Zee Studios & Bayview Projects LLP சார்பில் போனி கபூர் Romeo Pictures உடன் இணைந்து தயாரித்துள்ள ஆர்ஜே பாலாஜியின் “வீட்ல விசேஷம்” திரைப்படம் கடந்த ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் விமர்சகர்களிடம் பெரும் பாராட்டுக்களை பெற்று, வெற்றி பெற்ற நிலையில் படத்தின் நாயகன் ஆர் ஜே பாலாஜி படக்குழுவினருடன் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தார்.
இந்நிகழ்வினில் RJ பாலாஜி கூறியதாவது.,
“வீட்டுல விஷேசம் திரைப்படம் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் வசூல் பற்றி பலரும் பல விதமாக கூறிகொண்டிருக்கின்றனர். படத்தின் வசூல் படத்தின் வெற்றி கிடையாது என்பதை நான் நம்புகிறேன். இருந்தாலும் எங்களது முந்தைய படங்களை விட இந்த படத்தின் வசூல் அதிகமாக இருக்கிறது. இந்த படம் மக்களுடைய வார்த்தைகளால் வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வருடத்தின் லாபகரமான படங்களில் ஒரு படமாக இந்த படம் கண்டிப்பாக இருக்கும் என நாங்கள் உறுதியாய் கூறுகிறோம். இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகள் இல்லை, கமர்சியல் மசாலா படங்களில் இருக்கும் அம்சங்கள் இந்த படத்தில் இல்லை. இருந்தாலும் இந்த படம் வெற்றி பெறும் என்று நாங்கள் நம்பினோம். கொரோனாவிற்கு பிறகு, மக்கள் பெரிய நடிகர்கள் நடித்த படத்திற்கு மட்டுமே திரையரங்கிற்கு வருவார்கள் என்ற பேச்சு இருந்தது. ஆனால் இந்த கதையின் மேல் நாங்கள் நம்பிக்கை வைத்திருந்தோம். இந்த படத்தை அதற்குண்டான ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நாங்கள் முடிவெடுத்து வேலை பார்த்தோம். Romeo Pictures ராகுல், இந்த படத்தை லாபகரமான படமாக மாற்றுவதற்கு எல்லாவிதமான பணிகளையும் சிறப்பாக செய்தார். ஒரு கடைநிலை ஊழியர் போல் இந்த படத்தில் பணியாற்றினார். இந்த படத்தின் வெற்றிக்கு அவர் கடுமையாக உழைத்தார். சமீபத்தில் விஜய் சாரிடம் கதை சொல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவரிடம் பான் இந்திய கதை ஒன்றை கூறினேன். அவர் கதையை கேட்டு, இதை திரைக்கதையாக உருவாக்க எவ்வளவு நாள் ஆகும் என கேட்டார். நான் ஒரு வருடம் ஆகும் என கூறினேன். அவரும் என்னை திரைக்கதையை உருவாக்க அவ்வளவு நாளாகுமா எனக்கேட்டார். ஒரு படத்தை வேகமாக உருவாக்குவதை விட, அதை சிறப்பாக மாற்றுவதற்கு தேவைப்படும் கால அவகாசத்தை கொடுக்க வேண்டும் என்று நான் விரும்புவேன். அதை நோக்கியே பயணிப்பேன் என்றேன். விஜய் படம் கண்டிப்பாக செய்வேன், இந்த படத்திற்கு கிடைத்த விமர்சனங்கள் எங்களுக்கு பெரிய சந்தோசத்தை கொடுத்தது. எங்களுக்கு ஆதரவு அளித்த பத்திரிக்கையாளர்களுக்கு எங்களது படக்குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்துகொள்கிறேன். அனைவருக்கும் நன்றி.
இயக்குனர் NJ சரவணன் கூறியதாவது.,
இது போன்ற கதைகளை மக்களுக்கு கூற வேண்டும் என்று விருப்பப்பட்டு இந்த படத்தை உருவாக்கினோம். மக்கள் இந்த படத்திற்கு கொடுத்த பெரிய வரவேற்பு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் நினைத்ததை தாண்டி இந்த படத்திற்கு பெரிய வரவேற்பு அளித்த பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு எங்கள் படக்குழு சார்பாக நன்றியை கூறிகொள்கிறோம்.