சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து சூர்யாவின் நடிப்பினில் இரண்டு வருடங்களுக்கு பிறகு தியேட்டரில் வெளியாகும் படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இயக்கி இருக்கிறார், இயக்குநர் பாண்டிராஜ். இதில் சூர்யாவுடன் பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், வினய், சூரி, இளவரசு, தேவதர்ஷினி, ‘கோமாளி’ புகழ் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஊர் பெரியவர் சத்யாரஜ், சரண்யா பொன்வண்ணன் தம்பதியின் ஒரே மகன் சூர்யா, ஒரு வக்கீல். அவருக்கு எல்லோருக்கும் உதவும் குணம். இவருடைய சித்தப்பா வேல.ராமமூர்த்தி குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிறார். இதையடுத்து சில கொலைகள் நடக்கிறது. இதை ஆராயும் போது பல பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுக்கிறது. இதனால் சூர்யாவுடன் அவரது மொத்த குடும்பமும் சிக்கிக் கொள்கிறது. அப்படி என்ன நடந்தது? பிரச்சனைகளிலிருந்து அவர்கள் விடுபட்டனரா இல்லையா? என்பது தான் படத்தின் கதை.
சூர்யா ரசிகர்களுக்கான பொழுதுபோக்குடன் ஒரு ஸ்டாரங்க் மெஸேஜினை கொடுத்து இருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். சூர்யா, பிரியங்கா மோகன் இருவருக்குமிடையே நடக்கும் காதல் களேபரங்கள் ரசிக்க வைக்கின்றன. பிரியங்கா மோகன் இளைஞர்களை வெகுவாக கவருவதுடன், வல்லுறவு ஆபாசக் காட்சிகளை ரசிப்பவர்களை வெட்கப்பட செய்திருக்கிறார். அவர் பேசும் வசனங்கள் ஆண்களை சிந்திக்கவும், பெண்களை தைரியமும் படுத்துகிறது. கலகலப்பாக நடித்தும், எமோஷலானாக நடித்தும் நடிப்பினில் தனி கவனமும் பெறுகிறார்.
சூர்யா, காதல் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் பரவசப்படுத்துகிறார். சண்டைக்காட்சிகளில் கனல் பறக்கிறது. சூர்யா தலைமையில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ்பாஸ்கர் ‘மணப்பெண்ணை’ கடத்த திட்டமிடும் காட்சியில் குடும்பத்துடன் சேர்ந்து சிரிக்கலாம். இப்படி ஒரு பக்கம் சிரிக்க வைத்தால், இன்னொரு பக்கம் இளவரசு, தேவதர்ஷினி ஜோடியினரும் சிரிக்க வைக்கின்றனர். மேலும் சூரியுடன் சேர்ந்து சூரி, விஜய் டிவி இராமர், தங்கதுரை, புகழ் ஆகியோரும் தங்கள் பங்கினை கொடுத்துள்ளனர்.
நயவஞ்சக புன்னகையோடு கொடூரத்தின் உச்சமாக வலம் வருகிறார், வில்லன் வினய். பல்வேறு பலம் பொருந்திய அவரை க்ளைமாக்ஸில் சூர்யா எளிதில் வீழ்த்துவது ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.
ரத்னவேலு தனது ஒளிப்பதிவின் மூலம் சில காட்சிகளில் நடிகர்களை மெருகூட்டி காட்டுவதில் தவறி இருக்கிறார். அவரைப்போலவே காஸ்ட்யூம் டிசைனரும் நடிகர்களின் மேல் பெரிதாக அக்கறை காட்டவில்லை! உதாரணமாக ‘உள்ளம் உருகுதய்யா’ பாடலை சொல்லலாம்.
வழக்கமான பாணியில் டி.இமானின் இசை.
ஒரு அழுத்தமான கதையை அனைவரும் பார்க்கும் வண்ணம், பொழுதுபோக்கு திரைப்படமாக எழுதி, இயக்கியிருக்கிறார், பாண்டிராஜ்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் செய்தியாக ஊடகங்களில் வந்து, அவ்வப்போது அதிர்வலைகளை ஏற்படுத்தும். சில வாரங்களில் அது அப்படியே மறைந்தும் போகும். சில வருடங்களுக்கு முன்னர், பொள்ளாச்சி பாலியல் வழக்கும் தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதுபோல் ஒரு சம்பவத்தினை சொல்வதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு தைரியமும், தன்னம்பிக்கையையும் கொடுக்கும்படியாக உருவாக்கி இருப்பது பாராட்டுக்குரியது.
சூர்யாவின் நடிப்பினில் சமூக அக்கறையுடன் கூடிய மற்றுமொரு படம் ‘எதற்கும் துணிந்தவன்’