திரைப்பட ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா 18.2.2021 முதல் 25.2.2021 வரை நடைபெறவுள்ளது. இந்திய திரைப்படத் திறனாய்வுக் கழகம் பிவிஆர் உடன் இணைந்து இவ்விழாவை நடத்துகிறது.
உலகெங்கிலும் உள்ள 53 நாடுகளில் இருந்து 37 மொழிகளில் (10 இந்திய மொழிகள் உட்பட) 92 திரைப்படங்கள் பங்குபெறவுள்ளன. 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சி 18.2.2021 அன்று பிவிஆர் மல்டிபிளெக்ஸின் சத்யம் திரையில் நடைபெறும். 25.2.2021 அன்று பிவிஆர் மல்டிபிளெக்ஸின் சத்யம் திரையில் நிறைவு விழா நடைபெறும்.
பிவிஆர் மல்டிபிளெக்ஸ் (முன்பு சத்யம் சினிமாஸ் – சாந்தம், சீசன்ஸ், சிக்ஸ் டிகிரீஸ், செரீன் திரைகள்) மற்றும் காசினோ சினிமாஸ் ஆகிய திரையரங்குகளில் 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பங்குபெறும் திரைப்படங்கள் திரையிடப்படும்.
சென்னை மற்றும் தில்லியில் உள்ள பல்வேறு வெளிநாட்டு தூதரகங்களின் உயரதிகாரிகள் திரைப்பட விழாவில் விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள். தொடக்க திரைப்படமாக பிரான்சு நாட்டின் ‘தி கேர்ள் வித் ஏ பிரேஸ்லெட்’ இருக்கும். லொகார்னோ திரைப்பட விழாவிற்கும் இத்திரைப்படம் அனுப்பப்படுகிறது. நிறைவு திரைப்படமாக ஜெர்மனி நாட்டை சேர்ந்த ‘ஐ வாஸ், ஐ ஆம், ஐ வில் பி’ இருக்கும்.
ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களான ‘ஆப்பிள்ஸ்’, ‘குவூ வாடிஸ், ஆய்டா?’, ‘லிஸன்’, ‘தி ஸ்லீப் வாக்கர்ஸ்’, ‘ஆக்னெஸ் ஜாய்’, ‘ரன்னிங் அகைன்ஸ்ட் தி விண்ட்’ மற்றும் ‘ரன்னிங் டு தி ஸ்கை’ ஆகியவை 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும்.
மேலும், கேன்ஸ் திரைப்பட விழா, பெர்லின் திரைப்பட விழா, ஈரான் திரைப்பட விழா, வெனிஸ் திரைப்பட விழா, ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா, பூசான் சர்வதேச திரைப்பட விழா ஆகியவற்றில் பங்கேற்ற மற்றும் வெற்றி பெற்ற திரைப்படங்களும் 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும்.
நாடுகள் வரிசையில், ஈரானில் இருந்து 11 திரைப்படங்களும், பிரான்சில் இருந்து ஆறு திரைப்படங்களும், ஹங்கேரியில் இருந்து நான்கு திரைப்படங்களும், சிலியில் இருந்து இரண்டு திரைப்படங்களூம், இந்திய பனோரமாவில் நான்கு தமிழ் திரைப்படங்கள் உள்ளிட்ட 17 திரைப்படங்களும் திரையிடப்படும். தமிழ் திரைப்படங்களுக்கான போட்டியில் 13 திரைப்படங்கள் கலந்துகொள்கின்றன.
தமிழ் திரைப்படங்களுக்கான போட்டிக்காக நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களின் பெயர்கள் வருமாறு: ‘லேபர்’, ‘கல்தா’, ‘சூரரைப் போற்று’, ‘பொன்மகள் வந்தாள்’, ‘மழையில் நனைகிறேன்’, ‘மை நேம் இஸ் ஆனந்தன்’, ‘காட்ஃபாதர்’, ‘தி மஸ்கிட்டோ பிலாசபி’, ‘சீயான்கள்’, ‘சம் டே’, ‘காளிதாஸ்’, ‘க/பெ ரணசிங்கம்’ மற்றும் ‘கன்னி மாடம்’.
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் முதல்முறையாக ஆப்கானிஸ்தான், அல்பேனியா, அங்கோலா, எதியோபியா, கிர்கிஸ்தான், லெபனான், மோனாகோ & ருவாண்டா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து திரைப்படங்கள் கலந்து கொள்கின்றன.
மேலும், திரை மற்றும் இலக்கிய துறைகளை சேர்ந்த வல்லுநர்களால் எட்டு கருத்தரங்குகள் நடத்தப்படும்.
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் பிவிஆர் மல்டிபிளெக்ஸ், சத்யம், #8, திரு வி க சாலை, பீட்டர்ஸ் காலனி, ராயப்பேட்டை, சென்னை – 600014 என்னும் முகவரியில் பிப்ரவரி 12-இல் இருந்து காலை 10.30 மணியில் இருந்து மாலை 6 வரை பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், www.icaf.in / www.chennaifilmfest.com / www.bookmyshow.com ஆகிய இணையதளங்களிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.