இயக்குநர் ஆர். எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம், ‘கருடன்’ . இத்திரைப்படத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, ரேவதி சர்மா, ரோஷினி ஹரி பிரியன், பிரிகிடா, துஷ்யந்த் ஜெயபிரகாஷ், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இத்திரைப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் K.குமார் தயாரித்திருக்கிறார்.
மே 31 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும், கருடன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. அதில், சூரி, சசிகுமார், சமுத்திரக்கனி, தயாரிப்பாளர் K.குமார், இயக்குநர் ஆர். எஸ். துரை செந்தில்குமார், துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், மைம் கோபி, ரோஷினி ஹரி ப்ரியன், பிரிகிடா, ரேவதி ஷர்மா, ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ. வில்சன், கலை இயக்குநர் துரைராஜ், படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ. ராகவ், சண்டை பயிற்சி இயக்குநர் மகேஷ் மேத்யூ, திரைப்பட விநியோகிஸ்தர் பைவ் ஸ்டார் K. செந்தில், பாடலாசிரியர்கள் சினேகன் மற்றும் சூப்பர் சுப்பு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நடிகர் சமுத்திரக்கனி பேசுகையில்,
‘தம்பி சூரி நிறைய நல்ல மனிதர்களை சம்பாதித்திருக்கிறார். ஒவ்வொரு திரைப்படத்திலும் அவருடைய உழைப்பு அசாதாரணமானது. ஒவ்வொரு நொடியும் படத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பார். இதனாலேயே அவர் திரைத்துறையில் மிக உயரத்திற்கு செல்வார். நீண்ட நாள் கழித்து தம்பி சசியுடன் மீண்டும் இந்த படத்தில் இணைந்து நடித்திருக்கிறேன்.
இந்த படத்திற்கு பின்னணி பேசும்போது, இயக்குநர் வெற்றிமாறன் என்னை சந்தித்து, ‘இந்தப் படத்திற்கு அனைத்தும் நல்லபடியாக அமைந்து விட்டது.’ என்றார். அவரிடமிருந்து இதுபோன்ற வாழ்த்து கிடைத்தவுடன் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இந்த திரைப்படத்தில் நானும் இருக்கிறேன் என்பது எனக்கு பெருமிதமாக இருக்கிறது. ” என்றார்.
நடிகர் சசிகுமார் பேசுகையில், ”
இயக்குநர் வெற்றிமாறன் சூரியை கதாநாயகனாக உயர்த்திருக்கிறார். சூரியின் வளர்ச்சிக்காக சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் இங்கு வருகை தந்திருக்கிறார்கள். இவர்களெல்லாம் சூரியின் நல்ல மனதிற்காகத்தான் வந்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோருக்கும் சூரிக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இந்த எண்ணம் எனக்கும் இருந்தது. சுந்தரபாண்டியன் படத்திற்கு பிறகு அவரோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அந்தத் திரைப்படத்தில் அவர் இரண்டாவது கதாநாயகனாக நடித்திருப்பார். இந்தப் படம் நன்றாக வந்திருக்கிறது. நான் படத்தை பார்த்துவிட்டேன். சூரி இந்த படத்தில் நன்றாக நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படம் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.
இயக்குநர் துரை செந்தில்குமார் பேசுகையில்,
தயாரிப்பாளர் குமார்- தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றி அனுபவம் பெற்ற பிறகு படத்திற்கு தயாரிப்பாளராகியிருக்கிறார். அவரிடம் கதையை சொல்லி முடித்த பிறகு, 55 நாட்கள் ஒரே கட்டமாக படப்பிடிப்பை நிறைவு செய்துவிடலாம் என சொன்னேன். அதற்காக ஒரு பட்ஜெட்டை அவரிடம் சொன்னேன். படத்தில் நடிக்க வேண்டிய நடிகர்கள் குறித்து ஒரு பட்டியலை அவர் என்னிடம் சொன்னார். அதைக் கேட்கும் போது 55 நாட்கள் பட்ஜெட் என்ற விசயத்தை நினைவு படுத்தினேன். அப்போது அவர் படத்தை பிரமாண்டமாக உருவாக்குவோம் என்றார்.
