சமூக பிரச்சனைகளை எடுத்துரைக்கும் திரைப்படங்கள் எப்போதும் திரைப்பட ஆர்வலர்களின் பாராட்டையும் அங்கீகாரத்தையும் பெறுகின்றன. மேலும், கடினமான பிரச்சனைகளை துணிச்சலாக எதிர்கொண்ட பல படங்கள், இயக்குநர்களின் அர்ப்பணிப்போடு பரவலான அளவில் பல தரப்பட்ட பார்வையாளர்களை சென்றடைந்துள்ளது. ஹேஷ்டேக் FDFS புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளரான திரவ்வின் வரவிருக்கும் திரைப்படமான ‘வெப்பம் குளிர் மழை’ ஒவ்வொரு பார்வையாளரிடமும் வலுவான உணர்ச்சிகளைத் தூண்டும் அத்தகைய சிக்கலை ஆராய்கிறது.
எம்.எஸ்.பாஸ்கர், திரவ், இஸ்மத் பானு, ராமா, மாஸ்டர் கார்த்திகேயன், தேவ் ஹபிபுல்லா, விஜயலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் திருமணமான தம்பதிகள் சந்திக்கும் இன்றைய சவால்களை மையமாகக் கொண்டது மற்றும் அதில் உருவாகும் சமூக தாக்கங்கள் மன, உடல் ரீதியாக உறுதியற்ற தன்மைகளை எப்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு உருவாக்குகின்றன என்றும் இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து கூறுகிறார். படத்தின் மையக்கரு மனித உணர்வுகளின் நுணுக்கங்களையும், இருப்பின் அடிப்படைத் தன்மையையும் ஆராய்வதோடு, சமீப காலங்களில் ஒரு குறிப்பிடத்தக்க சமூக நெருக்கடியாக உருவாகியுள்ள குழந்தைப் பெற்றுக் கொள்ளுதல் பற்றிய அழுத்தமான சிக்கலையும் கையாளுகிறது.
தேசிய விருது பெற்ற ‘குற்றம் கடிதல்’ படத்தில் உதவி இயக்குநராகவும், ‘மகளிர் மட்டும்’ மற்றும் ‘சுழல்’ வெப் சீரிஸில் இணை இயக்குநராகவும் பணியாற்றிய பாஸ்கல் வேதமுத்து இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
படத்தின் தயாரிப்பாளரான திரவ், கதையில் சிக்கலான முதன்மை கதாபாத்திரமான பெத்தபெருமாளாக நடிக்கிறார். திரவ் இதற்கு முன்பு நடிகர் கிஷோர் குமார் மற்றும் சுபத்ராவை வைத்து ஒரு இசை சார்ந்த படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அது விரைவில் வெளிவர இருக்கிறது.
இஸ்மத் பானு இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். அவர் ஏற்கனவே வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தின் ஒரு பாடலில் தோன்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். மேலும் ‘பொம்மை நாயகி’ மற்றும் ‘லேபிள்’ வெப் சீரிஸ் போன்ற படங்களில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த படத்தில், இன்றைய சமூகத்தில் உள்ள பெண்களின் பெரும் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் சிறப்பான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வரும் எம்.எஸ்.பாஸ்கர், ‘திரி அய்யா’ என்ற ஜாலியான கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்துள்ளார். தனது தனித்துவமான உடல் மொழியோடு கோபமான மாமியார் பாத்திரத்தை ரமா ஏற்று நடித்துள்ளார்.