முகம் சுழிக்க வைக்கும்  போஸ்டர், ‘பஜனை ஆரம்பம்’ ஆபாச படமா?

ஸ்ரீரங்க நாச்சியார் மூவீஸ் நிறுவனம் சார்பில் எஸ். தோதாத்ரி சந்தானம் தயாரிப்பில், கௌஷிக், யாதவி, நாஞ்சில் விஜயன், சோபியா நடிப்பில் உருவாகி வரும் படம், ‘பஜனை ஆரம்பம்’. இப்படத்தை பல்வேறு இயக்குநர்களிடம் திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்கள் எனப் பணியாற்றிய ஆனந்த் தக்ஷிணாமூர்த்தி எழுதி இயக்குகிறார். சென்னை, மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், இருட்டு அறையில் முரட்டுக்குத்து என்ற ஆபாச படத்தின் போஸ்டர் போன்று அனைவரையும் முகம் சுழிக்கும் வகையில், சென்னையில் வெளியிடப்பட்டது.

இந்த போஸ்டர் குறித்து இயக்குநர் ஆனந்த் தக்ஷிணாமூர்த்தி கூறியதாவது…

“பஜனை என்பது மக்களிடம் பரவலாக அறியப்பட்ட சொல் தான். ஒவ்வொரு கோயிலிலும் இன்று ஆறு முப்பது மணிக்கு பஜனை ஆரம்பம் என்று பார்த்திருக்கிறோம் .சாதாரணமாக அதைக்  கடந்து போய் இருப்போம். அந்த வகையில் தான் படத்தின் தலைப்பை வைத்திருக்கிறோம்.ஒரு ஈர்ப்புக்காகவும் பரபரப்புக்காகவும் கவனம் பெற வேண்டும் என்றும் தான் இந்தப் பெயரை வைத்துள்ளோம் .இந்தப் பட போஸ்டரில் 10 பெண்களுக்கு ஒருவர் தாலி கட்டுவது போல் ஒரு தோற்றம் உள்ளது. ஜப்பானில் அப்படி ஒருவர் ஒரே ஆண்டில் 10 பேரை மணம் செய்து கொண்டு அவர்களைத் தாயாக்கி இருக்கிறார்.இது ஒரு திருமண சாதனையாக பேசப்படுகிறது. பத்திரிகையில் வந்துள்ள இந்தச் செய்தியை படத்தில் வரும் காமெடியன் படிக்கிறார். அப்போது அதைக் கேட்கிற கதாநாயகன் நாம் அப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கிறார். அப்படி நமது கதாநாயகன் கற்பனை செய்து கனவு காண்பதாக வரும் காட்சியில்தான் இப்படி வருகிறது.இங்கே நாயகன் பல பெண்களுக்குத் தாலி கட்டிப் பைத்தியம் ஆகி தற்கொலை செய்து கொள்வது போல் தான் காட்சி வரும். மற்றபடி படத்தில் பெண்களை எந்த வகையிலும் தவறாக நான் காட்டவில்லை.படம் மெடிக்கல் மாஃபியா பற்றித்தான் முழுமையாகப் பேசுகிறது.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடச் சொல்லி பல்வேறு திரை உலக நண்பர்களிடம்  நான் வேண்டுகோள் வைத்தேன். ஆனால் யாரும் தலைப்பைப் பார்த்துவிட்டு வர மறுத்து விட்டார்கள். அனைவருக்கும் சொல்கிறேன் இது  ஆபாச படம் அல்ல. பெண்களைத் தவறாகச் சித்தரிக்கும் படமும் அல்ல. முகம் சுழிக்க வைக்கும் காட்சிகள் எதுவும் படத்தில் இருக்காது. இன்று நாட்டில் நடக்கும் பிரச்சினை பற்றிச் சொல்கிற படம் அவ்வளவுதான்.அது என்ன பிரச்சினை என்று படத்தைப் பார்க்கும் போது தெரியும். தவறாக நினைப்பவர்கள் அனைவரும் படத்தைப் பார்க்கும் போது  தங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இது ஒரு முழு நீள என்டர்டெய்னர். முதற்கட்டமாக இதுவரை  17 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.இறுதிக் கட்டப் படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளோம்.

படத்தில் மூன்று பாடல்கள் உள்ளன இரண்டு சண்டைக் காட்சிகள் உள்ளன. சண்டை காட்சிகள் எல்லாம் ரியலாக இயல்பாக எடுக்கப்பட்டுள்ளன.படத்தின் பாடல்கள் வெளியீட்டின் போதும் படம் திரையிடும் முன்பும் படம் பற்றிய கூடுதல் விவரங்களை அளிப்போம்.அக்டோபரில் படம் வெளியாகும். அப்போது படத்தைப் பற்றிய அனைத்து தவறான அபிப்ராயங்களும் மாறிவிடும்.”என்றார்.