சிறந்த இயக்குனர் விருது பெற்ற ”மண்” பட இயக்குனர் *புதியவன் ராசையா*வின் இயக்கத்தில் உருவாகியுள்ளது இப்படம். ஈழத்தில் போர் முடிவுறும் இறுதிநாட்களில் ஆரம்பிக்கும் இக்கதை, சமகால சூழலில் முன்னாள் போராளிகளும் மக்களும் சந்தித்துக் கொண்டிருக்கும் சொல்லத் துணியாத கருவை தெள்ளத் தெளிவாக நகர்த்தும் கதையாக ‘ஒற்றைப் பனை மரம்’ உருவாகியுள்ளது.
யதார்த்த நடிப்பு, இயல்பான காட்சியமைப்பு, இதயத்தை கனத்துப்போக வைக்கும் திருப்பங்கள் என கதைக்குள் அழைத்துச் சென்று, ஈழத்தில், கிளிநொச்சியிலுள்ள கிராமத்தில் வாழ வைத்து வதைத்து விடுகின்றன இப்படத்தில் வரும் காட்சிகள்.
உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார் அஷ்வமித்ரா. தமிழ் பாரம்பரிய வாத்தியங்களை மட்டுமே வைத்து இசையமைத்திருப்பது படத்திற்கு ஒரு உயிரோட்டமாக அமைந்துள்ளது. அதனாலேயே சிறந்த இசையமைப்பாளர் விருதையும் பெற்றிருக்கிறார்.
தேசிய விருது பெற்ற சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பையும், சர்வதேச விருது பெற்ற இலங்கை ஒளிப்பதிவாளர் மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவையும் மேற்கொண்டுள்ளனர்.
40 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி, சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 17 விருதுகளையும் குவித்திருக்கிறது.
ஒற்றைப் பனை மரம் திரைப்படத்தில் புதியவன் இராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், மாணிக்கம் ஜெகன், தனுவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்
RSSS பிக்சர்ஸ் சார்பில் எஸ் தணிகைவேல் தயாரித்த ஒற்றைப் பனை மரம், தமிழகம் முழுவதும் அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகிறது.