துல்கர் சல்மான், மீனாட்சி செளத்ரி, ராம்கி, மானசா ,சூர்யா சீனிவாஸ், சர்வத்மான் டி.பானர்ஜி, சிறுவன் ரித்விக்,சச்சின் கெடேக்கர், சாய்குமார், டினு ஆனந்த், சிவ நாராயணா உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்துள்ள படம், லக்கி பாஸ்கர். வெங்கி அட்லூரி எழுதி இயக்கியிருக்கிறார்.
இப்படத்தினை ‘சித்தாரா என்டர்டெயின்மென்ட்’ – ‘ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்’ சார்பில் சூரிய தேவரா, நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா தயாரித்துள்ளனர். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்திருக்க, ஜி.வி .பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
1990 களில் நடக்கும் கதை. பிரபலமான பேங்க் ஒன்றில் கேஷியராக வேலை செய்து வரும் துல்கர் சல்மான், அன்றாடத் தேவைகளுக்கே அல்லல் பட்டு வருகிறார். அப்பா, அம்மா, தம்பி, தங்கை, மனைவி மற்றும் பிள்ளை என மொத்த குடும்பத்தின் பாரமும் இவரது தலையில். இதில், உறவினர்களின் ஏளனம், அன்றாட செலவுகளுக்கு திண்டாட்டம், கடன் கொடுத்தவர்களின் கெடுபிடி இவைகளெல்லாம் ஒன்று சேர்ந்து கழுத்தை நெருக்கிப் பிடிக்கிறது. இந்நிலையில், ராம்கி ஒரு இல்லீகல் பிசினஸ் செய்வதற்கு துல்கர் சல்மானை அனுகுகிறார். துல்கர் சல்மான் பேங்க் பணத்தில் கை வைக்கிறார். அதனால் பெரிய சிக்கலில் மாட்டுகிறார். இதற்கு பிறகு என்ன நடந்தது எனபது தான், ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் கதை.
படத்தின் நாயகனாக நடித்திருக்கும் துல்கர் சல்மானுக்கு சவாலான கதாபாத்திரம். குடும்பஸ்தராக, சிறுவனுக்கு அப்பாவாக நடித்திருக்கிறார். ஒவ்வொரு இக்கட்டான சூழலிலும் மனம் தளராமல் அடுத்து செயல்படுவது என பல்வேறு சூழலுக்கான பாவனைகளை அழகாக வெளிப்படுத்தி ரசிகர்களை கவருகிறார். பேங்கில் தனக்கு கிடைக்க வேண்டிய பதவி இன்னொருவருக்கு கொடுக்கப்பட்டபோது பொங்கி எழும் போதும், பிறகு மேனேஜரிடம் தனது குடும்ப சூழல் குறித்து கெஞ்சிக் கதறும் காட்சியிலும், பேங்க் சி இ ஒ விடம் கெத்து காட்டும் காட்சியிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
துல்கர் சல்மானின் மனைவியாக மீனாட்சி செளத்ரி. குடும்ப சூழலில் சிக்கித்தவிக்கும் குடும்பப் பெண்ணாக முக பாவனைகளை காட்சிக்கு ஏற்றபடி வெளிப்படுத்தி கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.
இவர்களைத்தவிர ஆண்டனி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராம்கி, மானசா ,சூர்யா சீனிவாஸ், சர்வத்மான் டி.பானர்ஜி, மற்றும் சிறுவர்களின் ஏக்கத்தினை சரியாக வெளிப்படுத்தி நடித்திருக்கும் சிறுவன் ரித்விக் உள்ளிட்டோரும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.
வங்கி மோசடிகள், பங்குச் சந்தை மோசடிகள் ஆகியவற்றை, லக்கி பாஸ்கர் படத்தின் மூலம் எளிய மக்களுக்குக் கடத்தியுள்ள, இயக்குநர் வெங்கி அதற்கான காட்சியமைப்புகளை இன்னும் சுவாரசியமாக, விறுவிறுப்பாக காட்டியிருக்கலாம். ஆரம்பம் முதல் இறுதி வரை மெதுவாகச் செல்கிறது.
ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவு பரவாயில்லை.
ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில், பாடல்களும் பின்னணி இசையும் கவரவில்லை!
ஒருவன் தன் குடும்ப வறுமையை போக்க நேர்மையான வழிகளே இல்லை. என்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ள கதை, ஆபத்தானது.
படத்தின் கதைக்கு லக்கி பாஸ்கர் பொறுத்தமில்லாதது!
மொத்தத்தில், ‘லக்கி பாஸ்கர்’ ஒரு ஃபிராடு பாஸ்கர்!