ரசிகர்களின் மனம் கவர்ந்த குணச்சித்திர நடிகை, லிசி ஆண்டனி!

சமீபத்திய தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில், தன்னுடைய நடிப்பு திறமையால், தனித்து தெரியும் நடிகை லிசி ஆண்டனி  திரையுலகில் 10 வருடத்தை கடந்திருக்கிறார். தான் ஏற்கும் ஒவ்வொரு பாத்திரத்திலும் அசத்தி வரும் லிசி, தற்போதைய ப்ளூஸ்டார் திரைப்படத்தில் அம்மாவாக கலக்கியிருக்கிறார். மொத்தப்படத்திலும் கவனம் ஈர்க்கும் அவரது நடிப்பிற்கு, பல இடங்களிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியான தங்க மீன்கள் படம் மூலம் அறிமுகமானவர் லிசி ஆண்டனி. முதல் படத்திலேயே நடிக்கத் தெரிந்த நடிகை என பெயரெடுத்தவர், தொடர்ச்சியாக பல வித்தியாசமான குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து, ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு  தனியிடம் பிடித்துள்ளார்.

தரமணி படத்திலும், பரியேறும் பெருமாள் படத்திலும் இவர் ஏற்ற பாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பேசப்பட்டது.  ஓடிடியில் வெளியான ‘ராங்கி’ படம் இவருக்கு வேறொரு முகம் தந்தது. பெயரே தெரியாமல் இவரை ரசித்துப்பாராட்டியவர்கள் அதிகம்.

பலர் ஏற்கத் தயங்கும் பாத்திரத்தைக் கூட, மிக அனாயசமாக ஏற்று, குணச்சித்திர நடிப்பில் கலக்கி வருகிறார் லிசி. இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் இவர் ஏற்ற அம்மா பாத்திரம், தமிழ் சினிமா இதுவரை கண்டிராதது. ரைட்டர், சாணி காயிதம், நட்சத்திரம் நகர்கிறது, கட்டா குஸ்தி என தொடர் வெற்றிப்படங்களில் இவர் ஏற்ற ஒவ்வொரு பாத்திரமும் வித்தியாசமானது.

துணை நடிகை, அம்மா என டிபிக்கலான பாத்திரங்களில் மட்டும் சிக்கிக்கொள்ளாமல் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டும் இவரது நடிப்பு, ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், விமர்சகர்களிடமிருந்தும் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. 2013 ல் அறிமுகமான இவர், தற்போது 10 வருடத்தை கடந்து தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவராக நிலைபெற்றுள்ளார்.

இந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் ப்ளூஸ்டார் படத்தில் ஒரு கீழ்தட்டு கிராமத்து அம்மாவை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் லிசி. ஏசுவின் வசனம் சொல்லிக்கொண்டு, மகன்களின் மேல் பாசத்தை கொட்டும் அம்மாவாக கலக்கியிருக்கும் லிசியின் நடிப்பு பல பக்கங்களிலிருந்தும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கும் அற்புதமான குணச்சித்திர நடிகை என விமர்சககர்கள் கொண்டாடி வருகிறார்கள். இப்போதைய ப்ளூஸ்டார் படம் இவரை தவிர்க்க முடியாத நடிகையாக தமிழ் சினிமாவில் நிலை நிறுத்தியுள்ளது.