மைக்கேல் தங்கதுரை, கேப்ரில்லா செல்லஸ், அஃப்சல் ஹமீத், வினுஷா தேவி, அனுபமா குமார், அக்ஷய் கமல், பிரக்யா நக்ரா, வடிவுக்கரசி, அழகு உள்ளிட்ட பலரது நடிப்பினில், வெளியாகியிருக்கும் படம், ’என் 4’ (N4) . தர்மராஜ் ஃபில்ம்ஸ் சார்பில் இப்படத்தினை தயாரித்து இயக்கியிருக்கிறார், லோகேஷ் குமார்.
‘N4’ காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட மீன் பிடி துறைமுகத்தில், பெற்றோர்களை இழந்த மைக்கேல் தங்கதுரை, கேப்ரில்லா செல்லஸ், அஃப்சல் ஹமீத், வினுஷா தேவி ஆகியோர், மீன் விற்பனை செய்யும் வடிவுக்கரசியின் பராமரிப்பில் இருந்து வருகின்றனர்.
இந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் படகில், கல்லூரி மாணவர் அக்ஷய் அவரது நண்பர்களுடன் அவ்வப்போது வந்து கஞ்சா, சாராயம் உள்ளிட்ட போதை வஸ்துக்களை பயன்படுத்துவது வழக்கம்.
‘N4’ காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் அனுபமா குமார். கணவனை இழந்த அவர், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தனது ஒரே மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மர்மமான முறையில் ஒருவர் துப்பாக்கியால் சுடப்படுகிறார். அந்த குற்றவாளியை காப்பாற்ற இன்ஸ்பெக்டர் அனுபமா குமாரிடம் பேரம் பேசப்படுகிறது. அதற்கு அவர் சம்மதித்தாரா, அவர் ஏன் சுடப்பட்டார்? என்பதே, ‘N4’ திரைப்படத்தின் கதை!
ஃபாத்திமா கதாபாத்திரத்தில் நடித்த அனுபமா குமாரும், மீன் விற்கும் மூதாட்டியான வடிவுக்கரசியும் கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி நடித்து சிறப்பு கவனம் பெறுகின்றனர்.
மைக்கேல் தங்கதுரை, கேப்ரில்லா செல்லஸ், அஃப்சல் ஹமீத், வினுஷா தேவி, அக்ஷய் கமல், பிரக்யா நக்ரா ஆகியோர் ஒரு சில இடங்களில் கவனம் பெறுகின்றனர்.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை கண்கவரும் விதத்தில் படமாக்கியிருக்கிறார், ஒளிப்பதிவாளர் திவ்யங்.
‘மீனு வாசம் வீசுதா.. கடலு சத்தம் கேட்குதா..’ டைட்டில் பாடல் எழுதிய லோகேஷ் குமாருக்கு பாராட்டுக்கள். நல்ல வரிகளுக்கு எளிதான இசையமைத்திருக்கிறார், இசையமைப்பாளர் பாலசுப்பிரமணியம்.ஜி. அவரது பின்னணி இசையும் ஓகே தான்!
பரபரப்பும், விறுவிறுப்புமாக இருந்திருக்க வேண்டிய திரைப்படம், பலவீனமான திரைக்கதையால், ’என் 4’ (N4) திரைப்படத்தை ரசிக்க முடியவில்லை!