மலையாளம் மற்றும் தமிழில் உருவாகியுள்ள ஆக்ஷன் த்ரில்லர் சமாரா. இதில்,பரத் மற்றும் ரஹ்மான் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்க, இவர்களுடன் சஞ்சனா திபு, பினோஜ் வில்யா, ராகுல் மாதவ், கோவிந்த் கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமாரா படத்தை சார்லஸ் ஜோசப் இயக்கியுள்ளார்.
இப்படம்,முழுக்க முழுக்க காஷ்மீரில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் அனு ஆயுதங்களுக்கு பிறகு, பயோ வார் எனப்படும், உயிரியல் நச்சுப்போரினை பற்றியது தான், இப்படத்தின் கதைக்களம்.
இந்திய எல்லைப் பகுதியான ஹிமாச்சல் பகுதியில் சில மனித உடல்கள் சிதறிக்கிடக்கிறது. இதற்கான காரணத்தினை கண்டுபிடிக்க வருகிறார், காவல் துறை அதிகாரி ரகுமான். இந்த விசாரணை நடந்து கொண்டிருக்கும் வேளையில், அகோரமான ஒரு ராணுவ அதிகாரியை பார்க்க வரும் ஒரு பெண் ஒரு பள்ளத்தில் விழுகிறார். அவர் விழுந்த இடத்தில், ஏற்கனவே இறந்த ஒருவரின் உடலில் உள்ள ரத்தம் இவர் மீது படுகிறது. அப்போது அங்கே வரும் ரகுமான் அந்த உடலை பரிசோதிக்கும் போது, வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது. அந்த வைரஸ் மனிதர்கள் மூலம் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அந்த பெண் தனிமை படுத்தப்படுகிறார். இதன் பிறகு, என்ன நடந்தது? என்பதை சற்று குழப்பமான சுவாரசியமான திரைக்கதை மூலம் சொல்லியிருக்கிறார், இயக்குனர் சார்லஸ் ஜோசப்.
காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கும் ரகுமான், தன்னுடைய கதாபாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்.
சஞ்சனா திபு, அழகாக இருக்கிறார். அவரது உடலில் வைரஸ் பரவியவுடன், அவர் தனது கதாபாத்திரத்தினை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். அவரது தந்தையாக நடித்திருக்கும், பினோஜ் நடிப்பும் பாராட்டும் படி இருக்கிறது.
டாக்டராக நடித்திருக்கும் பரத், வைரஸை பற்றி விளக்கும் போது திகில் ஏற்படுத்துகிறது. அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் குரல் அவருக்கு மேட்ச் ஆகவில்லை.
ஹிமாச்சல் பகுதியின் அழகினையும், காட்சிகளுக்கு வலு சேர்க்கும் கோணங்களையும் ஒளிப்பதிவின் மூலம் பார்வையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுத்திருக்கிறார், ஒளிப்பதிவாளர்,சினு சித்தார்த்.
தீபக் வாரியரின் பின்னணி இசை, காட்சிகளை மேம்படுத்தியிருக்கிறது. இசை, ஒளிப்பதிவு இரண்டுமே படத்தின் பலம்.
வித்தியாசமான கதையை யோசித்தவர்கள் திரைக்கதையை எளிதில் புரியும்படி உருவாக்கியிருக்கலாம்.
நாட்டுக்காக பினோஜ் செய்யும் செயல், பாராட்டத்தக்கது. சூப்பர் க்ளைமாக்ஸ்!
சமாரா – சல்யூட்!