பிரமாண்டமான ‘இசையராஜா-75’ இசைவிழா

1000 திரைப்படங்களுக்கு மேலும், 5000-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தும், 500-க்கும் மேற்பட்ட பாடல்களை தனது சொந்த குரலில் பாடியும் 5-முறை தேசிய விருதுகளை பெற்று திரையுலகில் இன்றும் மாபெரும் சாதனை படைத்துக்கொண்டிருப்பவர் இசைஞானி திரு.இளையராஜா. அவருக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக இசையராஜா-75 என்ற பெயரில் அவரை கௌரவிக்கும் பொருட்டு இந்திய அளவில் பிரமாண்டமான இசைவிழாவை வெகு சிறப்பாக நடத்த இருப்பதாக தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விழாவானது, 2019-பிப்ரவரி மாதம் 2-3ம் தேதிகளில் சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரையுலகில் உள்ள அனைத்து முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் திரு.இளையராஜா அவர்களுடன் பணிபுரிந்த இயக்குனர் கள், இசை கலைஞர்கள் பங்கு பெற்று அவருக்கு பெருமை சேர்க்க இருக்கிறார்கள்.

இதற்காக பிப்ரவரி 2-3 தேதிகளில் நடைபெறவிருந்த அனைத்து படப்பிடிப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு தமிழ்த் திரையுலகின் சார்பாக அனைவரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுமாய் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக கேட்டுக் கொண்டுள்ளது.