‘சத்தியவான் சாவித்திரி’ – விமர்சனம்!
Sathiyavan Savithri Review: A Tense Legal Battle Where Emotion Meets Strategy
புராணக் கதைகளில் எமதர்மனிடம் வாதாடித் தன் கணவனின் உயிரை மீட்டெடுத்த சாவித்திரியைப் போல, நவீன காலத்து நீதிமன்ற அறையில் நீதியின் தராசைத் தன் கணவனுக்காகச் சாய்க்கப் போராடும் ஒரு பெண்ணின் கதையே ‘சத்தியவான் சாவித்திரி’.
சட்டப் படிப்பை முடித்த கையோடு சாருகேஷுடன் இல்லற வாழ்வைத் தொடங்கும் கீர்த்தி சுரேஷ், தோல்வியே அறியாத மூத்த வழக்கறிஞர் மிஷ்கினிடம் தொழில் பழகுகிறார். முதல் வழக்கிலேயே குருவை வீழ்த்திப் புகழ் பெற்றாலும், கருச்சிதைவு எனும் பேரிடி அவரைத் தொழில் வாழ்க்கையிலிருந்து ஒதுங்க வைக்கிறது. தாய்மைக்கான ஏக்கத்துடன் நாட்களை நகர்த்தும் அவரது வாழ்வில், ஷில்பா மஞ்சுநாத் கொலை வழக்கில் கணவர் சாருகேஷ் கைதான செய்தி பேரிடியாக இறங்குகிறது. கணவனைக் காக்க மீண்டும் கறுப்பு அங்கி அணியும் கீர்த்திக்கு, பழிவாங்கும் வெறியுடன் அரசு வழக்கறிஞராக எதிர்முனையில் நிற்கும் மிஷ்கின் சவாலாகிறார்.
கீர்த்தி சுரேஷ் தனது கண்களாலேயே பல பக்க வசனங்களைப் பேசியிருக்கிறார். ஒருபுறம் கணவனை இழந்துவிடுவோமோ என்ற மனைவியின் பதற்றம், மறுபுறம் எதிராளியின் வாதங்களை உடைக்கும் வழக்கறிஞரின் கூர்மை என இரு துருவ உணர்வுகளையும் அநாயாசமாகக் கையாண்டுள்ளார். மிஷ்கின் திரையில் தோன்றும் ஒவ்வொரு நொடியும் தனது தனித்துவமான உடல்மொழியால் காட்சிகளுக்குக் கனத்தைச் சேர்க்கிறார். சாருகேஷின் இயலாமையும், பாலசரவணனின் டைமிங் நகைச்சுவையும் திரைக்கதைக்குப் பலம்.
அருள் வின்சென்ட்டின் ஒளிப்பதிவு நீதிமன்ற அறையின் இறுக்கத்தை அப்படியே பார்வையாளர்களுக்குக் கடத்துகிறது. சாம் சி.எஸ்-ன் பாடல்கள் சோடை போனாலும், பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். ஆரம்பக் காட்சிகளின் சினிமாத்தனமான நகர்வைத் தாண்டி, இரண்டாம் பாதியில் கொலை வழக்கின் முடிச்சுகளை இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் அவிழ்க்கும் விதமும், பிரசன்னா ஜி.கே-வின் படத்தொகுப்பும் படத்தைக் கரை சேர்க்கின்றன.
இறுதித் தீர்ப்பு: ஆரம்பத் தடுமாற்றங்களை மறக்கடிக்கும் கிளைமாக்ஸ் திருப்பத்திற்காக இந்தச் சட்டப் போராட்டத்தை நிச்சயம் பார்க்கலாம்.