‘மங்கை’ திரைப்படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்” – ‘கயல்’ஆனந்தி.!

ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் தயாரித்துள்ள திரைப்படம் ‘மங்கை’. இந்தப் படத்தில் ‘கயல்’ ஆனந்தி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் துஷி, பிக் பாஸ் புகழ் சிவின், ராம்ஸ், ஆதித்யா கதிர், கவிதா பாரதி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

மங்கை படத்தின் டிரைலரை நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் ஆர்யா, மற்றும் இயக்குநர் பா ரஞ்சித் ஆகியோர் இணையத்தளத்தில் வெளியிட்டனர்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர், நடிகைகள் மற்றும் பல முக்கிய திரைக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் படத்தின் நிர்வாக தயாரிப்பாளரான கார்த்திக் துரை பேசும்போது, “சின்ன பட்ஜெட்டில் ஒரு கார் பயணத்தின்போது நடக்கும் கதை என்று சொல்லித்தான் இயக்குநர் குபேந்திரன் காமாட்சி இப்படத்தை ஆரம்பித்தார். ஆனால் இது இன்று பெரிய பட்ஜெட் திரைப்படமாக மாறி நிற்கிறது.

தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் “என்ன சின்ன பட்ஜெட் என்று சொன்னீங்க.. இன்று ஷங்கர் சார் படம் போல் வளர்ந்து நிற்கிறது…” என்று கேட்டார். ஆனாலும் இன்றுவரை எதைக் கேட்டாலும் இல்லை என்றே சொல்லாமல் கேட்ட எல்லாவற்றையும் செய்து கொடுத்துள்ளார்.

நாயகி ஆனந்தி பிரமாதமாக நடித்துள்ளார். ஒரு நாள்கூட சொன்ன நேரத்திற்கு அவர் வராமல் இருந்ததில்லை. துஷி அமைதியான, அருமையான நபர். ராதிகா மேடத்திற்கு நன்றி. தீசன் மிகவும் நன்றாக இசை அமைத்துள்ளார். கதிர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

இந்த ‘மங்கை’ படம் மிகவும் அருமையாக வந்துள்ளது. பத்திரிகையாளர்களாகிய நீங்கள்தான் இப்படத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு உங்களுக்கு நன்றி..” என்றார்.

இயக்குநர் குபேந்திரன் காமாட்சி பேசும்போது,

“கடந்த பதினைந்து வருடங்களாக நான் இந்த இடத்திற்கு வர வேண்டும் என்று என்னைவிட அதிகமாக விரும்பியவர் என் மனைவிதான். கடுமையாக என்னுடன் சேர்ந்து உழைத்திருக்கிறார். பல கஷ்டங்களை இதற்காக அனுபவித்தவர். அதற்காக எனது முதல் நன்றியை அவருக்குச் சொல்லிக் கொள்கிறேன்.

என் கனவை நனவாக்கிய தயாரிப்பாளர் ஜாஃபர் அவர்களுக்கு நன்றி. ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் என்றால் ஜாஃபர், சலீம், மைதீன் மூவரும் சகோதரர்கள். அவர்களை ஒன்றாகப் பார்க்கும்போது ஒரு பாசிட்டிவிட்டி கிடைக்கும். அவர்கள் மூவருக்கும் என் வாழ்நாள் முழுவதற்குமான அன்பும், நன்றியும்.

பிறகு என் உடன்பிறவா சகோதரர் கார்த்திக் துரை சாருக்கு நன்றி. இன்று நான் இந்த இடத்தில் நிற்பதற்கு மிக முக்கிய காரணம் கார்த்திக்தான். படப்பிடிப்புத் தளத்தில் பல்வேறு பிரச்சனைகளை எங்களுக்காக சமாளித்தார். சினிமாத்தனம் இல்லாமல் பழக் கூடியவர் கார்த்திக் சார்.

நாயகி ஆனந்தி மேடத்திற்கு நன்றி. இந்தக் கதாபாத்திரத்தில் ஆனந்தி நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறியது ஜாஃபர் சார்தான். கதையைக் கேட்டுவிட்டு ஆனந்தி மேடம் 2 நிமிடங்கள் யோசித்தார். பிறகு இப்படத்தில் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று கூறினார். அவர் இல்லை என்றால் இப்படம் இந்த அளவிற்கு வந்திருக்காது. மிகவும் சின்சியரான ஆர்டிஸ்ட் அவர்.

