‘சேலம் RR அன்பு’ பிரியாணிக் கடை ஊழியர்கள் மீது தாக்குதல் – ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை விருகம்பாக்கத்தில், ‘சேலம் RR அன்பு’ பிரியாணிக் கடை நடத்தி வருபவர் தமிழ்ச்செல்வன். அவரது தம்பி பிரகாஷ் இந்தக்கடையை நிர்வகித்து வருகிறார். கடந்த 28-ந் தேதி இரவு வழக்கம்போல வியாபாரத்தை முடித்து விட்டு கணக்கு பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியைச்சேர்ந்த திமுக. நிர்வாகி யுவராஜ் உள்ளிட்ட சிலர் வந்து பிரியாணிக் கேட்டுள்ளனர். அதற்கு கடை ஊழியர்கள் பிரியாணி தீர்ந்துவிட்டததாக கூறியிருக்கின்றனர்.

பிரியாணி தீர்ந்து போய் விட்டது என்றால் எதற்காக கடையை திறந்து வைத்துள்ளீர்கள் எனக்கூறியவாரே  ஊழியர்களுடன் குத்துச்சண்டை பாணியில் திமுக.நிர்வாகி யுவராஜ் தனது ஆதரவாளர்களுடன் கடையின் நிர்வாகி பிரகாஷ், ஊழியர்கள் நாகராஜன், கருணாநிதி ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளார். ஊழியர்களின் முகத்தில் குத்திய சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

இவர்கள் மீது விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் யுவராஜ் உள்ளிட்டவர்கள் மீது கொலை மிரட்டல், தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் யுவராஜ், திவாகரன் மீது திமுக தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. திமுகவின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..,

‘சென்னை தெற்கு மாவட்டம் விருகம்பாக்கம் வடக்குப் பகுதியைச் சேர்ந்த யுவராஜ், திவாகரன் ஆகியோர் திமுகவின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகிறார்கள். என குறிப்பிடபட்டுள்ளது.

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘கடை ஊழியர்களை தாக்கியது கண்டனத்திற்குறியது கட்சிக் கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.’