சோனியா அகர்வால், டெல்லி கணேஷ், ராஜேஷ், ஆர். சுந்தர்ராஜன், ரவிமரியா, நெல்லை சிவா ஆகியோருடன் னாறிமுக நடிகர்களான ஜெகா , ஏ. ஆர்.ஜெயகிருஷ்ணா, உமேஷ்,மோனிகா, சஹானா, நிஹாரிகா, லுப்னா அமீர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம், உன்னால் என்னால். ‘ஸ்ரீ ஸ்ரீ கணேஷா கிரியேஷன்ஸ்’ சார்பில், ராஜேந்திரன் சுப்பையா தயாரித்துள்ள இப்படத்தினை, ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா இயக்கியுள்ளார்.
கிராமத்தில் வசித்து வரும் ஜெகா, ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா, உமேஷ் ஆகிய மூன்று இளைஞர்களுக்கும் வெவ்வேறு தேவைகளுக்காக அதாவது கடன் பிரச்சினை, இதய அறுவை சிகிச்சை, காதலித்த பெண்ணை கரம்பிடிக்க என, பணம் அத்தியாவசியமாக, அவசரமாக தேவைப்படுகிறது.
பணத்தினை தேடித்திரியும் இவர்கள் ஒரு இடத்தில் ஒன்று சேர்கிறார்கள். மூவரும் ரியல் எஸ்டேட் புரோக்கர்களாக செயல்பட்டால் அதிக பணம் கிடைக்கும் என்பதால், புரோக்கர் வேலை செய்கிறார்கள். ஆனால் அதில் பெரிதாக பணம் கிடைக்கவில்லை. இக்கட்டான சூழ்நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில், ரியல் எஸ்டேட் தாதா சோனியா அகர்வாலிடம் இருக்கும் ரவிமரியா, ஒருவரை கொலை செய்தால், உங்கள் தேவையைவிட அதிக பணத்தை தருவதாக கூறுகிறார். ஜெகா, ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா, உமேஷ் ஆகிய மூவரும் அரைகுறை மனதுடன் சம்மதிக்கின்றனர். இதற்கிடையே, கொலை செய்ய வேண்டிய நபரை பற்றி தெரிய வரும்போது அதிர்ச்சியடைகின்றனர். பணத்தேவைக்காக இவர்கள் கொலை செய்தார்களா, இல்லையா? என்பதே உன்னால் என்னால் படத்தின் கதை.
நடிப்பினை பொறுத்தவரை ஜெகா, ஏ. ஆர்.ஜெயகிருஷ்ணா, உமேஷ் ஆகிய மூவரில், ஜெகா, உமேஷ் இருவரும் பரவாயில்லை. ஒரு சில காட்சிகளில் ரியல் எஸ்டேட் தாதாவாக நடித்துள்ள சோனியா அகர்வால் முறைத்தபடியே மிரட்டுகிறார். சஹானா, நிஹாரிகா, லுப்னா அமீர் பெயரளவுக்கு நடித்துள்ளார்கள்.
சோடா கோபால் பாத்திரத்தில் ரவி மரியா வருகிறார். வழக்கம்போல் எரிச்சல் ஏற்படுத்துகிறார்.
ராஜேஷ், டெல்லி கணேஷ் போன்ற நடிகர்கள் வீணடிக்கப்பட்டுள்ளனர்.
ஆர். சுந்தர்ராஜன், மோனிகா, நெல்லை சிவா காமடி என்ற பெயரில் படம் பார்ப்பவர்களை கொல்லுகிறார்கள்.
மோசமான திரைக்கதை அமைப்பும், காட்சியமைப்பும் படத்தின் மிகப்பெரும் பலவீனம்.
ஒளிப்பதிவு, இசை ஓகே!
உன்னால் என்னால் – அனுபவமற்ற இயக்குநரின் தேறாத படைப்பு!