2.0 Movie Review

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்தியாவின் ஜாக்கிச்சான் என பெயர் பெற்ற அக்‌ஷய்குமார்  இருவரும் இணைந்து நடித்துள்ள படம் 2.0.  முழுவதும் 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் லைக்கா புரடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார்.

இயக்குனர் ஷங்கர் தன்னுடைய அனைத்து படங்களிலுமே அதிரடியான சமூக கருத்துக்களை கூறி வருபவர். இந்தப்படத்தில் அவர் என்ன கூறியிருக்கிறார்?

சென்னையில் ஒரு நாள் பரபரப்பான நேரத்தில் செல்போன்கள் அனைத்தும் வானத்தை நோக்கி பறிக்கப்பட்டு மறைகிறது. மக்கள் கடும் குழப்பத்தில் இருக்கும் நிலையில் சிலர் கொடூரமாக கொல்லப்படுகின்றனர்.

இந்தக்கொலைகளுக்கான காரணத்தையும், செல்போன்கள் மாயமானதை கண்டுப்பிடிக்கும் வேலையும் விஞ்ஞானி ரஜினியிடம் கொடுக்கப்படுகிறது. அவர் தன்னுடைய ரோபோ ‘சிட்டி’யுடன் களமிறங்குகிறார். இந்த மர்மங்களின் காரணம் தெரிய வந்ததா இல்லையா? என்பதை இயக்குனர் ஷங்கர் தன்னுடைய வழக்கமான பிரமாண்டத்துடன் சொல்லியிருக்கிறார்.

பறவைகளை நேசித்து, பாதுகாத்து வரும் பறவையியல் (Ornithology) ஆய்வாளர், அக்‌ஷய்குமார்.  தற்கொலை செய்து கொள்ளும் முதல் காட்சியே பரபரப்பை ஏற்படுத்துகிறது. சிறப்பாக நடித்து மனதில் இடம் பிடிக்கிறார். கம்பீரமாக காட்சியளிக்கிறார். அவர் வில்லனா, இல்லை ஹீரோவா என்பதை படம் பார்ப்பவர்களின் விருப்பத்திற்கே விட்டுள்ளார் ஷங்கர். ரசிகர்களுக்கு இங்கே தான் ஒரு ஜெர்க்!!!

வசீகரன் கெட்டப்பில் வரும் ரஜினியைவிட சில காட்சிகளில் சிட்டியாக வரும் ரஜினிதான் டாப்பு.. ‘நிலா’ ரோபாவாக வரும் எமிஜாக்சனிடம் ‘சிட்டி’ ரஜினி செய்யும் காதல் குறும்பு வாவ்…. இன்னும் சில காதல் காட்சிகள் இல்லையே என ஏங்கவைக்கிறது. சிட்டி, நிலா ஜோடி பெர்ஃபெக்ட். சிட்டி கொடுக்கும் குக்கூ…. சவுண்டு சூப்பர். இதுதாண்டா.. சூப்பர்ஸ்டார் என விசிலடிக்கவைக்கிறது. ஷங்கர் ரஜினியை இன்னும் பயண்படுத்தியிருக்கலாம்.

பிரமாண்டமான செட், விசுவல் எஃபெக்ட்ஸ், கேமிரா மிரட்டல் என படம் வேற லெவல். இனிமேல் இந்தியாவில் தயாரிக்கப்படும் 3டி படங்களுக்கு இந்தபடமே ‘பெஞ்ச்மார்க்’ திரைக்கதைக்கு கொடுக்க வேண்டிய முக்கியதுவத்தை விசுவலுக்கு காட்டி மிரட்டியிருக்கிறார் ஷங்கர். ஸ்டேடியத்தில் நடக்கும் க்ளைமாக்ஸ் ஃபைட் ஷங்கர் எதிர்பார்த்த ரசிகர்களை சென்றடையும்.

புறா மீது சவாரி செய்யும் குட்டி ரோபோ சிறுவர்களை கவரும். இதுபோல் இன்னும் பல சர்பிரைஸ்களுக்கு 2.0 படத்தை 3டியில் பார்க்க தியேட்டருக்கு போங்க.