‘சாந்தி டாக்கீஸ்’ நிறுவனம் சார்பில், அருண் விஷ்வா தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம், ‘3 BHK’. இயக்குநர் ஸ்ரீ கணேஷ் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தினில் சரத்குமார் ,தேவயானி, சித்தார்த் மீதா ரகுநாத் ,யோகி பாபு , சைத்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சென்னை, தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரியும் சரத்குமார், மனைவி தேவயானி மகன் சித்தார்த், மகள் மீதா ரகுநாத் ஆகியோருடன் வாடகை வீட்டில், எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவரது நெருங்கிய உறவினர்கள் சொந்த வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். சரத்குமாருக்கு சொந்த வீடு இல்லாததால், அவருக்கான மரியாதை கிடைக்கவில்லை என நினைக்கிறார். அதனால், அடுக்குமாடி குடியிருப்பில், மூன்று படுக்கையறை கொண்ட ஒரு வீட்டினை சொந்தமாக வாங்க முடிவு செய்கிறார். சிக்கனமாக வாழ்ந்து பணத்தை சேமிக்கும் போதெல்லாம் வேறு ஒரு செலவுக்காக அந்த பணம் செலவிடப்படுகிறது. வருடங்கள் கழிய, முதுமை அவரின் சொந்த வீடு கனவினை கலைக்கிறது. பிள்ளைகளை சார்ந்து வேண்டிய சூழல் உருவாகிறது. சரத்குமாரின் சொந்த வீடு வாங்கும் கனவை நனவாக்குவதற்காக, அவரது பிள்ளைகள் திட்டமிடுகின்றனர். அது நடந்ததா, இல்லையா? என்பது தான் இப்படத்தின் கதை.
வாசுதேவன், என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரத்குமார், படம் முழுவதும் ஒரு விதமான இறுக்கத்துடன் நடித்திருப்பதால், அந்த கதாபாத்திரத்தில் செயற்கை தன்மை ஏற்படுகிறது. எல்லா சூழ்நிலையிலும் அப்படி இருப்பது, அந்த கதாபாத்திரத்தின் மீது எந்த ஈர்ப்பினையும் ஏற்படுத்த வில்லை! இயக்குநர் ஸ்ரீ கணேஷ், நடிக்கத்தெரிந்த நடிகரை சரியாக பயன்படுத்தவில்லை.
சரத்குமாரின் மனைவியாக நடித்திருக்கும் தேவயானி, நடுத்தர குடும்பத் தலைவிகளின் நிலையை, உடல்மொழியால் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
சரத்குமாரின் மகனாக நடித்திருக்கும் சித்தார்த், பள்ளி மாணவர், கல்லூரி மாணவர், வேலைக்கு செல்லும் இளைஞர் என பல்வேறு வயதிற்கான ஒப்பனை, பாவனைகளுடன் அந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக தோன்றி, நடித்திருக்கிறார். படத்தின் பெரும் பலமாகவே இருக்கிறார்.
சரத்குமாரின் மகளாக நடித்திருக்கும் மீதா ரகுநாத், மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அண்ணன் சித்தார்த்துடன் சண்டை போடும் காட்சி, படிக்க வைக்கும் காட்சி, என பல அருமையான காட்சிகள்.
சித்தார்த்தின் தோழியாக நடித்திருக்கும் சைத்ரா குறையில்லாமல் நடித்துள்ளார்.
யோகி பாபு, சிரிக்க வைக்கிறார்.
அம்ரித் ராம்நாத் இசை, ஒளிப்பதிவாளர்கள் தினேஷ் கிருஷ்ணன்.பி மற்றும் ஜிதின் ஸ்டானிஸ்லாஸ் ஆகியோரது ஒளிப்பதிவு பலத்தின் பலமாக இருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் ஸ்ரீ கணேஷ், நடுத்தர குடும்பத்தினரின் சொந்த வீடு கனவினை, உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார். நடுத்தர மக்கள் எதிர்காலத்திற்காக ஏங்கி.. நிகழ்கால சந்தோஷத்தை அனுபவிக்க மறந்து விடுகிறார்கள் என சொல்லி இருப்பதும் ரசனைக்குரியதாக இருக்கிறது.
கடன் வாங்காமல், சேமித்து அதில் வீடு வாங்க வேண்டும் என்ற சரத்குமாரின் கனவு கலைவதும், சித்தார்த், சொந்த வீடு வாங்குவதற்காக கடன் வாங்குவதும், இன்றைய சூழலை பிரதிபலிக்கிறது.
‘3 BHK’ – அநேக மக்களின் கனவு!