சுல்தான் படம் வெற்றி பெற்றதற்காக நன்றி கூறும் விழா சென்னையில் நடைபெற்றது.
அந்த விழாவில் கலந்து கொண்ட அப்படக்குழுவினரிடையே நடிகர் கார்த்தி பேசியதாவது..
‘இப்படத்தை பார்த்து வாழ்த்தியவர்களுக்கு மிக்க நன்றி. இப்படத்தின் கதையை கேட்கும்போது நான் 10 வயது சிறுவனாக உணர்ந்தேன். நான் என்ன சொன்னாலும் கேட்பதற்கு 8 அடியில் கடா மாதிரி ஒரு பாத்திரம். அதேபோல், குள்ளமாக ஒரு பாதுகாவலர். இதுபோக, 100 அடியாள்கள். என்னை பாதுகாப்பது தான் அவர்களின் வேலை. எப்போதும் என்னைச் சுற்றியே இருப்பார்கள் என்று கேட்கும்போது கற்பனைக் கதை போல தோன்றியது. அனைவரும் அதை விரும்புவோம்.
இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன், லால் சார் கண்டிப்பாக இப்படத்தில் நடிக்க வேண்டும் என்றார். அவர் கூறியதைப் போல லால் சார் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.
மயில்சாமியின் நகைச்சுவையை நான் மிமிக்ரி செய்ய முயற்சி செய்யும் அளவிற்கு அளப்பரியதாக இருக்கும். அதேபோல, யாருக்கு என்ன தேவையோ அதை கடன் வாங்கியாவது செய்யக் கூடியவர். எம்.ஜி.ஆர்.-ன் குணத்தை பின்பற்றி வருகிறார்.
காமராஜ், சென்றாயன், என்று ஒவ்வொருவரும் நன்றாக நடித்திருந்தார்கள். பாடல்களிலும் கதையைக் கூறி யாரையும் எழுந்து போக விடாமல் இசையமைத்த இசையமைப்பாளர்களுக்கு நன்றி.
அர்ஜெயின் ‘தலையா’ கதாபாத்திரத்தை அனைவரும் ரசிக்கிறார்கள். இப்படத்தின் ஒவ்வொரு பாத்திரங்களும் ஒரு ஓவியம். அதை வடிவமைத்த பெருமை இயக்குநர் பாக்கியராஜ் கண்ணனையே சேரும்.
இப்படத்தை திரையரங்கிற்கு குடும்பத்துடன் வந்து செல்கிறார்கள். குழந்தைகள் ஆரவாரத்துடன் பார்த்து மகிழ்வதாக என்னிடம் தொடர்புக் கொண்டு பேசும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
மேலும், இப்படம் திரையரங்கிற்கான படம், அதற்காக 3 வருடங்கள் பொறுமையாக இருந்து வெளியிட்ட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிற்கு நன்றி. ஓடிடியில் இப்படத்தை வெளியிட்டிருந்தால் இந்த அளவு பாராட்டுக்கள் வந்திருக்காது.
அதேபோல், பாதுகாப்போடு ஒரு திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையும் மக்களிடத்தில் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
அனைவர் பற்றியும் பேசிவிட்டு கதாநாயகி ராஷ்மிகாவைப் பற்றி பேசவில்லையென்றால் எப்படி? இப்படத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாக நடித்திருந்தார். அவருக்கு இந்த நேரத்தில் மிக்க நன்றி என்றார்.