2K Love Story Movie Review
கார்த்திக்கும் (ஜெகவீர்), மோனியும் (மீனாட்சி கோவிந்தராஜன்) இருவரும் பள்ளி பருவக் காலத்து நண்பர்கள். ஒன்றாகவே கல்லூரிப் படிப்பினை முடித்து விட்டு இருவரும் இணைந்து, சக நண்பர்களுடன் சேர்ந்து ‘ப்ரி வெட்டிங் ஃபோட்டோஷூட்’ நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கார்த்திக் – மோனிகா படித்த கல்லூரியின் ஜூனியர் பவித்ரா (லத்திகா பாலமுருகன்), கார்த்திக்கை காதலிக்க துவங்குகிறார். இதனால், மோனிகா, பவித்ரா இடையே விரிசல் ஏற்படுகிறது. இதனிடையே, கார்த்திக் – பவித்ரா இருவரும் ஒரு விபத்தில் சிக்குகின்றனர். அதி, பவித்ரா மரணமடைகிறார். அதன் பிறகு, கார்த்திக்கிற்கும் மோனிக்கும் இடையே காதல் இருப்பதாக புரிந்து கொள்ளும் அவர்களது பெற்றோர்கள், இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்கின்றனர். அந்த திருமணம் நடந்ததா, இல்லையா? என்பதே ‘2K லவ் ஸ்டோரி’ திரைப்படத்தின் கதை.
அறிமுக நடிகர் ஜெகவீர், நாயகனாக நடித்திருக்கிறார். தன்னால முடிந்த அளவிற்கு கதாபாத்திரத்தை தாங்கி நிற்கிறார். ஒரு சில காட்சிகளில் இன்னும் நண்ராக நடித்திருக்கலாம் என்ற எண்ணத்தை ரசிகர்களிடத்தில் ஏற்படுத்திவிடுகிறார். மற்றபடி குறை சொல்ல முடியாத நடிப்பினை வழங்கியிருக்கிறார்.
படத்தின் ஆணிவேராக மீனாட்சி கோவிந்தராஜன் கதாபாத்திரம். அதை க்ளைமாக்ஸ் வரை அந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். ஜெகவீர் – லத்திகா பாலமுருகன் இருவரும் நெருக்கமாக பழகும் காட்சிகளில், தன்னுடைய பொசசிவ்னெஸ்’ னை அழகாக வெளிப்படுத்துகிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் தன்னுடைய தோழியின் பேச்சினை கேட்டு மனம் தடுமாறும் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்துகிறார்.
ஜெகவீரை காதலியாக நடித்திருக்கும் லத்திகா பாலமுருகன், அப்பாவியான நடிப்பின் மூலம் ரசிகர்களை எளிதில் கவர்ந்து விடுகிறார்.
பால சரவணன், சிங்கம்புலி கோஷ்டியினர் சிரிக்க வைக்கினறனர். ஜெயபிரகாஷ், நிரஞ்சன் ஜெயபிரகாஷ், ஹரிதா ஆகியோர் கதாபாத்திரங்களுக்கேற்றபடி நடித்து இருக்கின்றனர்.
‘2கே லவ் ஸ்டோரி’ வழக்கமான காதல் கதையாக இருந்தாலும், இன்றைய இளம் தலைமுறையினரின் காதல், காதல் பிரிவு, நட்பு, திருமணம் குறித்த புரிதல்கள் அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் தேவையற்ற காட்சித்திணிப்புகளின்றி திரைக்கதை தெளிவாக இருப்பதால் ரசிக்க முடிகிறது.
ஒளிப்பதிவு, எடிட்டிங், டி. இமானின் பாடல்கள், பின்னணி இசை ஆகியன, படத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது.
வழக்கமான ‘காதலன் – காதலி – காதலனின் தோழி’ ஒன்லைனை 2கே ஃப்ளேவரில் பரிமாற முயன்றிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன். ஆனால், ஆழமில்லாத கதாபாத்திரங்கள், மேலோட்டமான காட்சிகள், செயற்கையான ஸ்டேஜிங், புதுமையில்லாத திருப்பங்கள், வழக்கொழிந்து போன எமோஷன் காட்சிகள் எனச் சறுக்கல்கள் எழுத்தில் நிறைந்திருக்கின்றன.
ஆண், பெண் இருவரும் நெருக்கமாக பழகினால் அது காதல் மட்டுமே. என்ற கருத்தினை, நட்பும் இருவருக்குள்ளும் கடைசி வரை அழுத்தமாகவே இருக்கும் என்பதை, இயக்குநர் சுசீந்திரன் தன்னுடைய அழகான திரைக்கதையின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். நட்பாக பழகியவர்கள், காதலர்களாக எப்படி ஒன்று சேரமுடியாது என்பதையும், வசனங்கள் மூலம் அழகாக வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு.
திரைக்கதையின் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி, விறுவிறுப்பாக அமைத்திருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும்.
இயக்குநர் சுசீந்திரன், காதல் கதை படத்தின் மூலமாக நட்புக்கு மரியாதை செய்திருக்கிறார்.
‘2K லவ் ஸ்டோரி’ – காதலர்களுக்கு மட்டுமானதல்ல. நண்பர்களுக்கும் தான்!