‘ஜப்பான்’ – விமர்சனம்!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில், எஸ்ஆர் பிரகாஷ் பாபு, எஸ்ஆர் பிரபு தயாரிப்பில், வெளியாகியுள்ள படம், ஜப்பான். ராஜு முருகன் இயக்கியிருக்கிறார். கார்த்தியுடன் அனு இம்மானுவேல், கேஎஸ் ரவிக்குமார், விஜய் மில்டன், ராஜேஷ் அகர்வால், ஜித்தன் ரமேஷ், வாகை சந்திரசேகர், விஜய் மில்டன், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நவீன யுக்திகளோடு கொள்ளையடிப்பதில், வல்லமை பெற்ற பலே கில்லாடி கொள்ளையன் (கார்த்தி) ஜப்பான். போலீஸின் கரிசனத்தோடு, இந்தியா முழுவதும் வலம் வருகிறான். ஒரு நாள் அமைச்சரின் பினாமி, நகைக்கடையில் கொள்ளை நடக்கிறது. அமைச்சரின் அழுத்தம் காரணமாக வேறு வழியின்றி, ஜப்பானை போலீஸார் துரத்துகின்றனர். அதன் பிறகு என்ன நடக்கிறது? ஜப்பான் பிடிபட்டானா, இல்லையா? என்பதே ஜப்பான் படத்தின் கதை.

ஜப்பான் என்ற கொள்ளையன் கதாபாத்திரத்தில், கார்த்தி தன்னை அழகாக பொருத்தியிருக்கிறார். நடை, உடை, பாவனையில் வித்தியாசம் காட்டி நடித்திருக்கிறார். போலீஸ் உயரதிகாரிகளின் செல்வாக்கோடு, அலட்சியமாக நடந்து கொள்ளும் விதம் ரசிக்க வைக்கிறது. குறிப்பாக போலீஸ் அதிகாரி சுனிலின் ஆபாச ரீல் வீடியோ காட்சி, தியேட்டரில் பலத்த சிரிப்பலையை உருவாக்குகிறது. நக்கலான வசனங்களை ஏற்ற இறக்கத்துடன் பேசும் காட்சிகளிலும், கார்த்தி உயர்ந்து நிற்கிறார். கொள்ளையடித்த பணத்தில், அனு இம்மானுவேலை கதாநாயகியாக ஆக்கி, அவருடன் கும்மாளம் அடிக்கும் காட்சியிலும் ரசிக்க வைக்கிறார்.  கார்த்தியுடன் சேர்ந்து அவ்வப்போது வாகை சந்திரசேகரும் சிரிக்க வைக்கிறார்.

நடிகை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனு  இம்மானுவேலுக்கு பெரிய வேலை  இல்லை. அவரும் கார்த்தியும் இடம் பெறும் பாடல் காட்சிகள் துண்டு துண்டாக இருக்கிறது. அதனால் ரசிகர்கள்  அனு இமானுவேலின் அழகினை முழுமையாக ரசிக்க முடியாமல் போய் விடுகிறது.

ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் ஓகே!

சமூகத்தால் உருவாக்கப்படும் திருடர்கள், போலீஸ் கேஸை முடிக்க பயண்படும் அப்பாவிகள், போலீஸை வழி நடத்தும் அதிகார மையங்கள், உட்சபட்ச அரசியல் பேரங்கள் குறித்த அனைத்தையும், தனது பாணியில் இயக்குனர்  ராஜூ முருகன் சாடியிருப்பது, திகில். அதிலும் போலீஸ், என்கவுன்டருக்கு ஒரு அப்பாவியை தயார் செய்யும் விதம் பகீர்.

ஆனால், இயக்குனர்  ராஜூ முருகன், திரைக்கதையில் போதிய விறுவிறுப்பு இல்லாமல், தனது வழக்கமான அரசியலுக்கும், கமர்ஷியலுக்கும் இடையே சிக்கித் திணறியிருப்பதும் தெரிகிறது. திரைக்கதையில் சில தொய்வுகள் இருந்தாலும், கார்த்தியின் நடிப்பு அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. மற்றவர்களுக்கு ஒரு சின்ன ஏமாற்றம் தான்.