சிவின் மேடம் நடித்த கதாபாத்திரம் பத்து நிமிடங்கள் வரும். ஆனால் இந்த கதைக்கு மிகவும் முக்கியமான கதாபாத்திரம். ‘லவ் டுடே’ ரீலிசுக்குப் பின்னர் ரொம்பவே பிஸியாக இருந்தாலும் தேதி ஒதுக்கி நடித்துக் கொடுத்த கதிருக்கு நன்றி. துஷ்யந்த் நல்ல நடிகர். நல்ல டிரைவரும்கூட.. ஏனென்றால் மலைப் பகுதியில் கார் ஓட்டுவதுபோல் பல காட்சிகள் இருந்தன. சைலண்டாக இருந்து காட்சிகளில் நடிப்பால் எமோட் செய்வார்.

கவிதா பாரதி சார் படப்பிடிப்பின்போது எனக்கு மிகவும் உதவியாக இருந்தார். அவரே ஒரு இயக்குநர் என்பதால் ஷூட்டிங்கில் எனக்கு பல ஐடியாக்கள் கொடுத்து உதவினார்.

எங்கள் நடன இயக்குநர் ராதிகா மாஸ்டருக்கு நன்றி. தீசன் இசையமைத்திருக்கிறார். நான்கு பாடல்களும் அருமையாக வந்திருக்கின்றன. மிகச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்து கொடுத்த எஸ்.ஜே. ஸ்டார் சாருக்கு நன்றி. எடிட்டர் பார்த்திபன் ஆண்டனிக்கு நன்றி. இணை இயக்குநர் விக்ரம் ஆரம்பத்தில் இருந்து என்னுடனே இருக்கிறார். அவருக்கு நன்றி.

இப்படம் கருத்து சொல்கிற, பெண்ணியம் பேசுகின்ற படம் என்று இல்லை. இது எளிய, நேர்மையான முயற்சி. இன்னும் சொல்லப் போனால் இது ஆண்களுக்கான படம். வயது வந்த எதிர்பாலின ஈர்ப்பு இருக்கிற ஆண்கள், பெண்கள் இருவருமே பார்க்க வேண்டிய படம்.

பத்திரிகை நண்பர்கள் எப்போதும் நல்ல கண்டண்ட் உள்ள திரைப்படங்களுக்கு ஆதரவு தருவார்கள். அந்த ஆதரவை எங்களுக்கும் தர வேண்டும். இதை உரிமையுடனும், அன்புடனும் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் வருகைக்கு நன்றி.” என்றார்.

பிக்பாஸ் புகழ் சிவின் பேசும்போது,

“பிக்பாஸ் நிகழ்விற்குப் பிறகு இதுதான் என் முதல் மேடை. முதலில் கதையைக் கேட்கும்போது எனக்கு மிகுந்த குழப்பம் இருந்தது. ஏனென்றால் என்னதான் எண்டர்டெயின்மெண்ட், பிசினஸ் என்று இருந்தாலும், அதைத் தாண்டி நமக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது என்று நான் நம்புகிறேன், அந்த பொறுப்பு இயக்குநருக்கும் இருந்ததை புரிந்து கொண்டேன். இந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததை பெருமையாக நினைக்கிறேன்.

தயாரிப்பாளர் ஜாஃபர் சாருக்கு நன்றி. கயல் ஆனந்தி ஒரு பர்ஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட். பேசிக் கொண்டே இருப்பார். ஆனால், “ஆக்ஷன்” என்று சொன்னதும் நடித்து தள்ளிவிடுவார்.” என்று பாராட்டினார்.

ஒளிப்பதிவாளர் எஸ்.ஜே.ஸ்டார் பேசும்போது,

“எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் ஜாஃபர் சார் மற்றும் இயக்குநர் குபேந்திரன் காமாட்சிக்கு நன்றி. இப்படம் ஒரு டிராவல் கதை. சவால் நிறைந்த திரைப்படம்.

அனைத்துக் கதாபாத்திரங்களும் பெரும்பாலும் 80 சதவீதம் காரில்தான் பயணிப்பார்கள். வெளிப்புற படப்பிடிப்பில் நிறைய தடைகள் இருக்கும். அந்த வகையில் எனக்கு தயாரிப்பாளர் மிகவும் உதவியாக இருந்தார்.

