பாலசந்திரன், இசைப்பிரியா இருவரின் படுகொலையை மையமாக வைத்து ஆஸ்திரேலியாவில் உருவாக்கப்பட்ட ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ (Witness In Heaven) திரைப்படத்திற்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் மகன் பாலசந்திரன் மற்றும் ஊடகவியலாளர் இசைப்பிரியா ஆகியோரின் படுகொலையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட முழுநீள திரைப்படம் சாட்சிகள் சொர்க்கத்தில்.
இப்படத்தில் ஈழத்தில் நடந்த கொலை சம்பவங்களோ, சித்திரவதை காட்சிகளோ, இறுதிப்போரில் நடந்த சம்பவங்களோ சித்தரிக்கப்படவில்லை என்று ஏற்கெனவே கூறியிருந்தார் இப்படத்தின் இயக்குநர் ஈழன் இளங்கோ. இருப்பினும், இறுதிப்போரில் பாதிக்கப்பட்டு வெளிநாடுகளில் முகாம்களில் மற்றும் சமுதாயத்தில் வாழும் மக்களின் சோகக்கதைகள் மற்றும் சம்பவங்கள் இப்படத்தில் காட்சியாக்கப்பட்டுள்ளது. அதோடு Channel 4 -ல் சாட்சிகளோடு எடுக்கப்பட்டு காண்பிக்கப்பட்ட பல ஆவணங்களும் செய்திகளும் இப்படத்தில் தேவை அறிந்து சேர்க்கப்பட்டுள்ளதன. அதுமட்டுமின்றி, பாலசந்திரனும் இசைப்ரியாவும் திரையில் தோன்றும் காட்சிகள் உள்ளன. இவை அனைத்தும் சேர்ந்து இத்திரைப்படம் மிகவும் உணர்ச்சிவசப்படும் வகையில் கதையமைக்கப்பட்டுள்ளது என்பது இப்படத்தின் சிறப்புக் காட்சி பார்த்த பலரது கருத்தும் ஆகும்.
சென்ற ஏப்ரல் 16 ஆம் தேதி, சென்னையில், பிரசாத் திரையரங்கில் இப்படத்தின் மாதிரிகாட்சி திரையிட ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தது. இதற்கு பல திரைப்பட பிரபலங்களும், அரசியல்வாதிகளும் தமிழ் பற்றாளர்களும் வருவதாக இருந்தது, தமிழகத்தில் நடக்கும் காவேரி விவகாரம் மற்றும் பல போராட்டங்கள் காரணமாகவும், போராட்டங்களுக்கு ஆதரவுதெரிவிக்கும் முகமாகவும் இயக்குநர் இந்த மாதிரிகாட்சி நிகழ்வை ரத்துசெய்து, மறு அறிவிப்பு வரும்வரை தள்ளிவைத்தார். ஜூலை மாத இறுதியில் இந்த சிறப்புக் காட்சி நடக்க உள்ளது.
இதற்கிடையில், இலங்கையில் இப்படத்தை திரையிடும் முயற்சியில் சென்ற மார்ச் 19, 2018 அன்று தணிக்கை பெறுவதற்காக இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருக்கும் தணிக்கை குழுவிடம் விண்ணப்பம் கையளிக்கப்பட்டது, இப்படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், படத்தை இலங்கையில் திரையிட தடை விதித்துள்ளனர். இயக்குநரின் பிரதிநிதிகள் எவ்வளவு முயன்றும், முயற்சி பயனளிக்கவில்லை.
“இறுதிப்போரில் நடந்த சம்பவங்கள் படத்தில் இல்லைதானே பின் எதற்கு தடை?” என்று கேட்டதற்கு, இப்படத்தில் வரும் செய்திகளும், துணைக்கதைகளும், பல இடங்களில் வரும் வசனங்களும், ஒரு பாடலும், மிகவும் உணர்ச்சிகரமாகவும் இலங்கை அரசாங்கத்திற்கும் அரச படையினருக்கும் எதிராகவும் உள்ளது. இத்திரைப்படத்தை இலங்கையில் திரையிட அனுமதித்தால் பல சட்ட ஒழுங்கு சீர்கேடுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளன,” என்றும் கூறப்பட்டது.
இப்படத்திற்கு இலங்கையில் தடை என்ற செய்தி இயக்குநருக்கும் சக கலைஞர்களுக்கும், காத்திருந்த ரசிகர்களுக்கும், உணர்வாளர்களுக்கும் ஏமாற்றத்தையும் மன உளைச்சலையும் தந்திருக்கின்றது.
இதுகுறித்து ஈழன் இளங்கோ கூறுகையில், “நாம் எப்படியாவது இந்தப்படத்தை உலகெங்கும் வாழும் மக்களை பார்க்க வைப்போம், தமிழர்கள் மட்டுமின்றி அனைத்து மொழியினரும் புரிந்துகொள்ளக்கூடியவாறு இத்திரைப்படம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது, ஆகையால், தமிழர்கள் மட்டுமின்றி மாற்றுமொழி பேசும் மக்களைக்கூட இப்படத்தை பார்க்க வைக்க வேண்டும், அப்போதுதான், ஈழத்தமிழருக்கு நடந்த, நடக்கின்ற கொடுமைகளை அறியாதவர் கூட அறிந்துகொள்ள முடியும்,” என்றார்.
அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு மாதிரிக் காட்சி நிகழ்வில், இத்திரைப்படத்தில் நடித்த, தமிழ் தெரியாத ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்த நடிகை இந்திரா படத்தை முழுமையாகப் பார்த்துவிட்டு, “இந்த திரைப்படம் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. ஆனால் இந்த அளவிற்கு உணர்ச்சிகரமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கைவில்லை,” என்று கூறி கண்கலங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தை விரைவில் உலகெங்கும் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.