காவிரியில் தமிழகத்திற்கு 310 டிஎம்சி நீரை விடுவித்து விட்டதாகவும் அதனை தமிழகம் பயன்படுத்திக் கொள்ள வில்லை. எனவே மேகதாட்டு அணைக் கட்டிக் கொள்ள தமிழகம் அனுமதிக்க வேண்டும் என கர்நாடக வேளான்துறை செயலாளர் சிங் பேசினார்.
இது குறித்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது…
‘காவிரி நீர் பங்கிடுவது குறித்து அறிவிக்க ஆணையத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ள நிலையில் கர்நாடக அரசு செயலாளர் அறிவிப்பது ஆணையத்தை அவமதிப்பதாகும்.
தமிழகத்தில் உபரிநீரை தடுத்து அணைக்கட்ட இயலாது. ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் கதவணைகள் மூலம் கசிவு நீரை தேக்கி வைக்க முடியும். எனவே தமிழகத்தில் நமக்குள் தண்ணீரை அணைகட்டி தேக்கவில்லை என்று எழும் விமர்சனங்களை கர்நாடகம் சாதகமாக பயன்படுத்த முயற்சிக்கிறது.
எனவே தமிழகத்தில் ராசி மணல் அணைகட்டினால் மட்டுமே 100 டிஎம்சி வரை தண்ணீரை தேக்கி வைக்க இயலும் என்பதை உணர்ந்து உடன் தமிழக அரசு அணைகட்டும் பணி குறித்து கொள்கை பூர்வமாக அறிவிக்க வேண்டும். இது குறித்து விரைவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து வலியுறுத்த உள்ளேன்.
முக்கொம்பில் மணல் மூட்டை போட்டு தேக்குவது பயனற்றது. இரும்பு தூணில் தற்காலிக ஷட்டர்கள் அமைப்பது தான் பாதுகாப்பானது.
தற்போது விவசாயப் பணிகள் துவங்க உள்ள நிலையில் மேட்டூர் அணையில் பாசன தண்ணீரின் அளவை குறைப்பதால் பணிகளை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே கல்லணையில் 5 நாள் முறைப்பாசனம் அமல்படுத்தி முழு அளவு தண்ணீரை விடுவிக்க வேண்டும்’
தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களை பின்பற்றி ஏக்கர் 1 க்கு ரூ 8000 வீதம் ஊக்கத் தொகை முழு மான்யத்தில் தமிழக அரசு வழங்கிட வேண்டும்.
மத்திய அரசு உற்பத்தி செலவை கணக்கிட்டு லாபகரமான விலை நிர்ணயம் செய்யும் என்று எதிர்பார்த்த நிலையில் குவிண்டால் 1க்கு கு200 வீதம் அறிவித்துள்ளது ஏமாற்றமளிக்கிறது.
எனவே விவசாயிகள் சிரமத்தை உணர்ந்து தமிழக அரசு ஊக்கத்தொகையாக குவிண்டால் 1க்கு ரூ 400 வீதம் வழங்கி பாதுகாத்திட முதலமைச்சரை வேண்டுகிறோம்’ என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில தலைவர் த.புண்ணியமூர்த்தி, தஞ்சை மாவட்ட தலைவர் துரை பாஸ்கரன், மாவட்ட செயலாளர் மணி, மகேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.