விரூபாக்‌ஷா – விமர்சனம்!

சாய் தரம் தேஜ் தனது அம்மாவுடன் அவரது சொந்த ஊருக்கு செல்கிறார். அப்போது ஊர் எல்லையில் சில அமானுஷ்யங்கள் அவர்களை தடுக்கிறது. மீறி ஊருக்குள் செல்கிறார்கள். அந்த ஊரில் இருக்கும் சம்யுக்தா மேனனுக்கும், சாய்தரம் தேஜுக்கும் இடையே காதல் ஏற்படுகிறது.

ஊரிலுள்ள சிலர் வித்தியாசமான முறையில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஊர் முழுவதும் திகிலில் உறைந்து போகிறது. இதற்கெல்லாம் காரணம் தீய சக்தியின் வேலையே என அந்த ஊர் கோயிலின் பூசாரி கூறுகிறார். அந்த தீய சக்தியை அடக்குவதற்காக ஊரை சுற்றியும், கோயிலை சுற்றியும் ஒரு மந்திரத்தால் அடைத்து விடுகின்றனர். ஆனால் தீய சம்பவங்கள் தொடர்கின்றன. அதோடு சம்யுக்தா மேனன் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்கிறார். இது சாய் தரம் தேஜுக்கு தெரிய வருகிறது. அவர் காதலியை காப்பாற்றினாரா? தீய சக்தியின் பின்னணி என்ன? என்பதை கண்டுபிடிக்கும் கதை தான், விரூபாக்‌ஷா.

சற்றே மாறுபட்ட வழக்கமான டெம்ப்ளேட் அமானுஷ்ய திகில் படம் தான் இந்த விரூபாக்‌ஷா. கொஞ்சம் திகில், கொஞ்சம் சஸ்பென்ஸ் கலந்து கொடுத்து இருக்கிறார்கள்.

அறிமுக இயக்குநர் கார்த்திக் வர்மா டண்டு, ரசிகர்களை மிரட்ட முயற்சித்திருக்கிறார். அது ஒரு சில காட்சிகளில் மட்டுமே வொர்க்கவுட் ஆகிறது. இயக்குநர் சுகுமாரின் திரைக்கதை, யூகிக்க முடியாத டிவிஸ்டுகளோடு க்ளைமாக்ஸ் வரை செல்கிறது. திகில் காட்சிகளை விட சஸ்பென்ஸ் காட்சிகள் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது.

நாயகனாக நடித்திருக்கும் சாய் தரம் தேஜ், நாயகியாக நடித்திருக்கும் சம்யுக்தா மேனன் இருவருக்குமான காதல் காட்சிகளை இன்னும் எதிர்பார்க்க வைக்கிறது.

சாய் தரம் தேஜ் இயக்குநரின் தேவையறிந்து நடித்திருக்கிறார். கதாநாயகி சம்யுக்தாவும் அப்படியே. இருவரது நடிப்பினில் குறை சொல்ல முடியாது.

சுனில், பிரம்மாஜி, ராஜீவ் கனகலா, அஜய் உள்ளிட்டவர்களில் அஜயின் நடிப்பு மிரட்டுகிறது.

ஒளிப்பதிவாளர் சம்தத் சைனுதீனின் ஒளிப்பதிவும், இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத்தின் இசையும் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற விரூபாக்‌ஷா தமிழ் ரசிகர்களை கவருவது சற்று கடினமே.