‘ராக்கி’ : விமர்சனம்.

கேங்ஸ்டர் பாரதிராஜாவுக்கும் அவரிடம் வேலை செய்து வரும் வசந்த் ரவிக்கும் இடையே நடக்கும் ஒரு கொலை காரணமாக பெரிய பகை உருவாகிறது. இதனால் ஜெயிலுக்கு செல்கிறார் வசந்த் ரவி. பல ஆண்டுகள் கழித்து வெளியே வரும் அவரை கொலை செய்ய துடிக்கிறார் பாரதிராஜா. இதன் பிறகு நடக்கும் கொடூரக் கொலை சம்பவங்களே படத்தின் கதை.

வழக்கமாக பல திரைப்படங்களில் பார்த்த கொலைக்கு பழிக்குப் பழி வாங்கும் கதை தான் என்றாலும் வித்தியாசமாக படமாக்கியிருப்பதில் பிரம்மாதம் படுத்தியிருக்கிறார்கள்.

முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பாரதிராஜாவும் வசந்த் ரவியும் கண்களினாலேயே கொடூரத்தை காட்டியிருக்கிறார்கள். அதிலும் வசந்த் ரவி மிரட்டியிருக்கிறார். பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது. சைக்கோத்தனமான கொடூரக் கொலைகாரன்! ஒவ்வொரு கொலையின் போதும் அவருடைய முக பாவனைகள் நடப்பது நிஜமோ.. இது, என எண்ணத் தூண்டுகிறது. கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உள் வாங்கி நடித்திருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் பாரதிராஜா, ஒன்றிரண்டு  ரியாக்‌ஷன்கள் மூலமாக வில்லதனத்தை  வெகு சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். ஆர்பாட்டமில்லாத நடிப்பு. அசால்ட்டாக அவர் பேசும் வசனம் க்ளாப்ஸ் பெறுகிறது!

அடியாட்களாக நடித்திருப்பவர்கள் உள்ளிட்ட படத்தில் நடித்த அத்தனை பேரும் காது கேட்காத குழந்தை உட்பட நன்றாகவே நடித்திருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் காலகாலமாக நடந்து வந்த கொலைக்கு பழிக்குப் பழி சம்பவத்தினை ஹாலிவுட் பாணியிலான படமாக கொடுத்திருக்கிறார், இயக்குநர் அருண் மாதேஷ்வரன். இதற்கு ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஷ் கிருஷ்ணா, இசையமைப்பாளர் தர்புகா சிவா, இருவரும் கை கொடுத்து இருக்கிறார்கள். அதிலும் எடிட்டர் பங்கு நாகூரானின் பங்கு பெரியது. குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் பாராட்டும் படி உள்ளது.

பார்த்து சலித்த கதை தான் என்றாலும், திரைக்கதை நேர்த்தியாக சொல்லப்பட்ட விதத்தில் ரசிக்க வைக்கிறது. படம் துவங்கிய போது சற்று சோர்வை ஏற்படுத்தினாலும் அடுத்தடுத்த காட்சிகளால் சுவாரஷ்யம் ஏற்படுகிறது.

ரத்தம் தெறிக்கும் கொலைக் காட்சிகளை பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு, இந்தப்படம் ஹாலிவுட் தரத்திலான ஒரு தமிழ் படம் பார்த்த உணர்வினை ஏற்படுத்தும்.

மொத்தத்தில், ‘ராக்கி’ தமிழ் பேசும் ஆங்கிலப்படம்!