‘ஜெயம்’ ரவி, பிரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், பூமிகா சாவ்லா, வி டிவி கணேஷ், நட்டி, ராவ் ரமேஷ், அச்யுத் குமார், சீதா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், பிரதர். ராஜேஷ் .எம் எழுதி இயக்கியிருக்கிறார்
ஜெயம் ரவி, அவர்து கண்ணில் படும் தவறுகளையும், அநியாயங்களையும் எல்லா வழிகளிலும் எதிர்ப்பவர். இதனால், தனக்கோ தன்னுடைய குடும்பத்தினருக்கோ ஏற்படப்போகும் பின் விளைவுகளைப் பற்றி யோசிக்க மாட்டார். ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியரான ஜெயம் ரவியின் அப்பா அச்யுத் குமார் சொல்வதைக் கூட ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாத ஒரு கேரக்டர். இதனால் அவரது அப்பா பல இன்னல்களை அனுபவிக்கிறார்.
ஜெயம் ரவி திருந்துவதற்கு கடைசி வாய்ப்பாக, ஜெயம் ரவியின் அக்காவான பூமிகா சாவ்லா வீட்டிற்கு அனுப்பிவைக்கிறார் அப்பா அச்யுத் குமார்.
ஜெயம் ரவியின் அக்கா பூமிகா சாவ்லா, அவரை திருத்தும் முயற்சியில் தனது கணவன் நட்டி நட்ராஜூடன் ஏற்படும் மோதலில், வீட்டை விட்டு வெளியேற்றப் படுகிறார். ஜெயம் ரவி தனது குணத்தினை மாற்றிக் கொண்டாரா, பூமிகா சாவ்லா தனது கணவனுடன் மீண்டும் சேர்ந்தாரா? என்பது தான் பிரதர் படத்தின் கதை.
ஒரு நடுத்தர வர்க்கத்துக்கும், மேல்த்தட்டு வர்க்கத்துக்கும் இடையேயான குடும்ப மோதல், ஏற்படும் ஈகோ, அதைச் சார்ந்த உறவு சிக்கல்கள், அக்கா தம்பி பாசம், இவைகளை முன்னிறுத்தி ஒரு எளிமையான கதையை சொல்லியிருக்கிறார், இயக்குநர் எம்.ராஜேஷ். ஆனால், அனைத்து காட்சிகளும் யூகிப்பது போல் இருக்கிறது. வசீகர உடலமைப்பும், பொலிவான முகமும் கொண்ட, நன்றாக நடிக்கத் தெரிந்த ஜெயம் ரவி, மற்றும் நன்றாக நடிக்கத் தெரிந்த நடிகர்களை வைத்துக் கொண்டு செய்வதறியாது திணறியுள்ளார். கதாபாத்திர வடிவமைப்பிலும் போதிய தெளிவின்மைச் படத்தின் பலவீனமாக இருக்கிறது.
ஜெயம் ரவி, தனது வசீகரமான தோற்றத்தின் மூலம், படம் ஆரம்பம் முதல் இறுதி வரை தன்னால் முடிந்தவரை தாங்கிப் பிடித்திருக்கிறார். சில காட்சிகளில், தனது அபாரமான நடிப்பின் மூலம் கண்கலங்கச் செய்திருக்கிறார்.
ஜெயம் ரவியின் காதலியாக பிரியங்கா மோகன். ஓகேவான நடிப்பின் மூலம் வந்து செல்கிறார்.
அக்காவாக பூமிகா, அவரது கணவராக நட்டி, ஆங்கிலம் பேசும் வக்கீலாக சரண்யா பொன்வண்ணன், அவரது கணவனாக ‘கலெக்டர்’ ராவ் ரமேஷ், விடிவி கணேஷ் ஆகியோர் இயக்குநர் கொடுத்த வேலையினை செய்திருக்கின்றனர்.
இயக்குநர் எம் ராஜேஷ் படங்களில் இருக்கும் காமெடி, இந்தப்படத்தில் மிஸ்ஸிங்க்! அதோடு கூடுதலான சுவாரசியமான காட்சிகளை அமைத்திருக்கலாம்.
ஹாரிஸ் ஜெயராஜ் படத்தின் பலம். ‘மக்கா மிஷி’ பாடல் ஆட்டம் போட வைக்கிறது.
ஒளிப்பதிவாளர் விவேகானந்த் சந்தோஷத்தின் ஒளிப்பதிவும் படத்தின் பலம்.
மொத்தத்தில் ‘பிரதர்’ அக்கா தம்பி பாசத்தை முன்னிறுத்தும் குடும்ப பொழுது போக்கு படம்!