ராமலெட்சுமி புரொடக்ஷன்ஸ் மற்றும் அனுசுயா ஃபிலிம் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கலன்’. ‘ கிடுகு’ படத்தை இயக்கிய வீரமுருகன் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் அப்புகுட்டி, தீபா , யாசர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சம்பத் ராம், சேரன் ராஜ், மணிமாறன், ராஜேஷ், பீட்டர் சரவணன், வேலு, முகேஷ், மோகன், பாலா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
ஜெர்சன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஜெயக்குமார் மற்றும் ஜேகே ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். குருமூர்த்தி மற்றும் குமரி விஜயன் பாடல்கள் எழுதியுள்ளனர். திலகராஜன் அம்பேத் கலை இயக்குநராக பணியாற்ற, வெரைட்டி பாலா நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். விக்னேஷ் வர்ணம் மற்றும் விநாயகம் படத்தொகுப்பு செய்திருக்கிறார்கள். சவுண்ட் எஞ்சினியராக சந்தோஷ் பணியாற்ற, துணை இணை இயக்குநராக ஜெகன் ஆல்பர்ட். துணை இயக்குநராக பாலாஜி சாமிநாதன்,மகேஷ் மற்றும் பலர் பணியாற்றி உள்ளனர். பி.ஆர்.ஓவாக கார்த்திக் பணியாற்றுகிறார்.
‘கலன்’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி அக்டோபர் 19 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில், இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் அர்ஜுன் சம்பத், இயக்குநர்கள் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமார், செயலாளர் பேரரசு, தயாரிப்பாளர்கல் சங்க செயற்குழு உறுப்பினர் மற்றும் பி.ஆர்.ஓ சங்க தலைவர் விஜயமுரளி, பின்னணி பாடகர் மற்றும் இசையமைப்பாளர் அந்தோணிதாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.
இயக்குநர் வீரமுருகன் விருந்தினர்களை வரவேற்று பேசுகையில்,
அர்ஜுன் சம்பத் அண்ணனை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. கிடுகு படம் வெளியான போது என்னை அழைத்து பணம் கொடுத்தவர், துத்துக்குடியில் தியேட்டர் கிடைக்காமல் போன போது கல்யாண மண்டபம் ஒன்றை வாடகை எடுத்து அதில் என் படத்தை மக்களுக்கு இலவசமாக போட்டு காண்பித்தார், அவருக்கு நன்றி.
கிடுகு படம் முடிந்ததும், நாதேராம் கோட்ஸே என்ற படத்தை தொடங்கினேன், ஆனால் அந்த படத்திற்கு பெரிய எதிர்ப்பு வந்தது. அதனால் இந்த படத்தை உடனே தொடங்க வேண்டும் என்று முடிவு செய்தேன், இதற்கும் பல எதிர்ப்பு வந்தது. அப்போது குருமூர்த்தி அண்ணன் நான் உடன் இருக்கிறேன் உடனே தொடங்குங்கள், என்று கூறி படம் முடியும் வரை என்னுடன் இருந்தார். அவர் ராணுவத்தில் பணியாற்றுகிறார். பணிக்கு விடுமுறை போட்டுவிட்டு என் உடன் தான் பயணித்து வருகிறார் அவருக்கு நன்றி. இந்த படத்தின் இணை இயக்குநராக, உதவி இயக்குநராக பணியாற்றிய அனைவருக்கும் நன்றி.
இத்தனை பேருக்கு நான் நன்றி சொல்ல காரணம், யாருமே பணத்திற்காக பணியாற்றவில்லை. நான் கதை எழுதும் போது கூட, இது சாதாரண படமாக இருக்காது, அப்படி நீங்கள் எடுக்க மாட்டீர்கள், இருந்தாலும் உங்களுடன் பணியாற்றுகிறோம், என்று கூறி இரண்டு வருடங்களாக என்னுடன் பயணிக்கிறார்கள். அதனால், இவர்களுக்கு நன்றி சொல்வது என் கடமையாக கருதுகிறேன். கேமரா மேன், கலை இயக்குநர் என அனைவருக்கும் நன்றி. காயத்ரி ஜி அனைத்து காட்சிகளையும் ஒரே டேக்கில் முடித்தார். அவரும், தீபா அக்காவும் இணைந்து நடித்த காட்சிகள் சிறப்பாக இருக்கும், அவருக்கு நன்றி. சம்பத் ராம் அண்ணனுக்கு நன்றி, யாசர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கூறி, அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்.” என்றார்.
இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில்,
“கலன் சிறு திரைப்படமாக இருக்கலாம், அனைவரும் புதியவர்களாக இருக்கலாம், ஆனால் சிறப்பான படமாக இருக்கும் என்பது பாடல்கள் மற்றும் டிரைலரை பார்த்த போதே தெரிகிறது. இயக்குநர் சங்கத்தில் வீரமுருகன் உறுப்பினர் இல்லை என்று சொல்கிறார். நீங்கள் விரைவில் உறுப்பினராக வேண்டும். அப்போது தான் உங்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும். இந்த படத்தை வாழ்த்த வந்தது பெருமையாக இருக்கிறது. இந்த படத்தின் டிரைலரை பார்க்கும் போது, சாமி படமாக மட்டும் இன்றி சமூக படமாகவும் இருக்கிறது. தற்போதைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி கொண்டிருக்கிறார்கள். அதை மையப்படுத்திய இந்த படம் நிச்சயம் நன்றாக வந்திருக்கும் என்று நம்புகிறேன்.
தப்பு செய்தால் உங்களை இறைவன் தண்டிப்பார், என்ற நம்பிக்கையை உருவாக்கி வைத்திருக்கும் நம் முன்னோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இறைவன் இருக்கிறானா? என்பதை ஆராய்வதை விட, இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையில் தான் இந்த உலக மக்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள், என்று அவர் சொல்வது போல் அந்த படம் முடியும். எனவே, இறை நம்பிக்கை நம் வாழ்க்கையில் மிக முக்கியம். அதை தான் அந்த ஹாலிவுட் படம் சொன்னது, இந்த படமும் சொல்கிறது. அதனால், கடவுள் இந்த வண்ணத்தில் இருப்பாரா, கடவுள் அங்கு இருப்பாரா, என்று நாம் தேட வேண்டாம். கடவுள் இருக்கிறார், என்ற நம்பிக்கையில் வாழ வேண்டும், அப்போது தான் குற்றங்கள் குறையும்.
தெய்வத்தின் சக்தி படத்தின் கிளைமாக்ஸில் காட்டுவார்கள் என்று நினைக்கிறேன், அந்த தெய்வ சக்தி இந்த படத்தின் வெற்றிக்கு துணையாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். ’கலன்’ சிறிய படமாக இருக்கலாம், இந்த அரங்கம் சிறியதாக இருக்கலாம், இங்கிருக்கும் கூட்டம் குறைவாக இருக்கலாம், ஆனால் இதன் வெற்றி மிகப்பெரியதாக இருக்கும். ஆன்மீகம் மற்றும் சமூக அக்கறையோடு உருவாகியிருக்கும் இந்த ‘கலன்’ மிகப்பெரிய வெற்றியை கொண்டு வந்து சேர்க்கும், என்று கூறி படக்குழுவினரை வாழ்த்துகிறேன்.” என்றார்.
