தமிழகத்தில் நான்கரை லட்சம் லாரிகள் முடங்கின!

ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வந்து, அவற்றின் விலையை குறைக்கவும், மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டண உயர்வை திரும்ப பெறவும், ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும்  என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள்  இன்று முதல் நாடு முழுவதும் கலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தில் சமையல் எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்களும் பங்கு பெறுவதாக அறிவித்துள்ளனர்.

இதனால் தமிழகத்தில் சுமார்  நான்கரை லட்சம் லாரிகள் ஓடவில்லை என தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  தூத்துக்குடியில்  மட்டும் சுமார் 4 ஆயிரம் லாரிகள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன. இதனால் துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதிப் பணிகள் முற்றிலும் முடங்கி உள்ளன. இந்த வேலை நிறுத்தம் காரணமாக நாளொன்றுக்கு பல கோடி ரூபாய் வர்த்தக இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயமும் உருவாகியுள்ளது.