இயக்குனர் செல்வம் மாதப்பன் இயக்கத்தில் யாஷிகா ஆனந்த், ப்ரஜின், ஜார்ஜ் மரியன், முத்துக்குமார் , பாலாஜி, லொள்ளுசபா மனோகர், தர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘படிக்காத பக்கங்கள்’. செல்வம் மாதப்பன் இயக்கியிருப்பதோடு, முத்துகுமாருடன் இணைந்து ‘எஸ் மூவி பார்க்’ மற்றும் ‘பௌர்ணமி பிக்சர்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர். ஜெஸ்ஸி கிப்ட் இசையமைத்துள்ளார். டாலி ஒளிப்பதிவு செய்திருக்க, மூர்த்தி மற்றும் சரண் ஷண்முகம் எடிட்டிங் செய்துள்ளனர்.
க்ரைம் டிராமா த்ரில்லராக உருவாகியுள்ள படிக்காத பக்கங்கள் எப்படியிருக்கிறது?
பிரபல நடிகை ஶ்ரீஜா (யாஷிகா ஆனந்த்), படப்பிடிப்பிற்காக ஏற்காடு வருகிறார். அப்போது அவரை பேட்டி எடுக்க, டிவி ரிப்போர்ட்டர் ( முத்துக்குமார்) வருகிறார். பேட்டி சுமூகமாக போய்க் கொண்டிருக்கும் வேளையில், சர்ச்சைக்குரிய கேள்விகள் கேட்கப்பட்டு, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அடிதடியில் முடிகிறது. நடிகை ஶ்ரீஜா கடுமையாக தாக்கப்படுகிறார். அதன் பின்னர் நடிகையை மிரட்டி, டிவி ரிப்போர்ட்டர் அவரோடு உறவு கொள்ள முயற்சிக்கிறார். இதை தடுக்க வரும், ‘ஹோட்டல் பேரர்’ கொடூரமாக கொல்லப்படுகிறார். இதன் பிறகு நடிகையின் கதி என்ன? டிவி ரிப்போர்ட்டரின் நோக்கம் என்ன? என்பது தான், ‘படிக்காத பக்கங்கள்’ படத்தின் டிவிஸ்ட்டுக்கள் நிறைந்த திரைக்கதை!
காதலின் பெயரால் இளம் பெண்களை நம்ப வைத்து, அவர்களுடன் உறவு கொள்ளும் போது, எடுத்த வீடியோவை வைத்து, அரசியல் பெரும்புள்ளிகளுடனும், அதிகாரிகளுடனும் அவர்களை வலுக்கட்டாயமாக பயன்படுத்திக்கொள்வதே ஒரு கும்பலின் வேலை. பொள்ளாச்சி பாலியல் குற்றங்களின் பின்னணியை நினைவுபடுத்துகிறது.
நடிகை ஶ்ரீஜாவாக யாஷிகா ஆனந்த் சிறப்பான நடிப்பையும், கவர்ச்சியையும் தந்திருக்கிறார். அவருடைய கவர்ச்சியின் பிரதானமே படத்தை தாங்கிப் பிடித்துள்ளது.
நாயகனாக நடித்திருக்கும் பிரஜின், இடைவேளை நெருங்குவதற்கு முன் வருகிறார். அவருடைய கதாபாத்திரம் பெரிய அளவில் உதவில்லை என்றாலும் மோசமில்லை, என்ற அளவில் இருக்கிறது.
டிவி ரிப்போர்ட்டராக வரும் ‘சைக்கோ’ வில்லன் முத்துக்குமார் மிரட்டி இருக்கிறார். இவரைப்போலவே ஆதங்க பாலாஜி, தன்ஷிகா உள்ளிட்டோரும் கதாபாத்திரங்களுக்கேற்றபடி நடித்திருக்கின்றனர்.
இசையமைப்பாளர் ஜெஸ்ஸி கிப்ட் இசையமைத்துள்ளார். பின்னணி இசை பரவாயில்லை.
ஒளிப்பதிவாளர் டாலியின் ஒளிப்பதிவு, கதைக்கேற்றபடி அமைந்திருக்கிறது.
க்ரைம் டிராமா திரில்லருக்கு ஏற்றபடி, சில டிவிஸ்ட்டுக்களை அமைத்த, இயக்குநர் செல்வம் மாதப்பன், அதற்கான திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார். இன்னும் கவனம் செலுத்தியிருந்தால், ஒரு விறுவிறுப்பான படமாக அமைந்திருக்கும்.
‘படிக்காத பக்கங்கள்’ – இளம் பெண்கள் படிக்க வேண்டிய பக்கங்கள்.