இரவின் நிழல்’ – விமர்சனம்!

சூப்பர் ஸ்டார் படத்திலிருந்து சின்ன பட்ஜெட் படங்கள் வரைக்கும் ஃபைனான்ஸ் செய்யும் மிகப்பெரிய சினிமா ஃபைனான்ஸியர் ‘நந்து’வாக நடித்திருக்கிறார், பார்த்திபன். ஒரு நாள் இரவில் கையில் துப்பாக்கியுடன் ஒருவரை சுட்டுக்கொல்ல துடிக்கிறார். யார் அவர்? ஏன்? எதற்காக? என்பதை பார்த்திபனே தனது திரைக்கதை மூலம் விவரிக்கிறார். இது தான் ‘இரவின் நிழல்’ படத்தின் கதை, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

வாழ்க்கையின் ஒவ்வொரு தருணங்களையும் வித்தியாசமாக சிந்திக்கும் பார்த்திபன், தன்னுடைய திரைப்படங்களின் மூலமாகவும் தனது வித்தியாச முயற்சிகளால் சினிமாவுலகினரையும், ரசிகர்களையும் திகைக்க வைத்து வருபவர். இரவின் நிழல் படத்தின் மூலம் உலக சினிமா வரலாற்றில் ஒரு தடம் பதித்துள்ளார். என்று சொன்னால் அது மிகையல்ல. அதாவது சிங்கிள் ஷாட்டிலேயே ஒரு முழு படத்தினையும் எடுத்து முடித்துள்ளார். கேமிராவை ஆன் செய்தால் முழுப்படமும் முடிந்த பின்னர் தான் ஆஃப் செய்யப்படும். நடுவினில் ஏதாவது தடை ஏற்பட்டால் மீண்டும் முதலிருந்து எடுக்கவேண்டும். இப்படியே 22 தடைகள் ஏற்பட்டு 23வது தடவை தடையின்றி முழுப்படத்தினையும் எடுத்து முடித்துள்ளார்.

சிங்கிள் ஷாட்டில் இதற்கு முன்னர் உலக சினிமாக்களில் சில திரைப்படங்கள் வந்திருந்தாலும், ஃபிளாஷ்பேக் காட்சிகள் அடங்கிய படங்கள் வந்ததில்லை. ஆனால் உலகிலேயே முதல் முறையாக இரவின் நிழல் படத்தின் மூலம் அது நடந்துள்ளது. அதாவது வயதடைந்த ஒருவர் தன் வாழ்க்கையை பின்னோக்கி நினைத்துபார்க்கும்படியான திரைக்கதை! ஒரு ஷாட்டிற்கே பல தடவைகள் படமாக்கப்படும் நிலையில் முழுப்படத்தினையும் படமாக்கியிருப்பது மிகப்பெரும் சாதனை!

இரவின் நிழல் படத்தில் நடித்த பார்த்திபன், ஆனந்த் கிருஷ்ணன், சந்துரு, பிரவீன் குமார், ஜோஷுவா சிநேகா குமாரி, பிரிகிடா சகா, சாய் பிரியங்கா ரூத், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் அனைவருமே மனம் கவருகிறார்கள். அதிலும் பிரிகிடா சகா படம் முடிந்த பின்னரும் மனதை விட்டு அகலாமல் இருக்கிறார். அழகிலும் நடிப்பிலும் அசத்தியிருக்கிறார்.

இரவின் நிழல் திரைப்படம் எப்படி எடுக்கப்பட்டது என்பதை 30 நிமிடங்கள் அடங்கிய ஒரு தொகுப்பு திரையிடப்பட்டு இடைவேளை விடப்படுகிறது. அதன் பின்னர் முழுப்படமும் இடை நில்லாது திரையிடப்படுகிறது. இப்படத்தில் இதுவும் ஒரு அனுபவம்.

படத்தின் பெருமுயற்சிக்கு இயக்குனருக்கு அடுத்தபடியாக இருப்பவர் கேமிராமேன் ஆர்தர் வில்சனும் அவர்து டீமும். இவர்களுக்கு அடுத்தபடியாகவோ இணையாகவோ வருபவர், ஆர்ட் டைரக்டர் விஜய் முருகனும் அவரது  டீமும். இப்படி இப்படத்தில் பங்குபெற்ற அனைவருமே ஒரே மரத்தின் கனிகள் என்றே சொல்ல வேண்டும். பார்த்திபனின் கற்பனைக்கு உயிர்கொடுத்த இரவின் நிழல் படத்தில் பங்கு பெற்ற அனைவருக்குமே பாராட்டுக்கள்

ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை காட்சிகளுக்கேற்ப! பாடலில் ‘மாயவா தூயவா’  மனதில் நிற்கிறது. இவரது இசை, இரவின் நிழல் படத்திற்கு உலக அங்கீகாரம் பெற்று தருவதில் பெரும் பங்கு பெற்றுள்ளது.

இரவின் நிழல் திரைப்படத்தின் கதைக்களம் வயது வந்தோருக்கான அழுத்தமான படம். என்பதால், வேறுவகையான பார்வையாளர்களால் அங்கீகரிக்கப்படாமல் விடும் வாய்ப்புகள் இதற்கு உண்டு. இருப்பினும் உலக அளவில் பேசப்படும் தமிழ் சினிமாவாக இப்படம் இருக்கும்.

உலக சினிமாக்களை விரும்பி பார்க்கும் ரசிகர்கள் இப்படத்தை தவறாமல் பார்க்கவேண்டும்.