கர்நாடகவில் பெய்துவரும் வரலாறு காணாத பெருமழை காரணமாக அங்குள்ள அணைத்து அணைகளும் முழு கொள்ளளவை எட்டியது. இதன் காரணமாக திறந்துவிடப்பட்ட உபரி நீர் வரத்தால் மேட்டூர் அணை இரண்டு முறை நிரம்பியது. இதனால் பாசனத்திற்கு நீர் திறக்கபட்டது. இருப்பினும் காவேரி கடைமடை பகுதிகளுக்கு நீர் சென்று சேரவில்லை என கடைமடை பகுதி விவசாயிகள் சாகுபடிக்கேற்ற நீர் கிடைக்கமல் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவரும், பா.ம.க-ன் நிறுவனருமான ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் தமிழக அரசு நீர்மேலாண்மையில் தோற்றுவிட்டது என குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் தமிழகத்திற்கான பாசனப் பெருந்திட்டத்தை விடுதலை நாளில் அறிவிக்க வேண்டும்! என கூறியுள்ளார். அதன் முழுவிவரம் பின்வருமாறு..
‘தமிழகம் வித்தியாசமானதொரு சூழலை கடந்து கொண்டிருக்கிறது. உப்பு விற்கப் போனால் மழை பெய்யும்; மாவு விற்கப் போனால் காற்றடிக்கும் என்பதைப் போல கடந்த 6 ஆண்டுகளாக சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராக இருந்தும் போதிய தண்ணீர் கிடைக்காததால் விவசாயம் பொய்த்துப் போனது; இப்போது தண்ணீர் தாராளமாக கிடைக்கும் நிலையில் பருவம் கடந்து போனதால் பெரும்பாலான உழவர்கள் சாகுபடி செய்ய முடியவில்லை. நீர் மேலாண்மையில் அரசு தோல்வியடைந்து விட்டதே இதற்குக் காரணம்.
கர்நாடகத்திலும், கேரளத்திலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளும், மேட்டூர் அணையும் நிரம்பி வழிகின்றன. மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டாலும் அதனால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. மேட்டூர் அணை இம்முறையும் திறக்கப்பட வாய்ப்பில்லை என்ற எண்ணத்தில் குறுவை சாகுபடி செய்யப்படாத பகுதிகளையெல்லாம் காவிரி நீர் நிரப்பியுள்ள நிலையில், உண்மையாகவே பயிர் செய்து தண்ணீர் தேவைப்படும் கடைமடை பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் சென்றடையவில்லை. இந்தக் கொடுமை ஒருபுறம் இருக்க காவிரியில் திறந்து விடப்பட்ட தண்ணீர் யாருக்கும் பயன்படாமல் வீணாக கடலில் கலந்துக் கொண்டிருக்கிறது. நடப்பாண்டில் கடந்த சில தினங்களில் மட்டும் 20 டி.எம்.சி தண்ணீர் கடலில் கலந்து வீணாகியுள்ளது.
காவிரி ஆறு மற்றும் அதன் கிளை ஆறுகளில் தடுப்பணைகளை கட்டுவதன் மூலம் காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கலாம் என்று பாட்டாளி மக்கள் கட்சி கூறி வருகிறது. ஆனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியோ காவிரி பாசன மாவட்டங்கள் சமவெளிப் பகுதிகள் என்பதால் அங்கு தடுப்பணைகள் கட்ட முடியாது என்று விஞ்ஞானி போன்று பேசி, தடுப்பணைகள் கட்டும் கோரிக்கையை தட்டிக்கழித்து வருகிறார். காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களைத் தூர்வாரினாலே அவற்றில் 40 டி.எம்.சிக்கும் கூடுதலான தண்ணீரை சேமித்து வைக்க முடியும். மேட்டூர் அணை நிரம்பி, 16 கண் மதவின் மூலமாக வெளியேற்றப்பட்டு வீணாகும் தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்த காவிரி, -சரபங்கா நதி, -திருமணிமுத்தாறு இணைப்புக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் பல ஆண்டுகளாக தமிழக ஆட்சியாளர்கள் செயல்படுத்த மறுத்து வருகின்றனர்.
காவிரியின் துணை நதியான பவானி ஆற்றின் கூடுதல் நீரை கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் வழங்கும் அத்திக்கடவு – அவினாசித் திட்டம் 60 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. ஒரு சில கோடிகளில் அப்போது செயல்படுத்தி முடித்திருக்க வேண்டிய இத்திட்டத்தின் மதிப்பு இப்போது ரூ.3500 கோடிக்கும் கூடுதலாக அதிகரித்து விட்டது. அதேபோல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களின் வறட்சியைப் போக்குவதற்காக காவிரி, அக்கினியாறு, கோரையாறு, பாம்பாறு, வைகை, குண்டாறு ஆகிய நதிகளை இணைக்கும் காவிரி& குண்டாறு இணைப்புத் திட்டம் 70 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட பாசனத்திற்கான நந்தன் கால்வாய் திட்டம் மற்றும் தென்பெண்ணை – துரிஞ்சலாறு இணைப்புத் திட்டம், சேலம் மாவட்டத்தில் தோனி மடுவு பாசனத் திட்டம், மேட்டூர் அணை வலதுகரை கால்வாய் நீட்டிப்புத் திட்டம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாளேகுளி ஏரி கால்வாய் திட்டம், படேதலாவ் ஏரிக் கால்வாய்த் திட்டம், வட தமிழகத்தில் தாமிரபரணி – நம்பியாறு இணைப்புத் திட்டம், கொங்கு மண்டலத்தில் பாண்டியாறு – புன்னம்புழா திட்டம் என ஏராளமான திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட வேண்டும். தென்பெண்ணையாறு & பாலாறு இணைப்புத் திட்டத்தை சுமார் ரூ.650 கோடியில் செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. ஆனால், மத்திய அரசின் நிதி கிடைத்தால் தான் செயல்படுத்த முடியும் என்று கூறி இந்தத் திட்டங்களை தமிழக அரசு கிடப்பில் போட்டிருக்கிறது. மத்திய அரசின் நிதி உதவிக்காக காத்திருந்தால் இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இத்திட்டங்களை நிறைவேற்ற முடியாது. இந்த உண்மையை தமிழக அரசு உணர வேண்டும்.
தமிழகத்தில் விவசாயத்திற்கு புத்துயிரூட்டுவதற்கான இந்த பாசனத் திட்டங்களை அதிகபட்சமாக ரூ.50,000 கோடியில் நிறைவேற்றி விட முடியும். மக்களுக்கு பயனில்லாத விளம்பரத் திட்டங்களுக்காக ஆண்டுக்கு ரூ.70,000 கோடிக்கும் கூடுதலாக செலவழிக்கும் தமிழக அரசு அதில் நான்கில் ஒரு பங்கை நீர்ப்பாசனத் திட்டங்களுக்காக ஒதுக்கினால் அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்துத் திட்டங்களையும் நிறைவேற்றி முடிக்க முடியும். எனவே, எந்தக் காலத்திலும் கிடைக்க வாய்ப்பில்லாத மத்திய அரசின் நிதிக்காக காத்திருக்காமல், தமிழக அரசே மேற்கண்ட திட்டங்களை உள்ளடக்கிய நீர்ப்பாசன பெருந்திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த முன்வர வேண்டும். இதுகுறித்த அறிவிப்பை சென்னையில் நாளை நடைபெறவுள்ள விடுதலை நாள் விழா உரையில் பினாமி முதலமைச்சர் வெளியிட வேண்டும்.’ என தனது அறிக்கையில் கூறியுள்ளார்/