தமிழகத்தில் மதுவினால் நிகழும் பல்வேறு கொடுமைகளுக்கும் குற்றங்களுக்கும் சீரழிவிற்கும் பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். பொதுமக்களே டாஸ்மாக் கடைகளுக்கு முன் போராடி பல கடைகளை மூடியிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் முதல் எதிரியாக மது மாறிக்கொண்டிருக்கிறது. இந்த அசாதாரண சூழலை மையமாகக் கொண்டு கவிஞரும் எழுத்தாளருமான கபிலன்வைரமுத்து ஒரு தனிப்பாடலை உருவாக்கியிருக்கிறார். இந்தப் பாடலை டி.ராஜேந்தர் பாடியிருக்கிறார்.
கடந்த ஆண்டு வெளிவந்த ‘கவண்’ திரைப்பட வசனம் மூலம் இணைந்த டி.ராஜேந்தர்-கபிலன்வைரமுத்து கூட்டணி தற்போது இந்தத் தனிப்பாடலுக்காக மீண்டும் இணைகிறார்கள். சமீபத்தில் வெளிவந்த கஜினிகாந்த் திரைப்படத்திற்கு இசை அமைத்த பாலமுரளி பாலு இப்பாடலுக்கு இசை அமைக்கிறார். கடந்த ஆண்டு கபிலன்வைரமுத்து வரிகளில் நடிகர் சிலம்பரசன் பாடிய பணமதிப்பிழப்புப் பாடலுக்கும் (demonetization anthem) பாலமுரளிதான் இசை அமைத்திருந்தார். மதுக் கலாச்சாரத்திற்கு எதிரான இந்தத் தனிப்பாடலின் தலைப்பு, வெளியாகும் தேதி என்று பல்வேறு தகவல்களை கபிலன் குழு ஒரு காணொளியாக வெளியிடவிருக்கிறார்கள்.பாடலைக் காட்சிப்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். டிவோ (divo) நிறுவனத்தின் தளத்தில் இந்தப் பாடல் வெளியாகவிருக்கிறது.