பாலாஜி வேணுகோபால் எழுதி இயக்கியுள்ள திரைப் படம், ‘லக்கி மேன்’. இதில் யோகி பாபு, ரேச்சல் ரெபேக்கா, வீரா, அப்துல், கௌதம் சுந்தர்ராஜன், ஹலோ கந்தசாமி, ராகுல் தாத்தா, பிரதீப் கே விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம். ‘லக்கி மேன்’.
அன்றாட, அடிப்படைத் தேவைகளுக்கே அந்தர் பல்டி அடிக்கும், சாமனியன் யோகி பாபு. அதிர்ஷ்டம் கெட்ட மனிதர். ரியல் எஸ்டேட் புரோக்கராக வேலை செய்து வருகிறார். மனைவி, மகனுடன் வசித்து வரும் அவருக்கு சிட் ஃபண்ட் கம்பெனியில் நடக்கும், அதிர்ஷ்ட குலுக்கலில் கார் பரிசாக விழுகிறது. அந்தக்காரை விற்றுவிட்டு கடன்களை அடைத்து, புதிய தொழில் தொடங்க வற்புறுத்துகிறார் அவரது மனைவி ரேச்சல் ரெபேக்கா. வாழ்க்கையில் முதன் முதலாக அதிர்ஷ்டம் கார் மூலமாக தன் வாழ்க்கையில் வந்ததாக நினைத்து அதை விற்க மறுக்கிறார். வசதிகள் அவரைத்தேடி வருகிறது.
இந்நிலையில் நேர்மையான போலீஸ் அதிகாரியான வீராவுக்கும், யோகிபாபுவுக்கும் அடுத்தடுத்து சில உரசல்கள் ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து வீராவின் ஈகோ, யோகிபாபுவை பழிவாங்க தூண்டுகிறது. இதனால் யோகிபாபுவின் காரில் போதைப்பொருள் இருப்பதாக கூறி காரினை பறிமுதல் செய்கிறார், வீரா. மீண்டும் பழைய நிலைக்கே வந்துவிடுகிறார், யோகிபாபு. இதையடுத்து என்ன நடக்கிறது? என்பது தான், லக்கிமேன் படத்தின் கதை.
துரதிர்ஷ்டம் துரத்தி.. துரத்தி… அடிக்கும் அப்பாவி மனிதனாக யோகிபாபு, சிறப்பாக நடித்திருக்கிறார். தன்னுடைய வழக்கமான நக்கல் பேச்சின் மூலம் ரசிகர்களை சோர்வடையாமல் பார்த்துக் கொள்கிறார். ரியல் எஸ்டேட் புரோக்கராக வரும் யோகி பாபுவும், கார் ட்ரைவிங் ட்ரைனராக வரும் ஆர்.எஸ்.சிவாஜியும் சேர்ந்து கொண்டு சிரிக்க வைக்கிறார்கள்.
யோகிபாபுவின் மனைவியாக நடித்திருக்கிறார், ரேச்சல் ரெபேக்கா. பொருளாதாரத்தின் அடித்தட்டில் வசிக்கும் பெண்களை கண்முன் நிறுத்துகிறார். ஆனால் அவரது ஒரே மதிரியான ரியாக்ஷன் சற்று அலுப்பினை ஏற்படுத்துகிறது.
யோகிபாபு – ரேச்சல ரெபேக்கா தம்பதியினரின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் சாத்விக்கும் கவனம் ஈர்க்கிறான்.
இன்ஸ்பெக்டராக நடித்துள்ள வீரா, நன்றாக நடித்திருந்தாலும் அவரது பாத்திரம் சரியாக வடிவமைக்கப்படாததால், குழப்பம் ஏற்படுகிறது. நேர்மையான இன்ஸ்பெக்டராக சித்தரிக்கப்பட்ட பாத்திரம் சில இடங்களில் மோசமான சைக்கோவாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
யோகி பாபுவின் நண்பராக வருபவர், பல இடங்களில் ஓவராக நடித்திருக்கிறார்.
ரியல் எஸ்டேட் ஓனராக வரும் அமீத் சிறப்பாக நடித்திருக்கிறார்.
இவர்களுடன், கௌதம் சுந்தர்ராஜன்,
ஹலோ கந்தசாமி, ராகுல் தாத்தா, பிரதீப் கே விஜயன், சுகாசினி குமரன், ஜெயக்குமார், விலங்கு ரவி, அஜித் கோஷி, டெம்பிள் மங்கி தாவூத் என அனைவரும் குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.
சந்தீப் கே விஜய்யின் ஒளிப்பதிவும், ஷான் ரோல்டனின் இசையும் ஒகே!
அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் பற்றி சொல்லியிருக்கும் இயக்குநர் பாலாஜி வேணுகோபால் அதை இன்னும் கொஞ்சம் தெளிவாக சொல்லியிருக்கலாம்.