லைட்ஸ் ஆன் மீடியா வழங்கும், இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கும் திரில்லர் படம் “பருந்தாகுது ஊர் குருவி”. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் தயாரிப்பாளர் சுந்தர் கிருஷ்ணா பேசியதாவது..,
இந்த படத்தை நான், சுரேஷ் மற்றும் வெங்கிசந்திரசேகர் மூவரும் இணைந்து தயாரித்துள்ளோம். இங்கு வந்துள்ள திருத்தணி சட்ட மன்ற உறுப்பினர் சந்திரன் அய்யாவிற்கு முதலில் நன்றி. வெற்றி பெற்ற இளம் இயக்குநர்களை வைத்து இந்த விழாவை துவங்க நினைத்து எல்லோரையும் அழைத்தோம். பல நாட்கள் இந்த மேடைக்காக ஏங்கியுள்ளேன், இப்போது அது நிறைவேறியுள்ளது. படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள், இந்த படம் மார்ச் 24ம் தேதி வெளியாகிறது. இப்படத்தை மக்களிடம் கொண்டு செல்லுமாறு அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.
நாயகி காயத்ரி பேசியதாவது,
எனக்கு இப்படத்தில் வாய்ப்பளித்த இயக்குநர் தனபாலன் சாருக்கு நன்றி, மற்ற படங்களைப் போல் இல்லாமல் இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. அதை நான் நன்றாகச் செய்துள்ளேன் என்று நினைக்கிறேன். நடிகர் பிரசன்னா நல்ல ஒத்துழைப்பு தந்தார். கதாநாயகன் நிஷாந்த் உடன் எனக்குக் காட்சிகள் எதுவும் இல்லை ஆனாலும் அவர் செட்டிற்கு வந்து எங்களை ஊக்குவிப்பார். இந்தப் பயணம் எனக்கு மிகவும் முக்கியம். அனைவரும் இப்படத்தை ஆதரிக்க வேண்டும்’ என்றார்.
இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி பேசியதாவது…
‘நடிகர் பிரசன்னா மற்றும் நிஷாந்த் அவர்களுக்கு நன்றி, நாங்கள் ராம் சாரிடம் பணிபுரியும்போது தனபால் அண்ணனை டூட் என்றுதான் கூப்பிடுவேன், எனது தோழர் அவர், இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்’ என்றார்.
இயக்குநர் முத்துக்குமார் பேசியதாவது,
புது இயக்குநர்களின் படைப்பு பல விதமான அனுபவங்களை அளிக்கும், அது போல இப்படமும் உங்களுக்கு ஒரு புது அனுபவத்தைத் தரும். இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நடிகர் பிரசன்னா அவர்களுக்கு நன்றி, படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்’ என்றார்.
நடிகர் வினோத் சாகர் பேசியதாவது..,
தயாரிப்பாளர் சுரேஷும் நானும் பத்து வருட நண்பர்கள். அவரால் தான் இந்த படத்தில் நான் இணைந்தேன். இந்தப் படம் எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது’ என்றார்.
நடிகர் நிஷாந்த் ரூஷோ பேசியதாவது… ‘
பட விழாவிற்கு வந்திருக்கும் வெற்றி இயக்குநர்கள் தான் எங்களின் நாயகர்கள். என்னை ஏமாற்றிய, எனக்குத் துரோகம் செய்த, பாடம் கற்பித்துத் தந்த அனைவருக்கும் நன்றி. உங்கள் முன்னால் நான் ஜெபித்துக் காட்டுவேன். எப்போதும் கதைதான் முக்கியம். இந்தப்படம் சிறந்த அனுபவம் தரும். படத்திற்கு உங்கள் ஆதவரைத் தாருங்கள் நன்றி’ என்றார்.
நடிகர் விவேக் பிரசன்னா பேசியதாவது…
‘எழுத்துக்களால் உலகின் அனுபவத்தை நமக்கு விட்டுச் சென்றவர்கள் எழுத்தாளர்கள். அப்படிப்பட்ட எழுத்தாளர்களால் இந்த மேடை நிறைந்திருப்பது மகிழ்ச்சி. இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் பிடித்த அனுபவமாக இருக்கும். இந்தப்படத்தில் வாய்ப்பளித்த குழுவிற்கு உடன் பணியாற்றிய நண்பர்களுக்கும் நன்றி’ என்றார்.
இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் பேசியதாவது…
‘படத்தை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. நான் இந்த இடத்திற்கு வந்து நிற்க முக்கிய காரணம் ராம் சார். அவர் கற்றுக்கொடுத்தது தான் எல்லாம். அவருக்கு நன்றி. இந்தப்படம் நண்பர்களால் உருவானது. சுந்தர் போட்ட விதைதான் இந்தப்படம். சுரேஷ் சுந்தர் இல்லையென்றால் இது சாத்தியமாகியிருக்காது. கடைசி வரை உடனிருக்கும் நண்பர்கள். வெங்கி சந்திரசேகர் மற்றும் அருண் ஆகியோரும் எங்களுடன் இணைந்து பயணிக்கும் நண்பர்கள். இந்தப்படத்தின் விஷுவல் நன்றாக வந்ததற்குக் காரணம் அஷ்வின் நோயல். மாஸ்டர் ஓம் பிரகாஷ், இசையமைப்பாளர் ரெஞ்சித் உண்ணி சிறப்பாக பணியாற்றியுள்ளனர். நடிகர்கள் படக்குழுவில் பணியாற்றிய அனைவரும் அவர்கள் படம் போல் வேலை செய்தார்கள். எல்லோருக்கும் நன்றி. என் உதவியாளர்கள் நாளைய இயக்குநர்கள். இந்தப்படம் ஒரு சிறப்பான அனுபவம் தரும். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து, ஆதரவளியுங்கள் நன்றி’ என்றார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியதாவது..
‘தனபாலன் அண்ணா, ரஞ்சித் அண்ணா, நான் எல்லாம் ஒன்றாக வேலை பார்த்ததாகச் சொன்னார்கள். ஆனால் அவர் உதவி இயக்குநராக இருக்கும்போது, நான் ஆபிஸ் பாயாக இருந்தேன். எனக்கு முன்னாலே அவர் இயக்குநராக வேண்டியவர். அவரை அறிமுகப்படுத்தும் அளவு நான் பெரிய ஆளில்லை. சினிமாவை ஆழமாகப் புரிந்து கொண்டவர். இவர்களிடம் இருந்து தான் சினிமாவே கற்றுக்கொண்டேன். இத்தனை நீண்ட கால போராட்டத்தைக் கடந்து இந்த மேடையை தனபாலன் அண்ணா கையாண்டது விதம் ஆச்சரியமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. அண்ணாவுக்கு நான் சொல்ல ஒன்றுமில்லை. அவர் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி பெறுவார். மேலும் இந்தப்படக்குழுவிற்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.
இப்படத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். மும்பை மாடல் காயத்திரி ஐயர் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். ராட்சசன் வினோத் சாகர், அருள் D சங்கர், கோடாங்கி வடிவேல், E ராம்தாஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கிஇருக்கிறார். டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் லைட்ஸ் ஆன் மீடியா தனது முதல் படைப்பாக இப்படத்தை தயாரிக்கிறது. சுரேஷ் EAV, சுந்தர் கிருஷ்ணா P.,வெங்கி சந்திரசேகர் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.