‘பட்லர் பாலு’ படத்தில் நான் ஹீரோ இல்லை! – யோகிபாபு

Yogi Babu denies about Butler Balu

‘தர்மபிரபு’, ‘கூர்கா’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். தற்போது  பல படங்களில் தொடர்ந்து காமெடியனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் யோகிபாபு ‘பட்லர் பாலு’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் ஒரு நாளிதழில் வெளியாகி இருந்தது. மேலும் யோகிபாபுவிற்கு நகைச்சுவை காட்சிகளுக்கான வசனங்களை  இயக்குநர் S.P. ராஜ்குமார் தான் எழுதி கொடுக்கிறார் என்ற செய்தியும் வெளியாகி இருந்தது. இந்த இரு செய்திகளையும்  மறுத்துள்ளார் யோகிபாபு. மேலும் இது தொடர்பாக அவர் கூறும்போது,

“தர்மபிரபு, கூர்கா என இரண்டு படங்களில் தான் கதையின் நாயகனாக நான் நடித்துள்ளேன். அதன்பின் தொடர்ந்து காமெடியனாகத் தான் பல படங்களில் நடித்து வருகிறேன். ‘பட்லர் பாலு’ என்ற படத்தில் காமெடியனாக  எட்டு வருடங்களுக்கு முன்பு வெறும் நான்கு நாட்கள்  மட்டும் தான் நடித்திருந்தேன்.

ஆனால் தற்போது நான் தான் அப்படத்தின் ஹீரோ என்பது போல் செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் துளியும் உண்மை இல்லை. மேலும் எனக்கு நகைச்சுவை சம்பந்தப்பட்ட வசனங்கள் யாரும் எழுதித்தருவதில்லை. அதற்கான அவசியமும் ஏற்படவில்லை.

இயக்குநர்கள் தரும் வசனங்களை என் ஸ்டைலுக்கு ஏற்றவாறு சிறிதாக மாற்றிக்கொள்கிறேன். அந்த வேலையை நானே செய்துகொள்கிறேன். நகைச்சுவை பாத்திரங்களில் தொடர்ந்து நடித்து மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. தொடர்ந்து எனக்கு ஆதரவு கொடுத்து வரும் ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி” என்றார்