இடைவேளை காட்சியில் நடிப்பதற்காக ஆயிரம் நபர் தேவை. குறைந்தபட்சம் எழுநூறு நபராவது வேண்டும் என்றேன். அவர் ஆயிரம் நபர்களை அழைத்து வந்து நடிக்க வைத்தார். அதேபோல் படத்தில் இரண்டாம் பகுதியில் ஒரு ஐட்டம் சாங் வைக்கலாம் என்று திட்டமிட்டு, அதற்காக ஒரு பாடலையும் உருவாக்கினோம். ஆனால் அதனை படமாக்கவில்லை. ஒருமுறை படப்பிடிப்பு தளத்திற்கு தயாரிப்பு நிர்வாகி வந்த போது அவரிடம் இது குறித்து விவரித்தேன். அப்போது அவர் அந்த ஐட்டம் சாங் பாடலுக்கு மூன்று நடிகைகளை முதன்மையாக நடனமாட வைத்து பிரம்மாண்டமாக படமாக்கலாம் என தயாரிப்பாளர் சொல்கிறார் என்ற விவரத்தை என்னிடம் சொன்னார். இப்படி படம் நெடுகிலும் தயாரிப்பாளர் படத்தின் பட்ஜெட்டை உயர்த்திக் கொண்டே சென்றார்.
அவருடைய சூட்சமம் எனக்கு பிடித்திருந்தது. படத்தின் பணிகள் தொடங்கும் போது இயக்குநரான என்னிடம் ஒரு பட்ஜெட்டை சொல்லிவிட்டு ஆனால் அவர் மனதில் அதைவிட பெரிய அளவில் திட்டமிட்டிருக்கிறார். அதை நோக்கி என்னையும், பட குழுவினரையும் சிறிது சிறிதாக அழைத்துச் சென்றார். இப்போது கூட இப்படத்தில் இசை வெளியீட்டு விழாவை ஆன்லைனில் நடத்துகிறோமா..! எனக் கேட்ட போது இல்லை சத்யம் தியேட்டரில் பிரம்மாண்டமாக நடத்துகிறோம் என்றார்.
படத்திற்காக சண்டைக் காட்சிகளை படமாக்கும் போது நாயகனின் கதாபாத்திரத்தை தவற விட்டு விடுவோம். அவர்கள் காட்சிகளில் வேறு மாதிரியாக நடித்திருப்பார்கள். சண்டை காட்சிகளின் போது வேறு மாதிரியாக நடிப்பார்கள். அதுபோல் இல்லாமல் இந்த படத்தில் சொக்கன் கதாபாத்திரம் எப்படியோ… அவனுக்கேற்ற வகையில் சண்டை காட்சிகளை வடிவமைத்திருக்கிறோம். அந்த கதாபாத்திரத்தின் நீட்சியாகவே அனைத்து சண்டை காட்சிகளையும் உருவாக்கி இருக்கிறோம். இதற்காக சண்டை பயிற்சி இயக்குநர் மகேஷ் மேத்யூக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தின் கதைக்கு இரு தூண்கள். அதில் ஒருவர் சசிகுமார். அவர் ஏற்று நடித்திருக்கும் ஆதி எனும் கதாபாத்திரம் தான் இப்படத்தின் மையப் புள்ளி.
உன்னி முகுந்தன் புலி என்றால்.. சசிகுமாரை வேட்டைக்குச் செல்லும் சிங்கம் என்று சொல்லலாம். சிங்கத்திற்கும், புலிக்கும் இடையே சிக்காமல் தப்ப வேண்டிய வேட்டைக்காரர் சூரி. சூரி முழுமையான அர்ப்பணிப்புடன் கடுமையாக உழைத்தார்.
