’மறக்குமா நெஞ்சம்’ – விமர்சனம்!

ரக்‌ஷன், மலீனா, தீனா, ராகுல், ஸ்வேதா வேணுகோபால், முத்தழகன், மெல்வின் டென்னிஸ், முனீஷ்காந்த், அருண் குரியன், அகிலா, ஆஷிகா காதர், நடாலி லூர்துஸ் விஸ்வத் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளியாகியிருக்கும் படம், மறக்குமா நெஞ்சம். இப்படத்தினை இயக்கியிருக்கிறார், ராக்கோ.யோகேந்திரன்.

கன்னியாகுமரியில் உள்ள தனியார் பள்ளியில் படித்தவர், ரக்‌ஷன். 10 வருடங்கள் கடந்த நிலையில், அந்த பள்ளிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், ரக்‌ஷனுடன் படித்த, 12 ஆம் வகுப்பு பொது தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களது தேர்வு செல்லாது. என, நீதி மன்றம் தீர்ப்பளிக்கிறது. அதோடு மீண்டும் அவர்கள் தேர்வு எழுதி, அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே தகுதியுடையவர்களாக அங்கீகாரம் செய்யப்படுவர் என தீர்ப்பளிக்கிறது. இதனை தொடர்ந்து, ரக்‌ஷனுடன் படித்த அனைவரும் மீண்டும் அதே பள்ளியில் தேர்வு எழுத வருகின்றனர். அந்தப் பள்ளியிலேயே அவர்களுக்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

இந்த சந்தர்ப்பத்தில் ரக்‌ஷன், தன்னுடன் படித்த மாணவி மலினாவிடம் பள்ளிக்காலத்தில் சொல்லமுடியாமல் போன தனது காதலை, சொல்ல முயற்சிக்கிறார். வேறு ஒருவருடன் நிச்சயிக்கப்பட்ட மலினா, என்ன முடிவெடுத்தார். என்பதே, மறக்குமா நெஞ்சம் படத்தின் கதை, திரைக்கதை.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் ரக்‌ஷன், பள்ளி பருவத்தில் விடலை வாலிபனாகவும், இளைஞராகவும், மாறுபட்ட நடிப்பை கொடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், அது முடியவில்லை. ஒரு சில காட்சிகளில் கவனிக்கும்படியும் நடித்துள்ளார்.

நாயகி நடித்திருக்கும் மலினா, அழகாக இருக்கிறார். நடிப்பினை பொறுத்தவரை, ஓகே தான். குறை சொல்ல முடியவில்லை.

பள்ளிப் பருவ நகைச்சுவைக் காட்சிகள், ஒரு சில இடங்களில் மட்டுமே சிரிப்பினை வரவழைக்கிறது. அநேக காட்சிகள், அய்யோ… அய்யயோ…

வழ வழவென பேசும் தீனா, ஓவராக்டிங் செய்யும் பிராங் ஸ்டார் ராகுல், தவிர்த்து பள்ளி மாணவ, மாணவிகளாக நடித்திருக்கும் ஸ்வேதா, முத்தழகன், மெல்வின் டெனிஸ், அருண் குரியன், ஆஷிகா காதர், விஷ்வத், நடாலியா ஆகியோரும், பி.டி மாஸ்டராக நடித்திருக்கும் முனீஷ்காந்த், மற்றும் ஆசிரியையாக நடித்திருக்கும் அகிலா போன்றோர்களும் ஓகேவான நடிப்பினை கொடுத்துள்ளனர்.

இயக்குநர் ராகோ யோகேந்திரன், 90ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கையை எதார்த்தமான முறையில் படமாக்க முயற்சித்திருக்கிறார். அவ்வளவே..!