வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில், வீரசக்தி தயாரித்துள்ள திரைப்படம், கருமேகங்கள் கலைகின்றன. இதில் பாரதிராஜா, கவுதம் மேனன், யோகிபாபு, அதிதி பாலன், எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.வி.உதயகுமார், டெல்லி கணேஷ், பிரமிட் நடராஜன் ஆகியோர் நடித்திருக்க, தங்கர் பச்சான் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்திருக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
‘கருமேகங்கள் கலைகின்றன’வரும் செப்டெம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
அப்பாவிகளுக்கு தேவையான, நியாயமான சட்ட உதவிகளை செய்பவர், நீதிபதி ராமநாதன் (பாரதிராஜா), நேர்மையானவர். ஓய்வு பெற்ற பிறகு, தனது மகன் பிரபல வழக்கறிஞர் கோமகனுடன் (கவுதம் மேனன்) வாழ்ந்து வருகிறார். கோமகன், செல்வாக்கு மிக்க, நேர்மையற்ற அரசியல்வாதிக்கு (பிரமிட் நட்ராஜன்) சட்ட உதவிகள் செய்து அவருடைய அநியாயத்திற்கு துணை போகிறார். இதனால், கோபமடையும் ராமநாதன் கோமகனுடனான பேச்சினை நிறுத்திக்கொள்கிறார்.
கோமகன் தன்னுடைய தவறினை நினைத்து வருத்தப்படுவதுடன், அப்பா ராமநாதனின் 75 வது பிறந்த நாளன்று, மன்னிப்பு கேட்க முடிவு செய்கிறார். இந்நிலையில் ராமநாதனுக்கு பல வருடங்களுக்கு முன்னர் தனக்கு எழுதப்பட்ட ஒரு கடிதம் கிடைக்கிறது. ராமநாதன், அந்த கடிதம் எழுதியவரைத் தேடி வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார். கோமகன், ராமநாதனை தேடிச் செல்கிறார்.
இன்னொரு புறம் தனது மகளைத் தேடி வீரமணி (யோகி பாபு) செல்கிறார். இருவரும் ஒரு பிரயாணத்தில் சந்திக்கின்றனர். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் கதை.
ஓய்வு பெற்ற நீதிபதி, ராமநாதன் என்ற கதாபாத்திரத்திற்கு பாரதிராஜா, அப்படியே பொருந்தியிருக்கிறார். கூடவே அவருடைய உண்மையான வயதும், அந்த கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளது. குற்ற உணர்ச்சியால் உந்தப்பட்டு, நிர்க்கதியாய் விட்ட உறவுகளைத் தேடி அலையும் காட்சிகளில் பாரதிராஜா பரிதாபத்தினை ஏற்படுத்துகிறார். தன்னைத்தேடி வரும், யோகிபாபுவை பார்த்து ஒளியும் காட்சியிலும், அதிதி பாலனின் பார்வையை எதிர் கொள்ள முடியாமல் ஒளிந்து கொள்ளும் காட்சியிலும், மனதினை உருக்கி விடுகிறார்.
படிக்காத புரோட்டா மாஸ்டர் வீரமணி, என்ற கதாபாத்திரத்தை யோகிபாபு உயர்த்தி பிடித்திருக்கிறார். தனக்கு உரிமையில்லாத உறவுக்காக அவர் படும்பாடு, உறவுக்காகவும், அன்புக்காகவும் ஏங்கும் உன்னத மனிதனை கண்முன் நிறுத்துகிறார். யோகிபாபு, அவருடைய கதாபாத்திரத்தினை உணர்ந்து நிறைவாக செய்திருக்கிறார். அவரது நடிப்பின் மூலம் ஒரு நல்ல குணசித்திர நடிகரை வெளிக்காட்டியிருக்கிறார்.
சமுதாயத்தின் அவச்சொற்களினால் பாதிக்கப்பட்ட பெண்ணாக, கண்மணி கதாபாத்திரத்தில், அதிதி பாலன் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி, நடித்திருக்கிறார்.
க்ளைமாக்ஸில், அவருக்கும் பாரதிராஜாவுக்கும் நடக்கும் உரையாடல்கள் வீரியமானவை! அதிதி பாலன் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் பாரதிராஜாவை துளைத்தெடுக்கிறது!
உயிரைக் கையில் பிடித்தபடி, அம்பு படுக்கையில் கிடக்கும் பீஷ்மரை போல், அதிதி பாலன் கால்களில் விழுந்து பாரதிராஜா மன்னிப்பு கேட்டு கதறும் காட்சி கண்ணீரை வரவழைக்கிறது! இந்தக்காட்சியில் இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
கோமகன் என்ற பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் அளவான, சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.
பாரதிராஜாவின் நண்பர்களாக டெல்லி கணேஷ், எஸ் ஏ சந்திரசேகர், குழந்தை நட்சத்திரமாக சாரல் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிறுமி என, படத்தில் நடித்துள்ள அனைவருமே கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி நடித்துள்ளனர்.
மனிதர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்யும் தவறுகள், பிறரை எப்படி காயப்படுத்துகிறது. என்பதை, உணர்வுகளின் குவியலாய் அழகியலோடு சொல்லியிருக்கிறார், இயக்குநர் தங்கர் பச்சான்.
முதல் முறையாக இயக்குநர் தங்கர் பச்சான், ஜிவி பிரகாஷ் இணைந்துள்ளனர். ஜிவி பிரகாஷின் பின்னணி இசையும், பாடல்களும், காட்சிகளை மேம்படுத்துகிறது.
கவிப்பேரரசு பாடல் வரிகளை ரசிக்க முடிகிறது. ‘மன்னிக்க சொன்னேன்’ பாடலில் சின்ன சின்ன சபலத்தில் வாழ்ந்தாலே… அவலத்தில் அடிவாங்கும் வாழ்க்கை… போன்ற எளிமையான வரிகள், காட்சிகளுக்கு ஆழமானவை!
ஒளிப்பதிவாளர் என்கே ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சி காட்சிகளுக்கு ஏற்றபடி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
தொடர்ந்து சமுதாயத்திற்கு ஊறு விளிவிக்காத படங்களாக கொடுத்துவரும் தங்கர் பச்சானின் மற்றொரு உன்னதமான படைப்பு, ‘கருமேகங்கள் கலைகின்றன’.
ஊருக்கெல்லாம் நியாயமான தீர்ப்பு சொன்ன நீதிபதி, அவர் செய்த குற்றத்திற்கு என்ன தண்டனை கிடைத்தது? படத்தை பாருங்கள். அப்பாவின் மேல் காதலும் வரும், மோதலும் வரும்!