சில படங்களில் எல்லா கதாபாத்திரங்களின் கோணத்திலிருந்தும் கதை அமையும் என எதிர்பார்ப்போம். அதற்கான வாய்ப்பு கிடைக்காது. ஆனால் இந்தத் திரைப்படத்தில் எல்லா கதாபாத்திரங்களின் கோணங்களில் இருந்தும் கதை பயணிக்கும். அது போன்று கதை அமைந்திருக்கிறது. கதாபாத்திரங்களில் ஒவ்வொருவருடைய கோணங்களிலிருந்தும் இந்த கதையை பார்க்கலாம். இதனை அந்த வகையில் நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறோம் என நினைக்கிறேன். மூன்றாண்டு இடைவெளிகளில் நான் கற்றுக்கொண்ட சில நல்ல விசயங்களையும் இதில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.” என்றார்.
இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், ”
விடுதலை படத்திற்கு முன்னர் இரண்டு அல்லது மூன்று முறை தான் சூரியை சந்தித்து பேசி இருக்கிறேன். விடுதலை படத்தின் பணிகள் தொடங்கும் போது தான் அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு என்னிடம் தயாரிப்பாளர் குமாரை அறிமுகப்படுத்தி ‘கருடன்’ என்று ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார். செந்தில் தான் இயக்கவிருக்கிறார் என என்னிடம் சொன்ன போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
செந்தில் என்னை சந்தித்து இப்படி ஒரு கதாபாத்திரம்… இப்படி ஒரு நடிகர்… என இந்தப் படத்தைப் பற்றி நிறைய விசயங்களை சொல்லிக் கொண்டே இருப்பார்.
ஆதி கதாபாத்திரத்திற்கு சசிகுமாரை நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறோம் என்று சொன்னபோது, அவர் ஒப்புக் கொள்வாரா..! என்ற தயக்கமும் இருந்தது. ஆனால் அவர் நடிக்க ஒப்புக்கொண்டார் என்ற தகவல் கிடைத்தவுடன் எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. அப்போதும் அவர் சூரிக்காகத்தான் இந்த கதையை நடிக்க ஒப்பு கொண்டிருக்கிறார் என்று சொன்னார்கள். அப்படி சொல்வதற்கும், அதை செய்வதற்கும் ஒரு மனசு வேண்டும். இதற்காக நான் சசிக்குமாரை மனதார பாராட்டுகிறேன்.
படம் பார்த்துவிட்டேன். படத்தில் சசிகுமாருக்கு அழுத்தமான வேடம். அது அவருக்காகவே உருவாக்கப்பட்ட சிறப்பான கதாபாத்திரமாக அமைந்திருக்கிறது. அவர் மட்டுமல்ல அனைவரும் இந்த படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் சமுத்திரக்கனி ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரத்தின் மூலம் கதைக்கு ஒரு நம்பகத்தன்மை கிடைத்திருக்கிறது. இந்த மாயாஜாலத்தை ஏற்படுத்திய சமுத்திரக்கனிக்கும் என்னுடைய பாராட்டுக்கள். படத்தில் இடம் பெறும் சண்டைக் காட்சிகளும் சிறப்பாக இருக்கிறது. இந்த திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். படத்தின் தயாரிப்பாளர்.. இயக்குநர் செந்தில் விவரித்ததை போல் சிறந்த தயாரிப்பாளரா.. என தெரியவில்லை ஆனால் படைப்பின் மீது அக்கறை கொண்ட தயாரிப்பாளர் என்று மட்டும் தெரிய வருகிறது. அவருக்கும் இந்த படத்தின் மூலம் வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன்.” என்றார்.
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி பேசுகையில், ”
சூரி நடிகராக அறிமுகமாகி இந்த அளவிற்கு உயர்ந்திருப்பது பெரிய சாதனை தான்.
காமெடியனாக இருக்கும்போது ஒரு காட்சியை கொடுத்தால்.. அதை அவருடைய கோணத்தில் உள்வாங்கி எப்படி திரையில் தோன்றி சிரிக்க வைப்பது என யோசித்து.. அந்தக் காட்சியின் ஏற்ற இறக்கங்களை கணித்து அதன் பிறகு இயக்குநருடன் பேசி நடிப்பது என்பது ஒவ்வொருவரும் பயன்படுத்தும் ஒரு உத்தி. நானும், சூரியும் ஒரு சில படங்களில் மட்டும் தான் இணைந்து நடித்திருக்கிறோம்.
