சென்னை காவேரி மருத்துவமனையில் கடந்த 4 நாட்களாக தொடர் சிகிச்சையில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதியை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மாலை 4 .15 மணியளவில் நேரில் சந்தித்தார்.
இன்று பிற்பகல் டெல்லியிலிருந்து விமானம் மூலம் வந்த அவர் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உடன் நேராக மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியைச் சந்தித்து அவருடைய உடல்நிலையை அங்கிருந்த மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். முன்னதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்தி அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி ஆகியோரைச் சந்தித்தார்.
அதன் பிறகு காவேரி மருத்துவமனையை விட்டு வெளியே வந்த ராகுல் காந்தி அங்கிருந்த பத்திரிகையாளர்களை சந்தித்த போது ‘கருணாநிதி நலமுடன் இருக்கிறார். தமிழ் மக்களைப் போல் அவர் உறுதியானவர். காங்கிரஸுடன் நீண்ட காலமாக நல்ல நட்பில் இருப்பவர். தமிழக மக்களிடமிருந்து பிரித்துப்பார்க்க முடியாதவர். சோனியாகாந்தி , கருணாநிதி மீது மிகுந்த மதிப்பு கொண்டவர். விரைவில் நலம் பெற வாழ்த்தியுள்ளார்.’ என்றார். ராகுல் காந்தியின் உற்சாகமான மகிழ்ச்சியான பேச்சு அங்கிருந்த திமுக தொண்டர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.