KNR மூவிஸ் சார்பில் திரு.ராஜா தயாரித்துள்ள படம் ‘பொறுக்கிஸ்’. பொறுக்கிஸ்க்கு கீழே ’அல்ல நாங்கள்’ என்ற சப் டைட்டிலும் இடம் பெற்றுள்ளது. பிசாசு, சவரக்கத்தி படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மஞ்சுநாத்.S ‘பொறுக்கிஸ்’ படத்தின் மூலம் இயக்குநராக மாறியுள்ளார். படத்தின் தயாரிப்பாளர் ராஜாவே கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக லவனிகா நடித்துள்ளார். கதையின் மையத் தூணாக ராதாரவி நடித்துள்ளார். ரவிவர்மா இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினருடன் நடிகரும் முன்னாள் பாராளமன்ற உறுப்பினருமான ஜே.கே.ரித்தீஷ், இயக்குநர் கரு.பழனியப்பன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்..
இயக்குநர் மஞ்சுநாத் பேசும்போது, ” நமது தமிழகத்தின் ஆதிக் கலையான கூத்துக் கலையையும், அந்த கூத்துக் கலையை நமக்கு தற்போதும் கொண்டுவந்து சேர்ப்பவர்களின் இப்போதைய வாழ்வியல் நிலையையும் அவர்களது இன்ப துன்பம் பற்றிய அலசலாகத் தான் இந்த படம் உருவாகியுள்ளது.
அது மட்டுமல்ல படத்தில் விவசாயப் பிரச்சனையை கையில் எடுத்திருக்கிறோம். நாமும் மாறவேண்டும் என்கிற தீர்வையும் சொல்லியிருக்கிறோம். அதேசமயம் எதையுமே அறிவுரையாக சொல்லவில்லை.
தவிர, இன்றைய சமுதாயத்தையே அழித்துக்கொண்டிருக்கும் மதுவை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு பற்றி இந்த படத்தில் நாங்கள் பேசியிருக்கிறோம். இந்த படத்திற்கு முதலில் பொறுக்கிஸ் என்று தான் பெயர் வைத்தோம். கொஞ்ச நாளைக்கு முன்பு சுப்ரமணியசாமி தமிழர்களை பொறுக்கிஸ் என அழைத்தார்.. அந்த கோபத்தில் தான் இந்த டைட்டிலை வைத்தோம்.. ஆனால், ராதாரவி சார் தான் எங்களை அழைத்து, பொறுக்கிஸ் அல்ல நாங்கள் என டைட்டில் வைக்க சொன்னார்.. அவரது வேண்டுகோளை ஏற்று டைட்டிலை மாற்றினோம்” எனக் கூறினார்
இயக்குநர் கருபழனியப்பன் பேசும்போது, “என் படம் தான் காவியம், சூப்பராக எடுத்திருக்கிறோம் என பலர் தங்கள் படத்தைப் பற்றி பீற்றிக்கொள்ளும் இந்த காலத்தில் ஏதோ ஒரு படம் எடுத்திருக்கிறோம் என எளிமையாக ஒரு தகவலாக சொல்லும் இயக்குநர் மஞ்சுநாத்தை ஆச்சர்யமாகப் பார்க்கிறேன்.
நமக்கு கிடைக்கும் மேடைகளில், நாம் கூடும் பொது இடங்களில் சமூகத்தின் மீதான அதிருப்தியை நாம் எப்போதும் வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இதோ பியூஸ் மனுஷ் போன்றவர்கள் அப்படி வெளிப்படுத்தியதால் தான் இப்போது ஒவ்வொரு ஊருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போடுவதற்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள். என்னைக் கேட்டால், மாணவர்கள் பஸ் பாஸ் எடுப்பது போல பியூஸ் மனுஷூம் ஒரு பஸ் பாஸ் எடுத்துக் கொண்டால் எல்லா ஊர்களுக்கும் கையெழுத்துப் போட போய்வருவதற்கு மிகச் சுலபமாக இருக்கும்.