நடிகர் அப்புக்குட்டி பேசுகையில்,
“கலன் படத்தில் நடித்தது மகிழ்ச்சி. மேடையில் இருக்கும் அனைத்து பெரியவர்களுக்கும் நன்றி. இந்த படத்தில் நான் நடிப்பதற்கு மிக முக்கியமான காரணம் மணிமாறன் அண்ணன் தான். ஒரு நாள் இயக்குநரை சந்திக்க அழைத்து சென்றார், அப்போது இயக்குநர் கதை சொன்ன போது 20 நாட்கள் படப்பிடிப்பு இருக்கும், பெரிய சம்பளம் கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால், அவர் மொத்தமே 6 நாட்கள் தான் என்று சொன்னார். ஆனால், படத்தில் நீங்க தான் முக்கியமான வேடம், நாயகனின் தாய்மாமனாக நடிக்க வேண்டும், என்று சொன்னார். சரி ஆறு நாட்களாக இருந்தாலும் பெரிய சம்பளம் கொடுப்பார்கள், என்று நினைத்து போனேன். ஆனால் ஆறு நாட்களை நான்கு நாட்களில் முடித்து விட்டார். சிறிய படம் என்று சொன்னவர், படப்பிடிப்பில் இரண்டு கேமராக்களை வைத்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மிக வேகமாக படப்பிடிப்பு நடந்தது, பலர் வேகமாக எடுப்பார்கள் ஆனால் காட்சிகள் எதிர்பார்த்தது போல் வராது. இயக்குநர் வீரமுருகன் சார் காட்சிகளை வேகமாக படமாக்கினாலும், மிக தரமாக எடுத்தார். நான்கு நாட்கள் நான் நடித்தாலும் என்னை படம் முழுவதும் வருவது போல் காட்டியிருக்கிறார்கள், இது மிகப்பெரிய விசயம். வீரமுருகன் சாரின் வேகத்தை பார்த்து ஒரு கட்டத்தில் எனக்கு பயமே வந்துவிட்டது. அவர் மிக தைரியமான ஒரு மனிதர். தீபா எனக்கு அக்காவாக நடித்திருக்கிறார். இது வித்தியாசமான படம், இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி.” என்றார்.
இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் பேரரசு பேசுகையில்,
கலன் படம் குறுகிய நாட்களில் சிறப்பாக எடுத்திருக்கிறார்கள். அது இயக்குநரால் மட்டுமே சாத்தியமாகும், அந்த வகையில் இயக்குநர் வீரமுருகனுக்கு பாராட்டுகள்.
கலன் படத்தில் ஒரு நல்ல விசயத்தை சொல்லியிருக்கிறார்கள். இதை சாமி படம் என்ற முத்திரை குத்தாதீர்கள். இது சமூகத்திற்கான படம். இன்று நாடே போதையிலும், கஞ்சா பழக்கத்திற்கும் மூழ்கியிருக்கிறது, அதற்கு எதிரான படம். அதில் பக்தியை கலந்திருக்கிறார்கள். பக்தி என்பது நம் வாழ்க்கையில் மிக முக்கியமானது. இன்றும் தேர்வு எழுதும் போது பிள்ளையார் சுழி போடுகிறோம், அது நம்பிக்கை. அந்த நம்பிக்கையை தடுக்க வேண்டாம். நல்ல விசயம் நடக்கும் என்று தான் நம்புவோம். அதுபோல் தான் பக்தி. ஆன்மீக பற்று கொண்டவர்கள் ஆன்மீகவாதிகள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நாந்திகர்கள். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் ஒதுங்கிக் கொள்வார்கள், நம்பிக்கை உள்ளவர்கள் வணங்குகிறார்கள். இது சரி, ஆனால் நம்பிக்கை இருப்பவர்களை கேலி, கிண்டல் செய்வது போன்ற செயல்களை செய்பவர்கள் மனிதர்களே இல்லை.
இளையதலைமுறை போதைக்கு அடிமையாகி எப்படி சீரழிகிறார்கள் என்பதை இந்த படம் சொல்வதோடு, அத்தகைய செயலுக்கு காரணமானவர்களுக்கு எதிரான படம், இளைஞர்களை நல்வழி படுத்துவதற்கான படம், போதைக்கு எதிரான படம் மொத்தத்தில் முழுக்க முழுக்க நாட்டுக்கு தேவையான படம். படத்தில் ஒரு வசனம் வருகிறது, “தர்மம் எங்கிருக்கிறதோ, நீதி எங்கிருக்கிறதோ, அரம் எங்கிருக்கிறதோ, யாருக்குள் இருக்கிறதோ அவர்கள் தான் பெரியார், முத்துராமலிங்க தேவர்” என்று பலர் பெயர்களை சொல்கிறார்கள். பெயர்களே தேவையில்லை, யாரிடம் நீதி, தர்மம், நியாயம் இருக்கிறதோ, ஒட்டு மொத்த மக்களை யார் நேசிக்கிறாரோ அவர் தான் பெரியார், என்று கூறி படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன், நன்றி.” என்றார்.