‘வாய்தா’ படத்தின் இசை வெளியீடு!

வராஹ ஸ்வாமி ஃபிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. வினோத்குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வாய்தா’. இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் ஓம் பிலிம்ஸ் வெளியிடுகிறது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில முன்னணி நிர்வாகிகளில் ஒருவரான சி. மகேந்திரன் அவர்களின் புதல்வன் புகழ் மகேந்திரன் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை பவுலின் ஜெசிகா நடித்திருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி நிர்வாகியான சி மகேந்திரன், தயாரிப்பாளர் சி. வி. குமார், படத்தின் தயாரிப்பாளர் கே. வினோத்குமார், இயக்குநர் மகிவர்மன், புதுமுக நாயகன் புகழ் மகேந்திரன், பாடலாசிரியர் உமாதேவி, படத்தின் ஆடியோவை வெளியிடும் உரிமை பெற்றிருக்கும் டிப்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதியான சரண்யா, படத்தின் நாயகி  பவுலின் ஜெசிகா, கலை இயக்குனர் ஜாக்கி, படத்தொகுப்பாளர் நரேஷ் குணசீலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவின் இயக்குநர் மகி வர்மன் பேசுகையில்,

” வாய்தா திரைப்படத்திற்கு படக்குழுவினர் ஆகிய நாங்கள் பல முறை ‘வாய்தா’ வாங்கி, மக்களின் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். நான் இந்தப் படத்திற்காக கதை எழுதும் முன் மாற்று சினிமா குறித்தும், மலையாள சினிமா குறித்தும் ஏராளமான திரை ஆர்வலர்கள் பேசியிருக்கிறார்கள். தற்போது இது தொடர்பான படைப்புகள் வருகை தந்து கொண்டிருக்கிறது.

சாதிய ரீதியிலும், வர்க்க ரீதியிலும் தற்போது தமிழ் சினிமாவில் ஏராளமான படைப்புகள் வெளி வந்து கொண்டிருக்கிறது. அதனால் ‘வாய்தா’ அத்தகைய தோற்றத்திலான படமாக  பார்க்கப்படும். ஆனால் ‘வாய்தா’ படத்தை நாங்கள் 2018 ஆம் ஆண்டில் மக்கள் பிரச்சனையை பேசும் படமாக தொடங்கிவிட்டோம். சினிமாவில் முதல் வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருந்ததால், இந்தப் படைப்பு சற்று தாமதமாக வந்திருக்கிறது.

இந்தப் படத்தை முதலில் ‘ஏகாலீ’ என்ற பெயரில் சுயாதீன திரைப்படமாக தான் உருவாக்க வேண்டும் என நினைத்தோம். ஆனால் நண்பர் ஒருவர் மூலமாக தயாரிப்பாளர் வினோத் குமார் அவர்களை சந்தித்து ஒரு முறை கதையை சொன்னேன். கதை அவருக்கு பிடித்தது. உடனடியாக நானே தயாரிக்கிறேன் என ஒப்புக்கொண்டார்.  படப்பிடிப்பு தளத்திற்கு அவர் ஒரே ஒரு நாள் ஒரு மணி நேரம் மட்டுமே வருகை தந்து பார்வையிட்டார். எங்கள் மீது நம்பிக்கை வைத்து படைப்பு சுதந்திரத்தை வழங்கினார். இதற்காக என்னுடைய முதல் நன்றியை அவருக்கு தெரிவிக்கிறேன்.

என்னுடைய படைப்பு மக்களுக்கானது. நான் கலையை மக்களுக்காக என்ற கொள்கை கொண்டவன். கலை கலைக்காக அல்ல என்பதை கடந்து கலையை மக்களுக்கானதாக காண்கிறேன்.

படத்தின் தொடக்கத்தில் முதலில் பாடல்களை வேண்டாம் என்றுதான் நினைத்தோம். ஆனால் சின்ன சின்ன அரசியல் பேசும் பாடல்களை இணைத்தோம். ‘ஜோக்கர்’ படத்தில் எழுத்தாளரும், நடிகருமான பவா அவர்களின் குரலைக் கேட்டு, இந்தப் படத்திலும் அவரை பாட வைத்திருக்கிறோம். இதுபோன்று புது புது முயற்சிகளை செயல்படுத்த தொடங்கி, ஒன்பது பாடல்கள் இப்படத்தில் இடம் பெற்றிருக்கிறது.

கடின உழைப்பிற்குப் பிறகு படத்தின் பணிகளை நிறைவு செய்து தணிக்கை குழுவிற்கு சென்றோம். ஏகாலி என்ற பட தலைப்பை பதிவு செய்யும்போது தயாரிப்பாளர் சங்கத்தில் இது ஒரு குறிப்பிட்ட ஜாதியை குறிக்கிறது. அந்த சாதிய அமைப்புகளிடம் இருந்து தடையில்லா சான்றிதழை வாங்கி வாருங்கள் என அறிவுறுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள குறிப்பிட்ட சமூகத்தின் அமைப்பிலிருந்து  தடையில்லா சான்றிதழை வாங்கி தலைப்பை பதிவு செய்தோம். அப்போதிருந்தே இந்த படத்திற்கு பிரச்சனை தொடங்கியது.

தணிக்கைக் குழுவினர் இந்த ஏகாலி என்ற வார்த்தையையும், தலைப்பையும் மாற்றும்படி அறிவுறுத்தினர். அதன் பிறகு தயாரிப்பாளருடன் விவாதித்து ‘வாய்தா’ என தலைப்பை மாற்றினோம்.இது மக்களுக்கான படைப்பு. மக்களுக்கான அரசியல் பேசும் ‘வாய்தா’ படத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

விழாவின் இறுதியில் தோழர் சி. மகேந்திரன், ‘வாய்தா’ படத்தின் இசையை வெளியிட, அதனை சிறப்பு விருந்தினரான தயாரிப்பாளர் சி.வி. குமார் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.