ஆனந்தி மற்றும் துஷி இருவரும் சிறப்பான ஒத்துழைப்பைக் கொடுத்தனர். இசையமைப்பாளர் நல்ல பாடல்களைக் கொடுத்திருக்கிறார். அவருக்கு நன்றி. அது போல் நடன இயக்குநர் சிறப்பான நடனத்தினை அமைத்துக் கொடுத்திருக்கிறார். அவருக்கும் நன்றி.

எடிட்டர் மற்றும் பிற தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இவற்றை எல்லாம் எங்களுக்கு சாத்தியப்படுத்திக் கொடுத்த கார்த்திக் துரை சாருக்கும் நன்றி.” என்றார்.

இசையமைப்பாளர் தீசன் பேசும்போது,

“கிடா’ படம் தான் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. அப்படத்தின் மூலமாகத்தான் இப்பொழுது எனக்கு பிற வாய்ப்புகள் வருகின்றன. கிடா பட டீமுக்கு நன்றி. இதற்கெல்லாம் காரணம் எங்கள் தளபதி கார்த்திக் துரை சார்தான். இயக்குநர் குபேந்திரன் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். அவருடன் பணியாற்றியது மிகவும் சந்தோஷமாக இருந்தது.” என்றார்.

நடன இயக்குநர் ராதிகா பேசும்போது,

“இந்த விழாவை நான் வெற்றி விழாவாகத்தான் கருதுகிறேன். இயக்குநர் குபேந்திரன் சார், தயாரிப்பாளர் ஜாஃபர் ஆகியோருக்கும், இப்படத்திற்குள் என்னை கொண்டு வந்த கார்த்திக் துரை சாருக்கும் நன்றி.

இப்படத்தில் வேலை செய்தது ஒரு நல்ல அனுபவம். இப்படத்தின் பாடல்கள் சூப்பராகவும் சவால் நிறைந்ததாகவும் இருந்தன. ஒளிப்பதிவாளர் ஸ்டார் பற்றி பேசியே ஆக வேண்டும். மிக வேகமாக வேலை செய்வார். இன்றுதான் அவர் பேசி நான் பார்த்திருக்கேன். இந்த டீம் சிறப்பான டீம். இவர்களின் வெற்றிக்கு என் வாழ்த்துகள்.” என்றார்.

இயக்குநரும், நடிகருமான கவிதா பாரதி பேசும்போது,

“இந்த நிகழ்விற்கு வந்திருக்கும் அனைவரையும் நான் மங்கை குழுவின் சார்பில் வரவேற்கிறேன். இந்த மேடையில் இயக்குநர் தன் மனைவியைப் பற்றிப் பேசியது ஆச்சரியமான, சந்தோஷமான தருணம்.

ஒரு இயக்குநர் காத்திருந்தே இயக்குநர் ஆக முடியுமா, இல்லை… சினிமாவை விட்டுவிட்டு வேறு தொழிலுக்கு சென்று விடுவாரா என்பது அவரின் மனைவியிடம்தான் இருக்கிறது. இப்படம் இயக்குநராக முயற்சிப்பவர்களுக்கும், அவர்களுக்கு ஊக்கமாக இருந்து வரும் மனைவிமார்களுக்கும் சமர்ப்பணம்.

சாவித்திரி, ஸ்மிதா பட்டேல், நந்திதா தாஸ், அர்ச்சனா வரிசையில் அழுத்தமான கதாபாத்திரத்திற்கு எப்போதும் தயாராக இருப்பவர் ஆனந்தி.” என்றார்.

நடிகர் ஆதித்யா கதிர் பேசும்போது,

“ஜாஃபர் சார், சலீம் சார் மற்றும் மைதீன் சார் மூவரையும் பார்க்கும்போது சமுத்திரம் படத்தில் சரத்குமார் சாரை அண்ணன் தம்பிகளுடன் பார்ப்பது போல் இருக்கும். எங்கள் அனைவரிடமும் ஜாலியாகப் பேசுவார்கள். இப்படம் சிறப்பாக வர என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.

ஒரு இயக்குநரின் 12 வருட கனவை நனவாக்கி இருக்கிறார்கள். அதற்காகவே அவர்களுக்கு நன்றி. எங்கள் இயக்குநர் குபேந்திரன் சார் இப்படத்தின் மூலம் வெற்றி பெற்றிருக்கிறார். கண்டிப்பாக அவர் மிகப் பெரிய இடத்திற்கு செல்வார். கார்த்திக் துரை சார் சிவன் கோவில் நந்தி மாதிரி. வாழ்வில் பிறரின் தரத்தை உயர்த்தி மகிழ்ச்சி கொள்பவர்.