முன்பெல்லாம் ஒருவரை பிடிக்காவிட்டால் முதலில் கரண்ட்டை கட் பண்ணுவார்கள். இப்போது லேட்டஸ்ட்டாக இன்டர்நெட்டை கட் பண்ணுகிறார்கள். இப்பொழுது மஞ்சுநாத்தைப் போல, ராதாரவி, சுரேஷ் காமாட்சி, பியூஸ் மனுஷ் போன்றவர்களைப்போல தங்களுடைய சமூக அதிருப்திகளை கடுமையான வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார்களே, அவர்கள் கூறுவதையும் கேட்டுக்கொண்டு, அதற்கேற்ப தங்களது ஆட்சி செய்யும் அரசாங்கம் தான் மக்களின் விருப்பமான அரசாங்கமாக இருக்கமுடியும்.. இந்த அரசாங்கம் மக்களின் விருப்பமான அரசாங்கமா என்பதை நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள். இப்படி ஒரு படம் எடுத்ததற்காக மஞ்சுநாத்துக்கு எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன், என்று கூறினார்.
சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் பேசும்போது, ” ஒருவகையில் நங்கள் பொறுக்கிஸ் தான்.. அரசாங்கம் போடுற குப்பையை அள்ளிக்கிட்டு இருக்கிறோம்.. ரிலையன்ஸ் போடுற பிளாஸ்டிக்கை பொறுக்கிட்டு இருக்கிறோம்.. ஸ்டெர்லைட் ஆசிட் கழிவுகளை உள்ளுக்குள்ள ஊத்திக்கிட்டு இருக்கிறோம். லேட்டஸ்ட்டா ஹெச்.ராஜா, அர்ஜுன் சம்பத் போன்றவர்கள் வார்த்தைகளில் எடுக்கும் வாந்தியையும் பிடித்துக்கொண்டு இருக்கிறோம்.
தமிழ்நாட்டை ஒரு பரிசோதனை சாலையாக பயன்படுத்தி வேட்டையாடிக்கொண்டு இருக்கிறார்கள். நமது முதல்வருக்கு மக்களை துன்புறுத்துவதில் விருப்பம் இல்லை.. மத்திய அரசின் அழுத்தத்தால் துன்பப்பட்டுக்கொண்டு இருக்கிறார்.. அவர் கவலைப்பட தேவையில்லை.. அவரது துன்பங்களையும் நாங்கள் பொறுக்கி விடுவோம். உங்களை அன்றாடம் பாதிக்கும் விஷயங்கள் குறித்து அஞ்சு வரிகளில் ஒரு கடிதம் எழுதி பிரதமர், முதல்வர், கலெக்டர் என அனைவருக்கும் தினசரி தொடர்ந்து அனுப்புங்கள்.. நிச்சயமாக அதன்மூலம் மாற்றம் வரும்” எனக் கூறினார்.
நடிகர் ராதாரவி படக்குழுவை பாராட்டி பேசும்போது, “இந்தக் குடும்பத்தில் நானும் ஒருவன்.. மலேசியாவில் எனது நண்பர் ஒருவர் சொந்தப் படம் எடுக்கிறேன் எனக் கூறியபோது மஞ்சுநாத்தை அழைத்துச் சென்று கேமராமேனாக அறிமுகம் செய்துவைத்தேன்.. மற்றபடி இப்போதுவரை அவரது சுய உழைப்பு தான்.. மஞ்சுநாத் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் புரட்சிகரமான கருத்துக்களை கொண்டவர்.
இந்தப்படத்தில் பாடியுள்ள பாடகர் ஆலயமணியை எனக்கு பிடிக்கும். இன்றைக்கு யார் யாரோ பாடும்போது, முன்னணி நடிகர்கள் எல்லாம் பாடும்போது, அவர்களைவிட, ஆலயமணி நன்றாக பாடக்கூடியவர்.. எனக்கு பாட வராது.. அதனாலேயே அவரைப் பிடிக்கும்..
பியூஸ் மனுஷ் இந்த விழாவில் கலந்துகொள்கிறார் என்றதுமே பயந்தேன்.. காரணம் அவர் எப்போதும் வாரண்ட்டோடு சுற்றுபவர்.. அவருக்கும் எப்போதுமே பொதுவுடமை எண்ணம்.. அதனால் நம்மையும் வாரண்ட்டோடு சுற்ற வைத்து விடுவாரோ என்றும் அரசியல் மேடை போல இது ஆகிவிடுமோ என்றும் பயந்தேன்.. காரணம் சென்சாரில் பிரச்னையில்லாமல் தப்பிக்கவேண்டுமே என்பதுதான்.
