பெண்ணைத் தாக்கிய திமுக முன்னாள் கவுன்சிலர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

பெரம்பலூர் மாவட்டம் பாரதிதாசன் நகரில் பியூட்டி பார்லர் நடத்தி வருபவர் சத்தியா. இவருக்கும் பெரம்பலூர் முன்னாள் தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார் 52 ஆகியோருக்கிடையே பணம் கொடுக்கல் வாங்கல்கள் நிகழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சத்தியாவின் பியூட்டி பார்லருக்குள் நுழைந்து அவரை சரமாரியாக காலால் எட்டி உதைத்து தாக்கினார். உடனிருந்த ஊழியர்கள் தடுத்த போதும் சத்தியாவுக்கு அடிவிழுந்தது. இது குறித்து போலீஸில் அவர் புகார் செய்ததாகவும் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து சத்தியா தாக்கப்பட்டபோது சிசி டிவியில் பதிவான வீடியோ காட்சிகள் தனியார் தொலைக்காட்சியிலும் சமூக வலைதளங்களிலும் ,வாட்ஸ்அப்பிலும் வேகமாக பரவி வந்தது. இதனால் பெரம்பலூர் போலீஸார் அத்தியாவை தாக்கிய தி.மு.க.முன்னாள் கவுன்சிலர் செல்வகுமாரை இன்று கைது செய்தனர்

இந்நிலையில் தி.மு.க.தலைவர், மு.க.ஸ்டாலின் தி.மு.க.முன்னாள் கவுன்சிலர் செல்வகுமாரை திமுக கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து அவரை அதிரடியாக நீக்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது..

‘கழகத்திற்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்திலும், கழகக் கட்டுப்பாட்டினை மீறியும் பெண்மணி ஒருவர் மீது தாக்குதல் நடத்திய பெரம்பலூர் மாவட்டம் சேர்ந்தவர் தி.மு.கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

தனிப்பட்ட பிரச்சினைகள், விருப்பு-வெறுப்புகள் இவற்றின் காரணமாக கழக உறுப்பினர்கள் அடாவடியாக செயல்படும் போக்கினை தி.மு.கழகத் தலைமை அனுமதிக்காது. ரவுடித்தனமாக செயல்படுவது, பெண்களிடம் வரம்பு மீறி நடப்பது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொள்வது போல செயல்படும் கழகத்தினர் யாராக இருந்தாலும் கழக விதிகளின்படி தண்டிக்கப்படுவார்கள்.

கழகத்தினர் இதனை எச்சரிக்கையாகக் கொள்ள வேண்டும். தனி நபரை விட கழகமே உயர்ந்தது என்ற உணர்வின்றி செயல்படுபவர்கள் கடும் நடவடிக்கைக்குள்ளாவார்கள்.’ எனக் கூறியுள்ளார்.