ஒரு படத்தில் காமெடிக்காக மட்டுமே யோசித்து நடித்த நடிகர்.. அதில் பெற்ற பயிற்சியை மனதில் வைத்துக் கொண்டு, குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு கதையின் நாயகனாக நடிக்க வேண்டும் என விரும்புகிறார்..இதற்காக சூரியை பாராட்டுகிறேன். விடுதலை படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஒரு படம் நடித்திருக்கிறார். தொடர்ந்து அவர் பல உயரங்களை தொடுவார். இதற்கு இந்த படத்தின் முன்னோட்டத்தில் இடம் பிடித்த இயற்கையும் கடவுளும் அவருக்கு துணையாக இருக்கும் என்ற வசனங்களே சான்று. அவருடைய அடுத்தடுத்த படங்களும் அதற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. சூரியைப் பார்த்து மிகவும் நான் ரசிக்கிறேன். நம் மண்ணுக்கேற்ற முகம். கருப்பான அழகன். மேலும் மேலும் வளர வேண்டும் என வாழ்த்துகிறேன். ” என்றார்.
சிவகார்த்திகேயன் பேசுகையில்,
” படத்தின் முன்னோட்டம், பாடல் காட்சிகள் அனைத்தும் சிறப்பாக இருந்தது. இப்படத்தின் இயக்குநர் துரை செந்தில் குமாருடன் ‘எதிர்நீச்சல்’ மற்றும் ‘காக்கிச்சட்டை’ ஆகிய படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். அவரின் இயக்கத்தில் தயாராகி இருக்கும் கருடன் திரைப்படம் வெற்றி படமாக அமைய வேண்டும் என வாழ்த்துகிறேன்.
படத்தின் தயாரிப்பாளர் குமார், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் படப்பிடிப்பின் போது தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியவர். அப்போதே அவர் படப்பிடிப்பு பணிகள் எதிலும் தாமதம் ஏற்படக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார். சிக்கனமாக செலவு செய்வார். தயாரிப்பாளர் வேறு ஒருவர் என்ற போதே அவர் சிக்கனமாக செலவு செய்தார் என்றால்.. இப்போது அவரே தயாரிப்பாளர் என்பதால், இந்த படத்திலும் நல்ல முறையில் தயாரித்திருப்பார்.. இந்த படம் வெற்றி அடைந்து மேலும் அவர் படங்களை தயாரிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக சூரியை வைத்து அவர் மேலும் பல படங்களை தயாரிக்க வேண்டும்.
சூரி – உண்மையிலேயே எனக்கு அண்ணன் தான். அவரை எப்போதும் ஆத்மார்த்தமாக அண்ணன் என்றுதான் அழைப்பேன். சூரியை முதன்முதலாக கதையின் நாயகனாக நீங்கள் நடிக்கலாம் என்று சொல்லி, அதற்காக அவரிடம் கதையும் சொன்னது நான்தான். அதன் பிறகு ஒரு நாள் என்னை சந்தித்து ‘தம்பி! வெற்றிமாறன் இயக்கத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறேன்’ என்றார். வெற்றிமாறன் படத்தில் நடித்தால்… உங்களது திரையுலக பயணத்திலேயே பெரிய திருப்புமுனை ஏற்பட்டுவிடும். பேசாமல் நடித்து விடுங்கள் என்று சொன்னேன்.
காமெடியாக நடிக்கும் ஒருவரால் நிச்சயமாக உணர்வுபூர்வமாக நடிக்க முடியும். இதனால் காமெடியாக நடிக்கும் நடிகர்களை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம். வெற்றிமாறன் அண்ணன் சூரிக்கு ‘விடுதலை’ படத்தின் மூலம் புதிய அடையாளத்தை கொடுத்திருக்கிறார். நாங்கள் தயாரித்திருக்கும் கொட்டுகாளி படத்தில், சிறிதளவு கூட குறையாமல் அதற்கு ஒரு படி மேலே தான் சூரியை பயன்படுத்தி இருக்கிறோம் என நான் நம்புகிறேன்.