இது அரசாங்கத்தை அட்டாக் பண்ணுகிற படமே அல்ல.. அரசாங்கத்தில் உள்ள குறைகளைப் பற்றி சொல்லும் படம் இந்த விழாவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசரை அழைத்திருந்தேன்.. முதலில் வருகிறேன் எனச் சொன்னவர், பின் எதனாலோ வராமல் பின்வாங்கிவிட்டார். ஒருவேளை இங்கு வருபவர்களின் பட்டியலைப் பார்த்திருப்பாரோ என்னவோ..?” என்றார் நகைச்சுவையாக.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, “இன்றைய சூழலில் கார்ப்பரேட் ஆதிக்கத்தினால், விளைநிலங்களில் வீடுகளை கட்டிவிட்டு உணவுகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் காலத்தில், அப்படி ஒரு டிஜிட்டல் இந்தியாவில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த காலத்தில் விவசாயத்தின் பெருமைகளை மிகத் தைரியமாகக் கூற ஒரு இயக்குநர் வந்திருக்கிறார் என்கிறபோது மிகவும் பெருமையாக இருக்கிறது.
சினிமாக்காரர்களிடம் சமூகப் பொறுப்பு இல்லை என்று சமீபகாலமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சினிமாக்காரர்களுக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிறது என்பதை நிருபிக்க வந்த இயக்குநருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
இப்படிப்பட்ட கருத்துகளை சொல்வதினால் எங்களை சமூகவிரோதிகள் , பொறுக்கிகள் என்று சொன்னாலும் சரி அதை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். இப்படிப்பட்ட கருத்துக்களை சொல்ல தைரியம் வேண்டும். இதற்கு ராதாரவியை தேர்ந்தெடுத்தது மிகவும் சரியான ஒன்று.
படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போதே நிறைய அரசியல் இருப்பது தெரிகிறது. ராதாவி சார் சும்மாவே ஆடுவார்.. அவருக்கு சலங்கையும் கட்டி ஆடவிட்டால் கேட்கணுமா..? நாம வீட்டுக்குள்ளேயே இருந்துகொண்டு போராளிகள் எனச் சொல்லிக்கொண்டு இருக்கக் கூடாது. இந்த மாதிரி கருத்துக்களை தைரியமாக தெரிவிக்க நிறைய சினிமாக்காரர்கள் முன்வரவேண்டும்.
இன்று தமிழ் சினிமாவில் பத்து சதவீதம் தான் பெரிய படங்கள் வருகின்றன. மீதி 90 சதவீதம் சிறிய படங்கள் தான்.. ஆனால் இந்த சின்ன படங்களை வைத்துதான் இன்று சினிமாத் துறையே இயங்கிக்கொண்டு இருக்கிறது. இவங்க, எல்லோரையும் வாழவைக்கும் ஏணியா இருந்துட்டு, இவங்க மட்டும் இன்னமும் அதே இடத்துல இருந்துட்டு இருக்காங்க..இவங்களை ஏற்றிவிட ஊடகங்களின் ஆதரவு வேண்டும்” என வேண்டுகோளுடன் முடித்தார்.
ஜே.கே.ரித்தீஷ் பேசும்போது, “ராதாரவியின் அழைப்பை ஏற்றுத்தான் இந்த விழாவுக்கு வந்துள்ளேன். எப்போதுமே சிறிய படங்களும், புதிய நடிகர்களும் வெற்றி பெறவேண்டும் என நினைப்பவன்.மீண்டும் நடிகர் சங்க தேர்தலில் வெற்றிபெற்று நாங்கள் பொறுப்புக்கு வருவோம்.. இந்தப் படத்தில் பாடிய ஆலயமணிக்கு குறைந்தது பத்து படங்களிலாவது நான் வாய்ப்பு வாங்கித்தருவேன்” எனக் கூறினார்.
விழாவினை ஆர் ஜே ரொஃபினா தொகுத்து வழங்கினார்.