‘சீயான்’ விக்ரம் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம் – பிரபு

‘தமீன்ஸ் பிலிம்ஸ்’ சார்பில் ஷிபு தமீன் தயாரித்திருக்கும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

இவ்விழாவில் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன், பைனான்சியர் அன்புசெழியன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடிகர்கள் டெல்லி கணேஷ், பிரபு, இமான் அண்ணாச்சி, ஓ ஏ கே சுந்தர், சூரி, ரமேஷ்கண்ணா, நடிகைகள் சுமித்ரா, உமா ரியாஸ், ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ், நடன இயக்குநர் பாபா பாஸ்கர், சண்டை பயிற்சி இயக்குநர் சில்வா, பாடலாசிரியர் விவேகா இவர்களுடன் இயக்குநர் ஹரி, சீயான் விக்ரம், தயாரிப்பாளர் ஷிபு தமீன், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசுகையில்,‘ இயக்குனர் ஹரி எங்கள் கம்பெனியில் மூன்று படங்களை இயக்கியிருக்கிறார். ஒவ்வொரு படத்திற்கும் அசுரத்தனமாக உழைப்பவர். அதற்கேற்ப வெற்றியையும் கொடுப்பவர். நான் மிகவும் நேசித்த கமர்சியல் படங்களில் சாமியும் ஒன்று. அதன் இரண்டாம் பாகம் தற்போது வெளியாவதில் சந்தோஷம். இதுபோன்ற மாஸ் படத்திற்காக விக்ரம் ரசிகர்களுடன் நானும் காத்திருக்கிறேன்.’ என்றார்.

நடிகர் சூரி பேசுகையில்,‘ இந்த தருணத்தில் ஒளிப்பதிவாளர் ப்ரியன் இல்லாததிருப்பது வருத்தமான விசயமாக இருக்கிறது. தேவி ஸ்ரீபிரசாத் பாதி நேரம் ஸ்டூடியோவிலும், பாதி நேரம் ஜிம்மிலும் இருக்கிறார். விரைவில் கதாநாயகனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கிறேன். தமிழ் சினிமாவில் தற்போது உதவி இயக்குநர்கள் கதை விவாதத்தின் போது வைட் ஷாட், குளோஸ் ஷாட் என்பதைப் போல் ‘ஹரி சார் ஷாட் ’என்று ஒரு விசயத்தைப் பற்றி பேசுகிறார்கள். டைரக்டர் ஹரி சாரோட பரபரப்பு தமிழ் நடிகர்கள் மட்டுமல்லாமல் டெல்லியில் உள்ள ஹிந்தி நடிகர்களும் தொற்றிக்கொண்டதை நான் உடனிருந்து கவனித்து சந்தோஷப்பட்டேன்.

நடிகர் பிரபு பேசுகையில்,‘ அப்பாவுடன் சிறிய வயதில் இருந்தே நான் பயணித்திருக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் வித்தியாசமாக நடிக்கவேண்டும் என்ற தேடல் இருப்பதை கவனித்திருக்கிறேன். உடலை ஏற்றுவார். இறக்குவார். குரலை மாற்றுவார். அதே போல் கமல்ஹாசனிடத்திலும் அந்த ஆர்வம் இருப்பதை கண்கூடாக கண்டிருக்கிறேன். அந்த பாதையில் என்னுடைய அருமைத்தம்பி சீயான் விக்ரமும் பயணிக்கிறார். அவருடன் ராவணா, கந்தசாமி அதைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தில் நடித்திருக்கிறேன். அவருடன் நடிக்கும் போது நான் உணர்ந்த ஒரு விசயம் என்னவெனில், அவர் நம் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம்.’ என்றார்.