ஆனந்தி நடித்த ‘பரியேறும் பெருமாள்’ படத்தை நான் அவருக்காகவே பத்து முறை பார்த்திருக்கிறேன். டப்பிங்கில்கூட எனக்காக சில நேரங்களில் விட்டுக் கொடுத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் பேசவே மாட்டார். ஆனால் அவரின் ப்ரேம்கள் பேசும். இசையமைப்பாளர் சிறப்பான பாடல்களை கொடுத்திருக்கிறார். அவருக்கும் பிற தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

நாயகன் துஷ்யந்த் பேசும்போது,

“பொதுவாக நான் நிறைய பேச மாட்டேன். என் குருநாதர் சசிகுமார் சாருக்கு நன்றி. ஈசன் படத்தில் அவர் என்னை அறிமுகப்படுத்தவில்லை என்றால் நான் இன்று இங்கு இல்லை. இப்படத்தின் படப்பிடிப்பை ஒரு நாயை வைத்துதான் துவங்கினோம்.

காரில் இரண்டு கேமராக்களை மாட்டி இருப்பார்கள். இதையும் பார்க்க வேண்டும்.. ரோட்டையும் பார்த்து கார் ஓட்ட வேண்டும். இதில் டயலாக்கை நினைவில் கொள்ள வேண்டும். உடன் நடிக்கும் நபர்களின் ரியாக்ஷன்களையும் கவனிக்க வேண்டும். இதை எல்லாம் கவனத்தில் கொண்டு நடித்த அனுபவம் சிறப்பாக இருந்தது. இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த அனைவருக்கும் நன்றி.” என்றார்.

தயாரிப்பாளர் ஜாஃபர் பேசும்போது,

“அமீர் அண்ணாவின் ‘இறைவன் மிகப் பெரியவன்’ படத்தின் மூலம் எங்கள் பயணம் துவங்கியது. ‘மங்கை’ எப்படி தொடங்கியது என்றால், குபேந்திரன் சார் முழு மனதுடன் எங்களோடு தொடர்பில் இருந்தார். அவரிடம் லோக்கேஷன் பார்த்துவிட்டு வரச் சொல்லி அனுப்பினோம். ஒரு வாரம் நேரம் கொடுத்தோம். ஆனால், மூன்று நாட்களில் முடித்துவிட்டு வந்துவிட்டார். அந்த டெடிகேஷன்தான் இன்று அவரை இயக்குநராக மாற்றி இருக்கிறது.

இயக்குநரும், தயாரிப்பாளரும் நல்ல புரிதலுடன் இருந்தால் சினிமாவில் எந்தப் பிரச்சனையும் வராது. இந்தப் படத்தை வரும் மார்ச் மாதம் வெளியிட முடிவு செய்திருக்கிறோம். அதற்குப் பின்னர் ‘இந்திரா’ திரைப்படமும் வரிசையில் இருக்கிறது.” என்றார்.

நடிகை ஆனந்தி பேசும்போது,

“இந்த விழாவில் நான் மிகவும் சந்தோஷமாகவும், புத்துணர்ச்சியோடும், பரவசத்துடனும் இருக்கிறேன். குபேந்திரன் சாரிடம் கதை பற்றி எதுவும் தெரியாமல்தான் கேட்டேன். கதையை கேட்டதும் கண்டிப்பாக இப்படத்தை தவறவிடக் கூடாது என்று நினைத்தேன்.

இப்படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ஏனென்றால் சில படங்கள்தான் நடிகர், நடிகைகளுக்கு பெயர் வாங்கிக் கொடுக்கும். இது அந்த மாதிரியான படம். இயக்குநர் எப்போதும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து யோசிப்பார். தயாரிப்பாளர் இயக்குநர் தரப்பில் இருந்து யோசிப்பார். இருவருக்குமான புரிதல் பார்க்கும்போதே அழகாக இருக்கும்.

துஷி கார் ஓட்டிக் கொண்டே அழகாக நடித்திருக்கிறார். ராதிகா மாஸ்டர் உடனான போர்ஷன் கலகலப்பாக இருந்தது. எங்கள் குழுவினர் அனைவருக்கும் நன்றி. மிகச் சிறந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். இது கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். என்றார்.