தாஜ்மஹாலை பாதுகாக்க முடியாவிட்டால் மூடிவிடுங்கள் அல்லது இடித்து விடுங்கள்! – சுப்ரீம் கோர்ட்

உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வரும்  பளிங்கு நினைவுச்சின்னம் தாஜ்மஹால். உலகம் முழுவதிலுமிருந்து தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

தாஜ்மஹால் அமைந்துள்ள பகுதியினைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொழிற்ச்சாலைகள் பெருகி வரும் நிலையில் தாஜ்மஹாலை பராமரிக்காமல் இருந்து வருவதாக உத்திரப் பிரதேச அரசின் மீதும் மத்திய அரசின் மீதும் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதிகள் மதன் பி லோகர் மற்றும் தீபக் கொண்ட அமர்வு இன்று விசாரித்தது. அப்போது மத்திய அரசு மற்றும் உத்தர பிரதேச அரசுகளுக்கு கடுமையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

தாஜ்மஹால் தனித்துவம் மிக்கது. அதற்கு பாதிப்பு ஏற்பட்டால் அது நமக்கு மட்டும் இழப்பல்ல. . தாஜ் மஹாலை உரிய முறையில் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். இல்லையென்றால் அதனை மூடி விடலாம் அல்லது இடித்து தள்ளி விடலாம்.  தாஜ்மகாலை பாதுகாப்பது குறித்த  சரியான திட்டத்தை உத்தர பிரதேச அரசு தயாரிக்க வில்லை. தாஜ்மகால் மாசுபட என்ன காரணம், அதனை தடுப்பது எப்படி என்பதைக் கண்டறிய சிறப்பு குழுவை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வருகிற 31-ஆம் தேதி முதல் இந்த வழக்கு தினந்தோறும் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.