வெடிகுண்டு, துப்பாக்கி சகிதமாக ராமராஜன், ஒரு தனியார் வங்கியை சிறைப்படுத்தி, தன்வசப்படுத்தி கொள்கிறார். இதை அறியும் போலீஸ் வங்கியை மீட்டு, அங்கிருக்கும் வங்கி பணியாளர்களையும் மக்களையும் விடுவிக்க முயற்சிக்கிறது. போலீசாருக்கும் ராமராஜனுக்கும் இடையே நடக்கும் பேச்சு வார்த்தையில், ராமராஜன் மிக எளிமையாண நிபந்தனைகளை விதிக்கிறார். இதனால், காவல் துறை உயரதிகாரியான கே எஸ் ரவிகுமார் குழப்பமடைகிறார். அதன் பிறகு, ராமராஜன் ஒரு தனியார் தொலைக்காட்சி மூலம் தான் யார்? எதற்காக வங்கியை சிறை பிடித்தேன், என மக்களுக்கும் போலீசாருக்கும் விளக்கமளிக்கிறார். இதுவே ‘சாமானியன்’.
தமிழ்சினிமாவில் 90 களில் கொடிகட்டி பறந்த மக்கள் நாயகன் ராமராஜன், ஒரு பெரிய விபத்திற்கு பிறகு கதையின் நாயகனாக களமிறங்கியிருக்கிறார். வழக்கமான கமர்ஷியல் நாயகனாக அல்லாமல், மக்களுக்கு மெசேஜ் சொல்லும் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். அவருடைய வயதிற்கேற்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆங்காங்கே இடம்பெறும் அவருடைய பழைய பாடல்களும், அவர் பேசும் வசனங்களும் கை தட்டல்களை பெறுகிறது. இயக்குநர் ராகேஷ், ராமாராஜனை கதைக்குள் கச்சிதமாக பொருத்தியிருக்கிறார்.
ராமராஜனுக்கு பக்கபலமாக இருக்கும், அவரது நண்பர்களாக நடித்திருக்கும், ராதாரவி மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் இருவரும் கதைக்கும் பக்க பலமாக இருக்கிறார்கள்.
ராமாராஜனின் மகளாகவும் லியோ சிவகுமாரின் மனைவியாகவும் நடித்திருக்கும் லக்ஷா சரண், சிறப்பாக நடித்திருக்கிறார். சொந்த வீடு வாங்கி சந்தோஷமாகவும், பிறகு கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாமல் தவிக்கும் காட்சிகளிலும் மாறுபட்ட நடிப்பினை கொடுத்திருக்கிறார். லியோ சிவகுமாரும் கதாபாத்திரம் உணர்ந்து நடித்துள்ளார். வங்கியின் மேனேஜர் போஸ் வெங்கெட், அவரை அவமானப்படுத்தும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
வங்கி அதிகாரியாக நடித்திருக்கும் போஸ் வெங்கட், கட்டுமான நிறுவனத்தின் அதிபராக நடித்திருக்கும் மைம் கோபி, காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார், தொலைக்காட்சி நிருபராக நடித்திருக்கும் அபர்ணதி, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கஜராஜ், ஸ்ருமதி வெங்கட், வினோதினி, தீபா ஆகியோர் தங்களது கதாபாத்திரத்திற்கேற்றபடி நடித்துள்ளனர்.
இளையராஜாவின் இசையில், அவர் பாடிய ஒரு பாடல் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசை பரவாயில்லை.
படத்தின் பெரும்பலவீனம், ஒளிப்பதிவாளர் சி.அருள் செல்வனின் ஒளிப்பதிவு தான். தேவையற்ற குளோசப் காட்சிகள் ரசிக்கும்படியில்லை. ராமராஜனுக்கு வைத்த காட்சிகளின் கோணங்கள் மிக மோசமாக இருக்கிறது. அவரை சிறப்பான கோணங்களில் காட்சிப்படுத்த முயலவில்லை என்பது பெரும் குறை.
சாதரண மக்களை பில்டர்ஸூம், பேங்கும் எந்த அளவுக்கு மோசமாக நடத்தி வருகிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளனர். பலருக்கு வங்கிகள் செய்யும் அடாவடிகள் தெரிந்திருக்கும். தனது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தினை மனதில் கொண்டு, கே.கார்த்திக் குமார் எழுதியிருக்கும் கதையை, இயக்குநர் ராகேஷ், குறிப்பிடும்படி படமாக்கியிருக்கிறார்.
நீண்டு செல்லும் படத்தின் காட்சிகளை குறைத்து, திரைக்கதையில் இன்னும் சுவாரசியத்தினை சேர்த்திருந்தால், இந்த சாமானியன் பிரமிக்க வைத்திருப்பான்.