அதிக அளவில் கலந்து கொண்டு நாடு முழுவதும் புகையிலை மற்றும் புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதை ஏற்று நாடு முழுவதும் புகையிலைக்கு தடை விதிக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.