ஏ.ஆர்.ரகுமானிடம் கதை சொல்ல விருப்பமில்லை! –  இயக்குநர் அஜய் ஞானமுத்து.

சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னை பீனிக்ஸ்சிட்டி வணிக வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் எஸ் எஸ் லலித் குமார், இயக்குநர் அஜய் ஞானமுத்து, படத்தின் நாயகன் சீயான் விக்ரம், அவரது மகன்  துருவ் விக்ரம், ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், பாடலாசிரியர் தாமரை ஆகியோருடன் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரகுமான் உள்ளிட்ட பட குழுவினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ‘கோப்ரா’ படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களும், ‘இசைப்புயல்’ஏ. ஆர். ரகுமான் மற்றும் அவரது குழுவினர் மேடையில் பாடி, படத்தின் பாடல்களை அறிமுகப்படுத்தி, ரசிகர்களை உற்சாகமடைய செய்தனர்.

விழாவில் இயக்குநர் அஜய் ஞானமுத்து பேசுகையில்,

‘இமைக்கா நொடிகள்’ படம் வெளியாவதற்கு முன் தயாரிப்பாளர் லலித் குமார் என்னை அழைத்து, சீயான் விக்ரம் அவர்களின் கால்ஷீட் இருக்கிறது. அவர்களை வைத்து படமொன்றை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறோம். பணியாற்ற இயலுமா? என கேட்டார். எப்படி என் மீது அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டது என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கான உயரத்தை.. நான் கடக்க வேண்டிய உயரத்தை.. அவர் நிர்ணயித்தார். என் மீதும், என்னுடைய குழுவினர் மீதும், அபார நம்பிக்கை வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் ‘கோப்ரா’வை உருவாக்கி இருக்கிறார்.

படத்தின் இசைக்காக ரஹ்மானை கேட்கலாமா? என கேட்டார். அவர் என்னை ஏதோ ‘பிராங்க் பண்ணுகிறார்’என்று எண்ணி, நானும் சரியென்றேன். சில தினங்கள் கழித்து ரகுமானை அவர்களது வீட்டில் சந்தித்து கதையை சொல்லுங்கள் என சொன்னார். எனக்கோ அவரை சந்தித்து அவருடன் ஒரே ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தது. கதையை விவரிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அவரை அவரது வீட்டில் சந்தித்த உடன், கதையை சொல்ல தயாரா? என கேட்டார். நான் உங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். எடுத்துக் கொள்ளலாமா? எனக் கேட்டேன். பிறகு கதையை விவரிக்க தொடங்கினேன். அவருக்கு கதை பிடித்திருந்தது. இசையமைக்க ஒப்புக்கொண்டார். அதன் பிறகு ஐந்து பாடல்கள் ‘கோப்ரா’விற்காக வழங்கி இருக்கிறார். ஒவ்வொன்றும் அற்புதமானது. அவருடன் இணைந்து பணியாற்றிய ஒவ்வொரு தருணங்களும் மறக்க இயலாதவை. அவரின் பேரன்பை கண்டு வியந்திருக்கிறேன். பின்னணி இசையில் நீங்கள் நிகழ்த்தி இருக்கும் மாயஜால தருணத்திற்காகக் காத்திருக்கிறேன். என்றார்.