அலைகற்றைகளின் அளவு அதிகரிக்க அதிகரிக்க, ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு குக்கிராமங்கள் வரை நீண்டது. பல தரப்பட்ட வயதினரும் அதை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். மேலும் இவர்கள் தெரிந்தோ தெரியாமலோ சமூக வலைதளங்களில் நடக்கும் குற்றச் செயல்களுக்கும் ஆட்பட்டுவிட்டனர். இதன் காரணமாக நடக்கும் ஒரு குற்றச்செயலையே ‘டோபோமைன் @ 2.22’ என்ற பெயரில் திரைப்படமாக்கியிருக்கிறார், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் திரவ்.
ஒரு அடுக்குமாடி குடியிருப்பு. அதில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பிரச்சினைகள். இங்கு வசிக்கும் ஒருவர் சரியாக 2.22 மணிக்கு கொல்லப்படுகிறார். ஏன் அப்படி என்பது தான், க்ரைம் த்ரில்லர் ‘டோபோமைன் @ 2.22’ படத்தின் கதை.
இயக்குநர் திரவ், மதுசூதனன் என்ற கதாபாத்திரத்தில் சூதாட்டகாரராக நடித்திருக்கிறார். இவரது கதாபாத்திரத்தின் வடிவமைப்பு ஒரு சிலர் சந்தித்த நிஜ கதாபாத்திரமாக இருக்கிறது. இந்த கதாபாத்திரத்தினை மிக இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
சந்தேக புத்தி கொண்ட காதலரின் தொல்லைக்கு ஆளாகும் கதாபாத்திரத்தில் நிகிலா. அவரது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை எளிதில் கவர்ந்து விடுகிறார்.
மகேஷ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சமூக வலைத்தளங்களில் பரிச்சயமான விஜய் மற்றும் அவரது மனைவியாக நடித்திருக்கும், விபிதா இருவரும் அவர்களாகவே நடித்துள்ளனர்.
இவர்கள் தவிர படத்தினில் நடித்த ராகவ், சாம்சன், சத்யா, சக்திவேலன் ஆகியோர் அனைவருமே குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் பிரித்வி ராஜேந்திரனின் ஒளிப்பதிவு, அலன் சோஜி இசை பரவாயில்லை.
எழுதி, இயக்கி, தயாரித்திருப்பதோடு பாடல்கள் எழுதி, படத்தொகுப்பும் செய்து முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் திரவ், முக்கியமான சமூக பிரச்சனையை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார். அது பாராட்டுக்குரியது.
‘டோபோமைன் @ 2.22’ – விழிப்புணர்வு கொடுக்கும் படம்.