ஆதித்தொழிலான வேட்டைத்தொழிலை குலத்தொழிலாளாக கொண்டவர் வேல.ராமமூர்த்தி. மனைவியை இழந்த அவர் தனது ஒரே மகன் கரு.பழனியப்பனுடன் காட்டுக்குள் வேட்டையாடி பிழைப்பு நடத்தி வருகிறார். ஈட்டி மூலம் வேட்டையாடிய அவர் காலப்போக்கில் துப்பாக்கி செய்துயாதன் மூலம் வேட்டையாடுகிறார். தனது வேட்டைத் திறன் அனுபவத்தையும், வேட்டையாடும் கருவிகளின் நுட்பத்தையும் மகனுக்கு கற்றுக்கொடுக்கிறார்.
காலப்போக்கில் வேல.ராமமூர்த்தி இறந்தவுடன் வாலிப வயதை அடைந்த கரு.பழனியப்பன் தனது நண்பர்களுடன் வேட்டைக்கு செல்கிறார். அப்போது வேட்டையாடுவதை தடை செய்கிறது அரசு. வேட்டைத்தொழிலயே நம்பிய அவர், வேறு பிழைப்பின்றி நண்பர்களின் வற்புறுத்தலினாலும், வலுக்கட்டாயத்தினாலும் துப்பாக்கி செய்து கொடுக்கிறார். அது அவரை எங்கே கொண்டு சென்றது? அவர் வாழ்க்கை என்ன ஆனது என்பது தான ‘கள்ளன்’ படத்தின் கதை.
இயக்குநர் அமீரின் உதவியாளர், எழுத்தாளர் சந்திரா தங்கராஜ் இயக்கியிருக்கும் கள்ளன் எப்படி இருக்கிறது?
இயக்குநர்களில் ஆண், பெண் வித்தியாசம் எதுவும் இல்லை. எல்லோராலும் எல்லாவிதமான திரைப்படமும் கொடுக்க முடியும் என்பதை புரட்சி ‘எழுத்தாளர்’ அறிமுக இயக்குநர் சந்திரா தங்கராஜ் ‘கள்ளன்’ படத்தின் மூலம் தனது வருகையை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். முதல் படத்திலேயே முழுக்க முழுக்க ஒரு பரபரப்பான ஆக்ஷன் படத்தினை இயக்கியதன் மூலம் தனி கவனம் பெறுகிறார்.
கதைக்கும், கதாபாத்திரத்திற்கும் கச்சிதமாக பொருந்தி போகிறார், கரு.பழனியப்பன். அவரது நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பினை கொடுத்துள்ளனர். அதிலும், நமோ நாராயணன் கதாபாத்திரம் சிறப்பு கவனம் பெறுகிறது. மேலும் சௌந்தரராஜா உள்ளிட்ட நடித்த பலரும் கதாபாத்திரங்களை உயிருடன் உலவச் செய்திருக்கிறார்கள்.நாயகியாக நடித்திருக்கும் நிகிதாவுக்கு பெரிய வேலை இல்லை என்றாலும், சில இடங்களில் கவனம் பெறுகிறார்.
படத்தில் நடித்த ஒட்டுமொத்த நடிகர்களையும் தனது நடிப்பின் மூலம் ஓரம் கட்டியுள்ளார், நடிகை மாயா. கெஞ்சுவதிலும், கொஞ்சுவதிலும் சூப்பராக நடித்திருக்கிறார். அதிலும் நமோ.நாராயணன் நெஞ்சினில் ஏறி உட்கார்ந்து அவரை தாக்கும் போது அவரது கண்களில் அப்படி ஒரு கோபம், ஏமாற்றம், விரக்தி. கண்களை அகல விரித்து மிரட்டுகிறார். இவர் பேசும் வசனங்களும் சூப்பர்.
வாழ வேண்டிய நிர்பந்தமும், தவறான சகவாசமும் ‘வேட்டை’ சமூகத்தினை சேர்ந்த ஒருவனை எங்கே கொண்டு நிறுத்துகிறது. என்பதை நேர்த்தியான திரைக்கதையின் மூலம் விவரித்திருப்பதோடு, விறுவிறுப்பான காட்சிகள் மூலம் பதிவுசெய்து இருக்கிறார், இயக்குநர் சந்திரா தங்கராஜ். முதல் பாதியை காட்டிலும் இரண்டாம் பாதி வேகமாக செல்கிறது.
‘கள்ளன்’ கவனிக்கத்தக்கவன்.