தமிழ் திரையுலகில் மாறுபட்ட வாழ்வியல் படைப்புகளால், மக்கள் மனங்களை வென்ற இயக்குநர் தங்கர்பச்சான் இயக்கத்தில், நீண்ட இடைவேளைக்கு பிறகு மனித வாழ்வியலை சொல்லும் அழுத்தமாக படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “கருமேகங்கள் கலைகின்றன”. பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன், யோகிபாபு முதன்மை வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்தின் முதல் தோற்றத்தை உலக நாயகன் கமல்ஹாசன் இன்று வெளியிட்டார்.
உலக நாயகன் கமலஹாசன் அவரது அலுவலகத்தில் இன்று இப்படத்தின் முதல் தோற்றத்தை வெளியிட்டார். அப்போது பாரதிராஜா, இயக்குநர் தங்கர்பச்சான் , தயாரிப்பாளர் டி. துரை வீரசக்தி ஆகியோர் உடனிருந்தனர். பாரதிராஜா இப்படம் தமிழ் திரை வரலாற்றில் மிக முக்கியமான படைப்பாக இருக்குமென்று கமல்ஹாசனிடம் கூறினார்.
படம் குறித்து நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் தங்கர் பச்சானிடம் கூறுகையில்…
தமிழ் சினிமாவின் பெருமை மிகு படைப்பாளி பாரதிராஜா ஒரு படைப்பை இந்த அளவு புகழ்ந்து பார்த்ததில்லை. இப்படத்தில் நடித்த பிறகு தான் ஓய்வுபெற்று விடலாம் என்று சொல்லும் அளவுக்கு அவர் கூறியது எனக்கு பேராச்சர்யம். இப்பொழுதே உடனடியாக படம் பார்க்கும் ஆவல் வந்துவிட்டது. விரைவில் படத்தை காட்டுங்கள் என்றார். மேலும் , இயக்குநர் தங்கர் பச்சானுக்கும், தயாரிப்பாளர் டி. துரை வீரசக்திகும் மற்றும் படக்குழுவினருக்கும் தன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மண்சார்ந்த மென்மையான படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் தோற்றம் இணையம் முழுக்க பெரும் வரவேற்பை குவித்து வருகிறது.
படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் படத்தின் பின்னணி இசை பணிகளை செய்கிறார் . விரைவில் படத்தின் டீசர் வெளிவருமென தயாரிப்புக் குழு அறிவித்துள்ளது.