கருடன் திரைப்படத்தில் சூரி ஆக்சன் காட்சிகளில் அதிரடியாக நடித்திருக்கிறார். அவர் ஆக்சன் காட்சிகளில் நடிப்பது புதிதல்ல. ஏனெனில் எப்போதும் அவர் உடற்பயிற்சி உடற்பயிற்சி என அந்த மனநிலையில் தான் இருப்பார். அதனால் ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பதற்கு அவர் எப்போதோ தன்னை தயார் படுத்திக் கொண்டு விட்டார். நானும் சூரியைப் போல் சமுத்திரக்கனி மற்றும் சசிகுமார் உடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கான வாய்ப்பு விரைவில் சாத்தியமாகும் என நம்புகிறேன்.’ என்றார்.
நடிகர் சூரி பேசுகையில்,
”இந்த தம்பிக்காக வாழ்த்த வருகை தந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும், அனைத்து அண்ணன்களுக்கும், தம்பிகளுக்கும் நன்றி.
விடுதலைக்கு முன் – விடுதலைக்கு பின் என இந்த சூரியின் வாழ்க்கையை மாற்றி அமைத்த இயக்குநர் வெற்றிமாறனுக்கு இந்த நேரத்திலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் கதையின் நாயகனாக எனக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்று உரிமையுடன் நிற்கிறேன் என்றால் அதற்குக் காரணம் வெற்றி அண்ணன் தான். விடுதலை படத்தில் நடித்த போது கிடைத்த அனுபவங்களால் தான் இந்த கருடன் படமே உருவானது. அதுதான் உண்மை.
கதையெல்லாம் எழுதி முடித்த பிறகு இந்த வேடத்திற்கு சசிகுமார் தான் பொருத்தமாக இருப்பார் என இயக்குநர் சொன்னவுடன் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி. ஆனால் அவரிடம் இதை எப்படி கேட்பது என்று தான் தயக்கம் இருந்தது. அப்போது நான் தான் அவரிடம் கேட்டுப் பார்க்கலாம். ‘பழக்க வழக்கத்திற்காக மதுரைக்காரன் கொலை கூட செய்வான்’ என்று விளையாட்டாக சொன்னேன். அதன் பிறகு இயக்குநர் சரவணனிடம் பேசினோம். அவர்தான் சசிகுமாரிடம் பேசினார். அதன் பிறகு என்னிடம் ‘உனக்காக சசிகுமார் நடிக்க தயார்’ என்ற விவரத்தை சொன்னார். இதற்காக சசிகுமார் அண்ணனுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தம்பி சிவகார்த்திகேயன் சினிமாவை கடந்து என்னுடைய சிறந்த நண்பர் என்னுடைய குடும்பத்தினர் அனைவருக்கும் சிவகார்த்திகேயனை பிடிக்கும். விடுதலைப் படத்தில் கதையின் நாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தவுடன் முதலில் என்னுடைய மனைவியிடமும் அதன் பிறகு தம்பி சிவகார்த்திகேயன் இடம் தான் பகிர்ந்து கொண்டேன். விடுதலை படத்திற்குப் பிறகு வேறு இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்தால் அவர்கள் எப்படி இயக்குவார்கள் என்பது எனக்கு நிச்சயமாக தெரியாது. என்னை அவர்கள் கதாநாயகனை தான் பார்ப்பார்கள்.
தனுஷ் சார் ஒரு படத்தில் ‘என்னையெல்லாம் பார்த்த உடனே பிடிக்காது. பார்க்கத்தான் பார்க்கத்தான் பிடிக்கும்’ என்று சொல்லி இருப்பார். ஆனால் என்னை ‘பார்க்க… பார்க்க… பார்க்க.. பார்க்க தான், பிடிக்கும்’ இயக்குநர் துரை செந்தில்குமார், படப்பிடிப்பின் போது அவருடைய நேர்த்தியான உழைப்பு எனக்கு பிடித்திருந்தது. அதனால் அவரது இயக்கத்தில் நடிக்க சம்மதித்தேன். அதேபோல் படப்பிடிப்பு தளத்திலும் என்னை சௌகரியமாக பணியாற்ற அனுமதி அளித்தார். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ” என்றார்.